Published:Updated:

திண்டுக்கல்: அன்று 14… இன்று 10..! - தொடர்ந்து கைப்பற்றப்படும் நாட்டுத் துப்பாக்கிகள்!

கைப்பற்றப்பட்ட நாட்டுத் துப்பாக்கிகள்.
கைப்பற்றப்பட்ட நாட்டுத் துப்பாக்கிகள்.

கடந்த மாதம் 14 நாட்டுத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்ட நிலையில், தற்போது மேலும் 10 நாட்டுத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை அருகே உள்ளது சாணார்பட்டி கிராமம். இங்கு பரதன் என்பவர் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததற்காக கடந்த மாதம் போலீசார் அவரைக் கைதுசெய்தனர். இது தொடர்பாக விசாரணை செய்த போலீஸார், சாணார்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில், வன விலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கிகளை மக்கள் வைத்திருப்பதை அறிந்தனர். இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா. தொடர்ந்து வனத்துறை மற்றும் காவல்துறை சார்பில், கிராமங்களில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதால் ஏற்படும் பிரச்னைகள், சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே விழிப்பு உணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. மேலும், துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

கடந்த மாதம் கைப்பற்றப்பட்ட நாட்டுத் துப்பாக்கிகள்.
கடந்த மாதம் கைப்பற்றப்பட்ட நாட்டுத் துப்பாக்கிகள்.
திண்டுக்கல்: ஓடை அருகே கிடந்த 14 நாட்டுத் துப்பாக்கிகள்! -  அதிர்ச்சியில் காவல்துறை

கடந்த மாதம் 17-ம் தேதி, திண்டுக்கல் ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி வினோத் தலைமையிலான குழுவினர், சாணார்பட்டி அருகேயுள்ள தவசிமடைப் பகுதியில் ரோந்து சென்றபோது, கருந்தண்ணி ஓடை அருகே, 14 நாட்டுத் துப்பாக்கிகள் கேட்பாரற்றுக் கிடந்தன. அவற்றைக் கைப்பற்றிய போலீஸார், விசாரணை செய்துவந்தனர். இந்தநிலையில், தற்போது அதே பகுதியில் 10 நாட்டுத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

கைப்பற்றப்பட்ட நாட்டுத் துப்பாக்கிகள்.
கைப்பற்றப்பட்ட நாட்டுத் துப்பாக்கிகள்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மலைப்பகுதி மற்றும் அதை ஒட்டியிருக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் நாட்டுத் துப்பாக்கிகளை பயன்படுத்துவது சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. இது தொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் கூறும்போது, ``நத்தம் அருகேயுள்ள பெரியமலையூர், கரந்தமலை, சின்னமலையூர், கொடைக்கானல் அருகேயுள்ள மண்ணவனூர், பூண்டி, கூக்கால், தாண்டிக்குடி மேலும், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பாச்சலூர் மற்றும் மாவட்டத்தின் பல இடங்களில் மக்கள் நாட்டுத் துப்பாக்கிகளைப் பயன்படுத்திவருவதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதன் அடிப்படையில் விசாரணை செய்துவருகிறோம். விரைவில் துப்பாக்கிக் கலாசாரம் ஒழிக்கப்படும்” என்றனர்.

`தலைதூக்கும் நாட்டுத் துப்பாக்கி கலாசாரம்!' - போலீஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த அடுத்தடுத்த வழக்குகள்
அடுத்த கட்டுரைக்கு