Published:Updated:

பிஸ்கட் போட்டதும் மயங்கிய ஜாக்கி! - சிசிடிவி-யில் சிக்கிய நூதன கடத்தல்

சென்னை தி.நகரில், வீட்டின் முன் நின்றுகொண்டிருந்த நாய் ஜாக்கியை காரில் கடத்திச்சென்றவர்களை போலீஸார் சிசிடிவி கேமரா மூலம் தேடிவந்த சமயத்தில், திருடியவர்களே போலீஸ் நடவடிக்கைக்குப் பயந்து மீண்டும் ஜாக்கியை திரும்பக் கொண்டுவந்து விட்டுச் சென்றுள்ளனர்.

நாய் ஜாக்கி
நாய் ஜாக்கி

சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையைச் சேர்ந்தவர், சரத் ரவி (25). ஐடி நிறுவனத்தில் வேலைபார்த்துவருகிறார். இவர், தன்னுடைய வீட்டில், `கோல்டர் ரெட்ரீவர்' என்ற வகையைச் சேர்ந்த நாயை வளர்த்துவருகிறார். அதற்கு, ‘ஜாக்கி’ எனப் பெயர் வைத்திருந்தார். ஜாக்கி, கோல்டன் நிறத்தில் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

கடந்த 26-ம் தேதி இரவு, வீட்டின் முன் ஜாக்கி நின்று கொண்டிருந்தது. அதன்பிறகு அதைக் காணவில்லை. இதனால் சரத் ரவி, ஜாக்கியை அந்தப் பகுதி முழுவதும் தேடினார். ஆனால் கிடைக்கவில்லை.

நாய் ஜாக்கி
நாய் ஜாக்கி

இதையடுத்து, பாண்டிபஜார் காவல் நிலையத்தில் சரத் ரவி புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸார் ஜாக்கியைத் தேடிவருகின்றனர். இந்த நிலையில், சரத் ரவியின் வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்தனர். அப்போது, ஜாக்கியை திருடிச்செல்லும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்தன. ஜாக்கியைத் திருடியவர் குறித்த விவரங்களை போலீஸார் சேகரித்துவருகின்றனர்.

இதுகுறித்து பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``சம்பவத்தன்று வீட்டின் முன் ஜாக்கி நின்றுகொண்டிருந்தபோது அதன் அருகே கால்டாக்ஸி ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. அதில் வந்த நபர், வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்துள்ளார். அந்த நபர், ஜாக்கிக்கு பிஸ்கட்டை போடுகிறார். அதை ஜாக்கியும் சாப்பிடுகிறது. அந்தக் காருக்குள் பெண் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவரும் ஜாக்கிக்கு உணவு கொடுக்கிறார். அதை சாப்பிட்டதும் ஜாக்கி மயங்கிவிழ, காரில் அதை கடத்திச் செல்கின்றனர். காரின் பதிவு நம்பர் அடிப்படையில் விசாரணை நடந்துவருகிறது" என்றார்.

நாய் ஜாக்கி
நாய் ஜாக்கி

சரத் ரவி கொடுத்த புகாரில், `காணாமல் போன ஜாக்கிக்கு 5 வயதாகுகிறது. அதன் விலை 40 ஆயிரம் ரூபாய்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சரத் ரவியின் குடும்ப நண்பரான அப்துல்ரஹிமிடம் பேசினோம். ``2 மாத குட்டியிலிருந்து ஜாக்கியை சரத் ரவி வளர்த்துவருகிறார். எங்கள் வீட்டிலும் 4 நாய்களை வளர்த்துவருகிறேன். சம்பவத்தன்று இரவு, ஜாக்கியை திட்டமிட்டு காரில் வந்தவர்கள் திருடிச்சென்றுள்ளனர். நாங்கள் 'ஜாக்கியைக் காணவில்லை' என்று புகார் கொடுத்ததும் இன்று அதிகாலை 3 மணியளவில் ஜாக்கியை வீட்டின் அருகில் விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். ஜாக்கியைத் திருடியவர்கள் யார் என்பதை போலீஸார் கண்டுபிடிக்க வேண்டும்.

மேலும், சென்னையில் விலை உயர்ந்த நாய்களைத் திருடும் கும்பல் செயல்பட்டுவருகிறது. இந்தக் கும்பல், 100-க்கும் மேற்பட்ட நாய்களைத் திருடியுள்ளது. ஆனால், பலர் காவல் நிலையங்களில் புகார் கொடுப்பதில்லை. ஜாக்கியை நாங்கள் தீவிரமாகத் தேடியதும்தான் அதைத் திருடியவர்கள் பயந்துபோய்விட்டனர். ஜாக்கி திரும்பக் கிடைத்ததில் சரத் ரவியும் நானும் மகிழ்ச்சியாக உள்ளோம். ஜாக்கியை திரும்ப விட்டுச்சென்றவர்களின் விவரங்கள் நிச்சயம் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கும். அதை போலீஸார் ஆய்வுசெய்தாலே, ஜாக்கியைத் திருடியவர்களை எளிதில் கண்டுப்பிடித்துவிடுவோம்" என்றார்.

ஜாக்கியைத் திருடும் சிசிடிவி பதிவு
ஜாக்கியைத் திருடும் சிசிடிவி பதிவு

கடந்த 26-ம் தேதி இரவு திருடப்பட்ட ஜாக்கி, இன்று அதிகாலை 3 மணியளவில் திரும்பக் கிடைத்துள்ளது. இந்த இடைப்பட்ட நாள்களில் ஜாக்கி எங்கிருந்தது என்று தெரியவில்லை. அதைத் திருடியவர்கள் ஏன் திரும்ப அதே இடத்தில் விட்டுச் சென்றார்கள் என்று போலீஸாருக்கும் புகார் கொடுத்தவர்களுக்கும் தெரியவில்லை. இருப்பினும், ஜாக்கி கிடைத்த மகிழ்ச்சியில் சரத் ரவி மற்றும் அவரின் நண்பர்கள் உள்ளனர்.