Published:Updated:

`டாட்டூ ஆர்டிஸ்ட்' பிங்கியைக் கொலை செய்தது ஏன்? - சூப்பர்வைஸர் வாக்குமூலம்

எஸ்.மகேஷ்

சம்பவத்தன்று டாட்டூ ஆர்டிஸ்ட் பிங்கியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். அவரும் என்னை வீட்டுக்கு வரும்படி கூறினார். அங்கு சென்ற இடத்தில்தான் அவரைக் கொலை செய்ததாக சூப்பர்வைஸர் விகாஷ் சர்மா வாக்குமூலம் அளித்துள்ளார்.

பிங்கி
பிங்கி

சென்னை அண்ணாநகர், ஹெச் பிளாக் 18-வது தெருவில் குடியிருந்தவர் டாட்டூ ஆர்டிஸ்ட் பிங்கி. இவர், குளியலறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த வழக்கை விசாரித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, பிங்கியைக் கொலை செய்த குற்றத்துக்காக விகாஷ் சர்மாவை கைதுசெய்தார்.

விகாஷ் சர்மா இந்தியில் பேசியதால் அவரிடம் இந்தி தெரிந்த காவலர் ஒருவர் மூலம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்தியில் விகாஷ் சர்மா அளித்த வாக்குமூலத்தை மொழியாக்கம் செய்துள்ளனர் போலீஸார்.

விகாஷ் சர்மா
விகாஷ் சர்மா

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் விகாஷ் சர்மா. இவர், சென்னை மாதவரத்தில் உள்ள லாரி டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் சூப்பர்வைஸராக வேலைபார்த்து வருகிறார். விகாஷ்சர்மாவின் நண்பர் விகாஷ் குமார். இவர்கள் மாதவரத்தில் தங்கியுள்ளனர். டாட்டூ வரைவதற்காக பிங்கியின் வீட்டுக்கு விகாஷ் சர்மா, விகாஷ் குமார் சென்றுள்ளனர். அதன்பிறகு பிங்கியுடன் இவர்களுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. பிங்கியும் விகாஷ் சர்மாவும் போனில் நீண்ட நேரம் பேசிவந்துள்ளனர்.

`உடல் முழுவதும் டாட்டூ; மிஸ்ஸான செல்போன்'- பிங்கி கொலையில் துப்பு துலங்கியது எப்படி?

பிங்கியின் வீட்டுக்கு விகாஷ் சர்மா, ஏற்கெனவே சில தடவை வந்துள்ளார். அப்போது, பிங்கி கேட்ட பணத்தை விகாஷ் சர்மா கொடுத்துள்ளார். சம்பவத்தன்று பிங்கிக்கு விகாஷ் சர்மா போனில் பேசியுள்ளார். வீட்டில் யாரும் இல்லை என்ற தகவலை பிங்கி கூறியுள்ளார். இதனால் விகாஷ் சர்மாவும் அவரின் நண்பர் விகாஷ் குமாரும் பிங்கியின் வீட்டுக்கு வந்துள்ளனர். ஆனால் விகாஷ்குமார் வீட்டுக்குள் செல்லவில்லை. விகாஷ் சர்மா மட்டும் வீட்டுக்குள் சென்று பிங்கியுடன் பேசியுள்ளார்.

சிசிடிவியில் சிக்கிய விகாஷ்சர்மா
சிசிடிவியில் சிக்கிய விகாஷ்சர்மா

அதன்பிறகு பிங்கி கேட்ட பணத்தை விகாஷ் சர்மா கொடுக்கவில்லை. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பிங்கியை விகாஷ் சர்மா சரமாரியாகத் தாக்கியுள்ளார். பிங்கியின் முகத்தை தலையணையால் அமுக்கிய விகாஷ்சர்மா, அதன்பிறகு குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் அவரை மூழ்கடித்துக் கொலை செய்துள்ளார். போலீஸாரிடம் சிக்கிக் கொள்ளாமலிருக்க பிங்கியின் செல்போனை அவர் எடுத்துவந்து விகாஷ் குமாரிடம் கொடுத்துள்ளார். அப்போது பிங்கியைக் கொலை செய்த விவரத்தை விகாஷ்குமாரிடம் விகாஷ் சர்மா கூறவில்லை.

பின்னர் போதையில் இருந்த விகாஷ் சர்மா, பிங்கியைக் கொலை செய்துவிட்டதாக விகாஷ்குமாரிடம் கூறியுள்ளார். அதைக்கேட்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். அதன்பிறகு இருவரும் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். பிங்கியின் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவைத்துள்ளனர்.

பிங்கி
பிங்கி

கொலை நடந்தவுடன் பிங்கியுடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த கிருஷ்ணா போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். அவர் மீது ஆரம்பத்தில் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், கொலை நடந்த நேரத்தில் கிருஷ்ணா வீட்டில் இல்லை என்பது சிசிடிவி கேமரா மூலம் உறுதிசெய்தோம். அதே நேரத்தில் விகாஷ் சர்மா பிங்கியின் வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியில் செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன. அவரும் கொலை செய்ததை ஒத்துக்கொண்டார்" என்றார்.

காவலர்களிடம் இந்தியில் பேசிய விகாஷ் சர்மா, ``எனக்கு இன்னமும் திருமணமாகவில்லை. வேலை தேடி சென்னை வந்தேன். நண்பர் ஒருவர் மூலம் பிங்கி எனக்கு அறிமுகமானார். சம்பவத்தன்று பிங்கியிடம் போனில் பேசினேன். அவர் வீட்டுக்கு வரச் சொன்னார். அதன்படி அவரின் வீட்டுக்குச் சென்றேன். அங்கு அவரும் நானும் ஒன்றாக இருந்தோம். பிங்கி என்னிடம் 4,000 ரூபாய் கேட்டார். ஆனால், என்னிடம் ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது. அதை அவரிடம் கொடுத்தபோது என்னை அவமானப்படுத்தினார்.


பிங்கி
பிங்கி

பிங்கி என்னிடம் அன்பாகப் பழகுவார். பணத்துக்காக அவர் கூறிய வார்த்தைகள்தான் என்னைக் கொலை செய்யும் அளவுக்கு தள்ளிவிட்டது" என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

பிங்கி கொலை வழக்கில் 12 மணி நேரத்தில் விகாஷ் சர்மாவை போலீஸார் பிடித்துள்ளனர். இந்தக் கொலை வழக்கை துரிதமாக துப்பு துலக்கிய போலீஸாருக்கு போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.