Published:Updated:

போதைப்பொருள் வழக்கு: தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத்சிங் உள்ளிட்டோருக்கு சம்மன் - பின்னணி என்ன?

தீபிகா படுகோன்
தீபிகா படுகோன் ( Twitter )

பாலிவுட்டில் போதைப்பொருள் பயன்பாடு குறித்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு நடிகைகள் தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத்சிங், ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான் ஆகியோருக்கு போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சம்மன் அனுப்பியிருக்கிறது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் இறப்புக்குப் பின்னர் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தனர். சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபோர்த்தி மீதான பண மோசடி புகாரில் அமலாக்கத்துறை வழக்கு பதிந்து விசாரித்துவருகிறது. அமலாக்கத்துறை விசாரணையின்போது ரியா சக்ரபோர்த்தியின் செல்போனிலிருந்து மீட்கப்பட்ட வாட்ஸ்அப் சாட்டில் கஞ்சா குறித்து விவாதிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஒரு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில், ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

சுஷாந்த் - ரியா
சுஷாந்த் - ரியா

இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு இரண்டு நாள்களுக்குப் பின்னர் பாலிவுட்டில் போதைபொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் தாமாக முன்வந்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இரண்டாவது வழக்கைப் பதிவு செய்தது. இந்த வழக்கில்தான் ரியா சக்ரபோர்த்தி, அவரது சகோதரர் சௌவிக் உள்ளிட்ட 17 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். முதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ரியா சக்ரபோர்த்தி தவிர இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை.

என்ன நடக்கிறது சுஷாந்த் வழக்கில்?

சம்மன் அனுப்பப்பட்டது ஏன்?

ரகுல் ப்ரீத்சிங்
ரகுல் ப்ரீத்சிங்

ரியா சக்ரபோர்த்தி மற்றும் சுஷாந்த் சிங்கின் மேலாளரான ஜெயா ஷா ஆகியோரின் வாட்ஸ்அப் சாட் தகவல்களின் அடிப்படையிலேயே தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத்சிங், ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பதிவு செய்திருக்கும் இரண்டு வழக்குகளிலும் இவர்களது பெயரில் குற்றம்சாட்டப்படவில்லை. அதேபோல், ஜெயா ஷா பணிபுரியும் க்வான் (Kwan Talent Management Company) நிறுவனத்தைச் சேர்ந்த சிலரிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையிலும் அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது.

தீபிகா படுகோன் மற்றும் அவருடைய மேலாளரும், க்வான் நிறுவன ஊழியருமான கரிஷ்மா பிரகாஷ், ரகுல் ப்ரீத்சிங் ஆகியோருக்கு இந்த அடிப்படையிலேயே சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள். அதேபோல், ஜெயா ஷாவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாக தயாரிப்பாளரும் க்வான் நிறுவன இயக்குநருமான மது மாண்டேனாவுக்கும் நேரில் ஆஜராகும்படி சம்மன் போயிருக்கிறது என்கிறார்கள்.

ஷ்ரத்தா கபூர்
ஷ்ரத்தா கபூர்

அதேநேரம்,ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்ட விவகாரத்தில் இரு வேறு தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ரியா சக்ரபோர்த்தி கைது செய்யப்படுவதற்கு முன்னர், கடந்த 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் குறித்து தகவல் தெரியவந்ததாகவும் அதனாலேயே சம்மன் அனுப்பப்பட்டதாகவும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் சொல்கிறார்கள். ஆனால், ரியா சக்ரபோர்த்தி, விசாரணையின்போது இவர்கள் பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடவே இல்லை என்கிறார் அவருடைய வழக்கறிஞரான சதீஷ் மணிஷிண்டே. ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான் ஆகிய இருவருக்கும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் பதிவுசெய்த இரண்டாவது வழக்கின் விசாரணைக்காக சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது.

சுஷாந்த் விவகாரம்: தீபிகா படுகோன் டார்கெட்... பின்னணி அரசியல் என்ன?

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்திருக்கும் வாட்ஸ்அப் சாட் மற்றும் தகவல்கள் அடிப்படையில் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆறு மாத கால அவகாசம் இருக்கும் நிலையில், விசாரணையின் அடிப்படையில் அதில் குற்றம்சாட்டப்படுபவர்களின் பெயர்கள் சேர்க்கப்படும் என்கிறார்கள் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள்.

சாரா அலிகான்
சாரா அலிகான்

ராகுல் ப்ரீத்சிங், இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட இருந்தநிலையில், அவர் எங்கிருக்கிறார் என போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குத் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், இதுவரை அவருக்கு சம்மன் கொடுக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. அதேநேரம், தீபிகா படுகோன், அவரின் மேலாளர் கரிஷ்மா ஆகியோர் நாளையும் (செப்டம்பர் 25), ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான் ஆகியோர் சனிக்கிழமையும் (செப்டம்பர் 26) நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. அவர்களிடம் நடத்தப்படும் விசாரணைக்குப் பின்னர் இந்த வழக்கு அடுத்தகட்டத்துக்கு நகரும்.

அடுத்த கட்டுரைக்கு