Published:Updated:

`புகார் அளிக்க வந்தால் எலுமிச்சைச் சாறு, மதிய உணவு!' - அசத்தும் இந்தியாவின் நம்பர்-1 போலீஸ் ஸ்டேஷன்

புதுச்சேரி நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையம் 4 வது இடத்திலும் பெரியகுளம் போலீஸ் நிலையம் இந்தப் பட்டியலில் 8 வது இடத்திலும் உள்ளன.

காலு போலீஸ் நிலையம்
காலு போலீஸ் நிலையம்

காவல் நிலையங்கள் என்றால் சாமானியர்களுக்குக் கொஞ்சம் சங்கடம்தான். ஏதாவது பிரச்னை என்றால் போலீஸ் நிலையத்துக்குச் செல்ல வேண்டுமென்றால் சாதாரண மக்களிடத்தில் ஒருவித தயக்கம் இருக்கும். நேர்மையான அணுகுமுறை போலீஸ் நிலையத்தில் இருக்காது என்கிற எண்ணம் அனைத்து தரப்பு மக்களிடம் உண்டு. பணம் படைத்தவர்கள், அரசியல்வாதிகள், அதிகாரத்தில் உள்ளவர்களின் பேச்சுதான் அங்கே எடுபடும்.

சாமானியர்களின் பக்கம் நீதி இருந்தாலும் காவல் நிலையங்களில் அது மறுக்கப்படும் என்கிற நிலைதான் இந்தியாவில் பரவலாகக் காணப்படுகிறது.

இதே இந்தியாவில்தான் மதிய நேரத்தில் புகார் கொடுக்கச் சென்றால், மதிய உணவு உபசரித்து அதை வந்தவர் உண்ட பின்னரே வழக்கமான நடைமுறைகளை மேற்கொள்ளும் காவல் நிலையமும் ஒன்று இருக்கிறது. ராஜஸ்தானில் உள்ள காலு போலீஸ் ஸ்டேஷனில்தான் இத்தகையை ஆச்சர்யமான விஷயம் நடந்து வருகிறது.

ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் சிறந்த காவல் நிலையங்கள் அறிவிக்கப்பட்டு விருதும் வழங்கப்படுகிறது. கடந்த 2017- ம் ஆண்டு கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றது. கடந்த ஆண்டுக்கான ஆய்வில், காலு போலீஸ் ஸ்டேஷன் முதலிடத்தைப் பெற்றுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு இந்தப் பட்டியலில் 4 வது இடமும் பெரியகுளம் போலீஸ் ஸ்டேஷனுக்கு 8 வது இடமும் கிடைத்துள்ளன. இந்தியாவில் மொத்தம் 15,666 போலீஸ் நிலையங்கள் உள்ளன. அதில், காலு போலீஸ் நிலையத்தை மத்திய உள்துறை அமைச்சகம் சிறந்ததாக அறிவித்துள்ளது என்றால் நிச்சயம் அதற்குக் காரணமும் இருக்கிறது.

பெரியகுளம் காவல் நிலையம்
பெரியகுளம் காவல் நிலையம்

சரி... எந்த தரவுகள் அடிப்படையில் சிறந்த போலீஸ் நிலையங்கள் தேர்வு செய்யப்படுகின்றன? முதலில் உள்ளுர் மக்களின் கருத்துகள் கேட்கப்படும். பின்பற்றப்படும் விசாரணை நடைமுறைகள், புகார் அளிக்கப்பட்ட பிறகு, நடவடிக்கை தொடங்கும் காலம், குற்றங்களைக் கட்டுப்படுத்துதல், போலீஸ் நிலையத்தின் பேணப்படும் சுகாதாரம், போலீஸ் அதிகாரிகள், காவலர்கள் மக்களிடம் நடந்துகொள்ளும் தன்மை, போலீஸ் நிலையங்கள் சார்பாக மேற்கொள்ளப்படும் சமுதாயப் பணிகள், ஆவணங்களை முறையாகப் பராமரித்தல், குற்றவாளிகளைக் கண்காணித்தல் போன்ற தரவுகள் ஆராயப்படுகின்றன.

இந்தக் காலு போலீஸ் ஸ்டேஷன் 2012-ம் ஆண்டுதான் உருவாக்கப்பட்டது. ஜெய்ப்பூரிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவிலும் பிகானீரிலிருந்து 90 கிலோ மீட்டர்தொலைவிலும் காலு உள்ளது. காவல் நிலையத்துக்குள் சென்றால், 'எங்களிடம் தயங்காமல் வாருங்கள். 24 மணி நேரத்துக்குள் உங்களுக்கு மன நிம்மதி கிடைக்கும்' என்ற போர்டுதான் முதலில் மக்களை வரவேற்கிறது. 25 கிராமங்களைச் சேர்ந்த 65,000 மக்களுக்கு இந்த போலீஸ் ஸ்டேஷன்தான் காவல் தெய்வம். உண்மையிலேயே, காவல் தெய்வங்கள் போலவே மக்களை, இங்கு பணி புரியும் போலீஸ்காரர்கள் பாதுகாத்து வருகின்றனர். எழுத படிக்கத் தெரியாத வெள்ளந்தி மனிதர்கள் நிறைந்த பகுதி இது. கால்நடைகள் மேய்ப்பதுதான் முக்கிய தொழில். சர்வசாதாரணமாக 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் இங்கே வீசும். முதலில் மக்களுக்கு போலீஸ் நிலையத்தின் மீது நம்பிக்கை வர வைக்க வேண்டும்.

காலு போலீஸ் நிலையத்துக்கு விருது
காலு போலீஸ் நிலையத்துக்கு விருது
twitter.com/ipsvipul_

இதனால், காலு போலீஸ் ஸ்டேஷனில் காவல் நிலையத்துக்கான எந்த அடையாளமும் இருக்காது. இரண்டு அடுக்கு கட்டத்தில் இந்த போலீஸ் நிலையம் இயங்கிவருகிறது. முற்றத்தில் அழகிய பூங்கா உள்ளது. போலீஸ் நிலையம் முழுவதுமே ஏ.சி வசதி செய்யப்பட்டுள்ளது. போலீஸ் நிலையத்துக்கு வருபவர்கள் உணவு அருந்த அழகிய டேபிள், இருகைகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்களுக்குக் குளிர்ந்த நீர் வழங்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. புகார் கொடுக்க வருபவர்களுக்கு முதலில் குளிர்ந்த நீர் வழங்கப்படுகிறது. தொடர்ந்து, எலுமிச்சைச் சாறு அளிக்கப்படும். மெடிட்டேஷன் அறையில் சிறிது நேரம் அமைதியாக அமரச் சொல்கிறார்கள். ஆசுவாசப்படுத்திய பிறகே என்ன, ஏதுவென்று விசாரிக்கிறார்கள். மதிய நேரத்தில் புகார் அளிக்க வந்தால், கண்டிப்பாக உணவு அருந்திவிட்டுத்தான் செல்ல வேண்டும்.

போலீஸ் நிலைய வளாகத்தில் வாலிபால், பேட்மின்டன் விளையாடவும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதம் முழுவதும் துப்புரவுப் பணி செய்தாலும் சம்பளம் கொடுக்காத போலீஸ் நிலையங்களைப் பற்றி கேள்வி பட்டிருப்போம். காலு போலீஸ் நிலையத்தில் துப்புரவுப் பணி மேற்கொள்ளும் பணியாளர்களுக்குத் தினம் ரூ.200 சம்பளமாகக் கொடுக்கிறார்கள்.

பேட்மிண்டன் கோர்ட்
பேட்மிண்டன் கோர்ட்

இந்த போலீஸ் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பெரும்பாலான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் ஒருவர் போலீஸ் நிலையத்துக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அன்றாட கிராம நிகழ்வுகளை அவர் போலீஸ் நிலையத்துக்குத் தெரிவிக்க வேண்டும். உள்ளுர் மக்களும் தங்கள் காவல் நிலையத்துக்குத் தேவையான விஷயங்களைப் பார்த்துப் பார்த்து செய்து கொடுக்கிறார்கள்.

குற்றம் நடந்த பிறகு, விசாரிப்பதைவிட குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து குற்றங்கள் நடக்காமல் தடுப்பதில் காலு போலீஸ் நிலையம் அபாரமாகச் செயல்படுகிறது. 2014-ம் ஆண்டு இங்கே 74 எப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. கடந்த ஆண்டு 37 ஆக குறைந்துள்ளது. இப்போது 4 கேஸ்கள் மட்டுமே பெண்டிங்கில் உள்ளன. வழிப்பறி குற்றம் அறவே நடக்கவில்லை. பெண்களுக்கு என்று தனிப்பிரிவு அதிகாரிகள் இயங்கி வருகின்றனர்.

வழக்கமாக போலீஸ்காரர்கள் என்றால் ஹோட்டல்களில் காசு கொடுக்காமல் சாப்பிடுவார்கள், பார்சல் வாங்கிச் செல்வார்கள், ஓசிக்கு டீ குடிப்பார்கள் என்கிற பேச்சு உண்டு. ஆனால், காலு போலீஸ் நிலையத்தில் பணி புரிபவர்கள் 'ஜென்டில்மேன்கள்.'
மன்கட் சந்த்

ஓசிக்கு டீ குடிப்பது என்ற பேச்சுக்கே இங்கே இடம் கிடையாது. காலு மார்க்கெட்டில் கடை வைத்துள்ள மன்கட் சந்த், ''காலு போலீஸ் நிலையத்தில் லஞ்சம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. நாங்கள் அன்புடன் டீ கொடுத்தால்கூட குடிக்க மாட்டார்கள். காசு கொடுத்துதான் குடிப்பார்கள். எங்களுக்கு போலீஸ் நிலையத்துக்கு செல்வதில் எந்தத் தயக்கமும் இருந்ததில்லை'' என்கிறார்.

நூற்றாண்டு கடந்த கரூர் பரமத்தி காவல் நிலையம் - திருச்சி சரக காவல்துறைத் துணைத் தலைவர் பெருமிதம்!

பிகானீர் மாவட்ட எஸ்.பி பிரதீப் மோகன் ஷர்மா, ''இந்தப் பெருமை ஒரே நாளில் கிடைத்துவிடவில்லை. இந்த போலீஸ் நிலையம் உருவாக்கப்பட்டதிலிருந்து 5 காவல் ஆய்வாளர்கள் பணி புரிந்துள்ளனர். யார் இங்கே மாறி வந்தாலும் போலீஸ் நிலையத்தின் தன்மளை உணர்ந்து செயல்பட்டுள்ளனர். போலீஸாரின் நேர்மைக்கும் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி இது'' என்று புகழாரம் சூட்டியுள்ளார். தற்போது காலு போலீஸ் நிலையத்தில் தேவிலால் என்பவர் ஆய்வாளராக உள்ளார்.