Published:Updated:

கணவனை இழந்த காரைக்கால் பெண்ணுக்கு நேர்ந்த கதி! - விரைந்து செயல்பட்ட போலீஸார்

மு.இராகவன்
PrasannaVenkatesh AB

அப்பெண்மணி நடந்த கொடுமைகளை வெளியில் சொல்ல முடியாமல், மகனிடம் நகை, பணத்தை பறி கொடுத்து விட்டதாகக் கதறியிருக்கிறார்.

karaikal government hospital
karaikal government hospital

காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க விதவைப் பெண்மணி ஒருவரை, இன்று விடியற்காலை பொலிரோ காரில் கடத்தி நான்கு இளைஞர்கள் கூட்டுப் பாலியல் கொடுமை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கணவனை இழந்த காரைக்காலைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், காய்கறி வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார். ஒரு மகளைத் திருமணம் செய்து கொடுத்துவிட்ட அந்தப் பெண்மணி, மகனுடன் வசித்து வருகிறார்.

karaikal government hospital
karaikal government hospital

இந்நிலையில் இன்று விடியற்காலை காரைக்கால் புதிய பேருந்து நிலையத்திலிருந்து வேளாங்கண்ணி அருகேயுள்ள பரவை காய்கறி சந்தைக்குச் சென்று காய்கறிகள் வாங்கிவர பேருந்துக்காகக் காத்திருந்திருக்கிறார். அப்போது திடீரென பொலிரோ காரில் வந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க நான்கு இளைஞர்கள், அந்தப் பெண்மணியை, வாயைப் பொத்தி காரில் கடத்திச் சென்றுள்ளனர். பைபாஸ் சாலை அருகே இருட்டு பகுதிக்கு இழுத்துச் சென்ற அவர்கள், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். அத்துடன் காய்கறி வாங்க வைத்திருந்த சுமார் 6,000 ரூபாய், செல்போன் மற்றும் அணிந்திருந்த நகைகளையும் அந்தக் கும்பல் பறித்துச் சென்றுவிட்டது.

நடந்த கொடுமைகளை வெளியில் சொல்ல முடியாமல், மகனிடம் நகை மற்றும் பணத்தை பறிகொடுத்துவிட்டதாகக் கதறியிருக்கிறார். காவல்நிலையத்தில் அப்பெண்மணியின் மகன் புகார் கொடுக்கவே, தனக்கு நேர்ந்தவற்றைக் கண்ணீருடன் காவல்நிலையத்தில் விவரித்திருக்கிறார்.

Sexual harassment
Sexual harassment

இதுகுறித்து காரைக்கால் சிறப்பு படையைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன்குமாரிடம் பேசினோம். "உடனடியாக அப்பெண்மணியைக் காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தோம். அவர் கூறிய வாகன தடயங்கள், இளைஞர்களின் அடையாளங்களை வைத்து நகரில் உள்ள சிசிடிவி் கேமராவை ஆய்வு செய்தோம். அதன்மூலம் கடத்தலுக்குப் பயன்படுத்திய பொலிரோ வாகனத்தைக் கண்டறிந்தோம்.

இதையடுத்து ராஜ்குமார் மகன் சின்னையா, ராமலிங்கம் மகன் விஜய் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளோம். மேலும், ராமு மற்றும் வெங்கடேஷ் ஆகிய இருவரையும் தேடி வருகிறோம். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். அப்பெண்மணியின் பணம், செல்போன் மற்றும் நகைகளைக் கைப்பற்றியுள்ளோம்'' என்றார்.