Published:Updated:

`விபத்து என வந்தார்.. கொலை வழக்கில் சிக்கினார்!' -போதை கணவனின் செயலால் மனைவி எடுத்த விபரீத முடிவு

இறப்பு
இறப்பு

வெங்கடேசனுக்குத் திருப்பூரில் சிகிச்சை அளித்து எந்தப் பலனும் இல்லாததால் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (49). இவரின் மனைவி உமாதேவி (47). இந்த தம்பதிக்குக் கல்லூரி செல்லும் மகன் மட்டும் உள்ளார். கணவன்-மனைவி இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து தங்கள் பிழைப்பை ஓட்டி வந்துள்ளனர். வெங்கடேசன், மதுபோதைக்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது.

ஒயின் ஷாப்
ஒயின் ஷாப்

தனக்குக் கிடைக்கும் வருமானத்தில் பாதியைக் குடித்தே அழித்து வந்துள்ளார். சில சமயங்களில் வீட்டில் உள்ள பொருள்களை விற்றும் தவறாமல் குடித்துவந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 17-ம் தேதி இரவு வெங்கடேசன் சிறிய விபத்தில் சிக்கியதாகக் கூறி அவரை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் உமாதேவி. மொபட்டில் இருந்து கீழே விழுந்ததால் கணவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது என மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.

விபத்து என்பதால் காவல்நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூறியுள்ளனர் மருத்துவர்கள். அதன்படி உமாதேவியும், புகார் அளித்துள்ளார். வெங்கடேசனுக்குத் திருப்பூரில் சிகிச்சை அளித்து எந்தப் பலனும் இல்லாததால் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, மறுநாள் 18-ம் தேதி மாலை கோவை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் உயிரிழந்துவிட்டார்.

விபத்து
விபத்து

பின்னர் வெங்கடேசனின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களும் இறந்தவருக்கு தங்கள் வழக்கப்படி இறுதிச் சடங்கு செய்துள்ளனர். வெங்கடேசன் இறந்த பிறகு அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கை போலீஸாருக்கு கிடைத்துள்ளது. அதைப் பார்த்ததும் காவலர்கள் அதிர்ந்து போயுள்ளனர். அதில், `வெங்கடேசன் விபத்தினால் உயிரிழக்கவில்லை, அவரது தலையில் யாரோ அடித்த தடயம் உள்ளது. அதன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

`தன்னுடன் வரும்படி வற்புறுத்திய கணவன்; மறுத்த மனைவி!’ - சேலத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

இதையடுத்து, கணவரை இழந்த மனைவியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். முதலில் தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய உமாதேவி, போலீஸாரின் தொடர் விசாரணையில் கணவரை அடித்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

`என்ன நடந்தது?' என்பது குறித்து போலீஸாரிடம் உமாதேவி கொடுத்துள்ள விவரம் பின்வருமாறு:

கடந்த 17-ம் தேதி வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தபோது, என் கணவர் மது மற்றும் இறைச்சியுடன் வீட்டிலிருந்தார். அவர் மது அருந்துவது தொடர்பாகத் தினமும் எங்களுக்குள் பிரச்னை வரும், அன்றும் அதேபோன்று பிரச்னை வந்தது.

கணவன் - மனைவி சண்டை
கணவன் - மனைவி சண்டை

அப்போது, மது வாங்க எங்கிருந்து பணம் வந்தது என நான் கேட்டேன், அதற்கு வீட்டில் உள்ள மிக்ஸியை விற்றுவிட்டதாகக் கூறினார். இதையடுத்து, எனக்கும் அவருக்கும் இடையே பெரிய சண்டை வந்தது. ஒரு கட்டத்தில் அவர் என்னை அடிக்க முயன்றார், அப்போது சுதாரித்துக்கொண்ட நான், ஆத்திரத்தில் அருகிலிருந்த கட்டையால் கணவரைத் தாக்கினேன்.

அதில் அவர் மயக்கமடைந்துவிட்டார். பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். நான் அடித்ததாகக் கூறினால் போலீஸ் பிரச்னை வரும் என்பதால், விபத்தில் அடிபட்டது எனப் பொய் சொன்னேன். சிகிச்சைக்குப் பிறகு அவர் பிழைத்துவிடுவார் என நினைத்தேன். ஆனால், அவர் உயிர் போகும் எனச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளதாகப் போலீஸார் கூறுகின்றனர்.

கைது
கைது

இதையடுத்து, உமாதேவி மீது வழக்குப்பதிவு செய்த மங்கலம் பகுதி போலீஸார், அவரைக் கைதுசெய்து திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்தியச் சிறையில் அடைத்துள்ளனர். மிக்ஸியை விற்றதற்காக தன் கணவரை மனைவி அடித்த விவகாரம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு