Published:Updated:

குமரி: கணவர் திடீர் மரணம்!- வறுமையால் 7 கி.மீ நடந்து சென்று குளத்தில் குதித்த மனைவி, 2 மகள்கள்

வறுமையால் இறந்த வடிவேல் முருகன்
வறுமையால் இறந்த வடிவேல் முருகன்

அந்தக் குளத்தில் ஆகாயத்தாமரைக் கொடிகள் பரவிக்கிடந்ததால், குளத்தின் நடுப்பகுதிக்குச் செல்லாமல் தங்கள் கைகளை மாறி மாறிக் கயிற்றால் கட்டிக்கொண்டு, படித்துறைப் பகுதியில் தண்ணீரில் குதித்திருக்கிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஒழுகினசேரி சந்தனமாரி அம்மன் தெருவில் வசித்துவந்தவர் வடிவேல் முருகன் (78). இவருடைய மனைவி பங்கஜம் (67). இந்தத் தம்பதியருக்கு மாலா (48), மைதிலி என்ற சச்சு (47) என இரு மகள்கள். இரண்டு மகள்களும் திருமணம் செய்துகொள்ளாமல், பெற்றோர் வீட்டிலேயே வசித்துவந்திருக்கிறார்கள். தச்சு வேலை செய்துவந்த வடிவேல் முருகனின் வருவாயைக்கொண்டுதான் அந்தக் குடும்பமே ஜீவனம் நடத்திவந்திருக்கிறது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வடிவேல் முருகனின் காலில் காயம் ஏற்பட்டதால், அவரால் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் அந்தக் குடும்பமே வறுமையின் பிடியில் சிக்கியிருந்திருக்கிறது. இந்த நிலையில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வடிவேல் முருகன் நேற்று மரணமடைந்தார். வடிவேல் முருகனை அடக்கம் செய்யக்கூட பணம் இல்லாத நிலையில், அவரின் மனைவியும் இரண்டு மகள்களும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக மூவரும் சுமார் ஏழு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, சுசீந்திரம் அருகேயுள்ள நல்லூர் இளைய நயினார் குளத்தில் தற்கொலை செய்துகொள்வதற்காகக் குதித்திருக்கிறார்கள்.

குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்ட பங்கஜம்
குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்ட பங்கஜம்

அவர்கள் குளத்தில் குதித்தது அதிகாலை நேரம் என்பதால், அப்போது அந்தப் பகுதியில் வாக்கிங் சென்ற சிலர் குளத்தில் மூன்று பேர் தத்தளிப்பதைப் பார்த்திருக்கிறார்கள். இது குறித்து சுசீந்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில் அங்கு சென்ற போலீஸார் மூவரையும் மீட்டனர். ஆனால், வடிவேல் முருகனின் மனைவி பங்கஜமும், மூத்த மகள் மாலாவும் மரணமடைந்திருந்தனர். இளைய மகள் மைதிலி என்ற சச்சு மட்டும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் போலீஸார். மேலும், இறந்தவர்களின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சையளித்ததைத் தொடர்ந்து மைதிலி உயிர்பிழைத்தார். அவர் போலீஸாரிடம், தனது தந்தை இறந்த விஷயத்தையும், அதனால் தற்கொலை செய்துகொள்ளக் குளத்தில் குதித்ததையும் கூறியிருக்கிறார். இதையடுத்து போலீஸார் ஒழுகினசேரி சென்று வடிவேல் முருகனின் உடலை மீட்டனர். இது குறித்து, ``வடிவேல் முருகனின் குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. அவரின் குடும்பத்தினர் முத்தாரம்மனின் தீவிர பக்தர்கள் என்கிறார்கள்.

 மாலா
மாலா

தினமும் சாப்பிடுவது உள்ளிட்ட காரியங்களுக்கு முத்தாரம்மன் உத்தரவு வந்தால்தான் செய்வார்களாம். இரண்டு மகள்களுக்கும் ஏன் திருமணம் செய்துவைக்கவில்லை என்று கேட்டால், `முத்தாரம்மன் உத்தரவு வரவில்லை’ என்று கூறுவாராம் வடிவேல் முருகன். தன் மகள்களையும் `பெரிய முத்தாரம்மை’, `சின்ன முத்தாரம்மை’ என்றுதான் அழைப்பாரம். வடிவேல் முருகன் இறந்த பிறகு பணம் இல்லாததால், அவரை அடக்கம் செய்ய வழி தெரியாமல் திகைத்திருக்கிறது அந்தக் குடும்பம். பிறகுதான் மூவரும் தற்கொலை செயதுகொளள முடிவு செய்திருக்கிறார்கள்.

குமரி: கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட உடல்! - தற்கொலை செய்துகொண்டாரா மருத்துவக் கல்லூரி மாணவர்?

தற்கொலை செய்துகொள்வதற்காக ஏழு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றதால் அதிகாலை நேரம் ஆகிவிட்டது. அந்தக் குளத்தில் ஆகாயத்தாமரைக் கொடிகள், பரவிக்கிடந்ததால் குளத்தின் நடுப்பகுதிக்குச் செல்லாமல் தங்கள் கைகளை மாறி மாறி கயிற்றால் கட்டிக்கொண்டு படித்துறைப் பகுதியில் தண்ணீரில் குதித்த்திருக்கிறார்கள். வாக்கிங் சென்றவர்கள் அதைப் பார்த்ததால், ஒருவர் உயிரைக் காப்பாற்ற முடிந்தது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்கிறார்கள் போலீஸார் தரப்பில்.

அடுத்த கட்டுரைக்கு