Published:Updated:

`விஷம் வாங்கிய கணவன்; முந்திய மனைவி!’ - குடும்பச் சண்டையால் ராமநாதபுரத்தில் நடந்த விபரீதம்

இரா.மோகன்
உ.பாண்டி

ராமநாதபுரத்தில் உணவில் விஷம் வைத்து கணவனைக் கொல்ல முயன்ற மனைவியை போலீஸார் கைதுசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமசாமி - பஞ்சவர்ணம்
ராமசாமி - பஞ்சவர்ணம் ( உ.பாண்டி )

ராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை தாவுக்காடு பகுதியைச் சேர்ந்த ராமசாமிக்கும் அத்தியூத்து பகுதியைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவருக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. 18 ஆண்டுகளாகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் குழந்தை இல்லாததை ஒருவரை ஒருவர் குறை கூறி கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

Murder
Murder

மேலும், பஞ்சவர்ணத்தின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடிப்பது போன்ற செயல்களிலும் ராமசாமி ஈடுபட்டுள்ளார். இதனால் கணவரிடம் கோபித்துக்கொண்டு பஞ்சவர்ணம் அத்தியூத்து பகுதியிலுள்ள தன் அக்கா வீட்டுக்குச் சென்று தங்குவதும், உறவினர்களின் சமரசத்துக்குப் பின்னர் மீண்டும் சேர்ந்து வாழ்வதுமாக இருந்துவந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அத்தியூத்து பகுதியில் நடந்த கோயில் திருவிழாவுக்குச் செல்லவேண்டுமென பஞ்சவர்ணம் கூறியுள்ளார். இதையடுத்து ராமசாமியும், பஞ்சவர்ணமும் திருவிழாவுக்குச் சென்று அங்கேயே 2 நாள்கள் தங்கியுள்ளனர். இதன்பின் தனது வீட்டுக்குச் செல்ல பஞ்சவர்ணத்தை ராமசாமி கூப்பிட்டுள்ளார். ஆனால், வீட்டுக்கு வர மறுத்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் பஞ்சவர்ணம். இதனால் ஆத்திரம் அடைந்த ராமசாமி, பஞ்சவர்ணத்துடன் தகராறு செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பியுள்ளார். இதனால் மனம் வெறுத்த ராமசாமி தன் மனைவி பஞ்சவர்ணத்தைக் கொலை செய்வதற்காக எலி மருந்தை வாங்கிவந்து வீட்டில் வைத்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

கணவர் ராமசாமியின் தொல்லை தாங்கமுடியவில்லை. இப்படியே போனால் ஒருநாளைக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து அவரைக் கொன்றுவிடப்போகிறேன்.
பஞ்சவர்ணம்

இந்த நிலையில், சமாதானம் அடைந்து வீடு திரும்பிய பஞ்சவர்ணத்துக்கும் ராமசாமிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இவர்களது சண்டையை அறிந்த ராமசாமியின் தம்பி, பஞ்சவர்ணத்தை தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளார். அங்கு தங்கியிருந்த பஞ்சவர்ணம், ``கணவர் ராமசாமியின் தொல்லை தாங்கமுடியவில்லை. இப்படியே போனால் ஒருநாளைக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து அவரைக் கொன்றுவிடப்போகிறேன்'' என அடிக்கடி கூறியுள்ளார். இதன்பின் மாலையில் வீட்டுக்குச் சென்ற பஞ்சவர்ணம், தக்காளி சாதம், முட்டை, ரசம் ஆகியன சமைத்துள்ளார். சமைக்கும்போதே அந்த உணவில் எலி மருந்தைக் கலந்துள்ளார். இதன்பின் கோபத்தில் இருந்த ராமசாமியை சமாதானப்படுத்தும் வகையில் கொஞ்சிப் பேசி சாப்பிட வருமாறு அழைத்த பஞ்சவர்ணம், அவருக்கு விஷம் கலந்த உணவை ஊட்டியுள்ளார்.

இதன்பின் பஞ்சவர்ணம் வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, ராமசாமியின் தம்பி அவரின் மகனை அடித்துக் கொண்டிருந்ததைக் கண்டார். அப்போது குறுக்கிட்ட பஞ்சவர்ணம், ``என்னால் ஏன் அவனை அடிக்கிறாய். இன்னும் கொஞ்ச நேரத்தில உன் அண்ணனே செத்துவிடுவான்'' என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராமசாமியின் தம்பி, வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளார். அங்கு ராமசாமி உணர்வற்ற நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ராமசாமிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிகிச்சையில் கணவர்
சிகிச்சையில் கணவர்
விகடன்

இது குறித்து தகவலறிந்த தேவிபட்டினம் போலீஸார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, உணவில் விஷம் வைத்து கணவனைக் கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, பஞ்சவர்ணத்தை போலீஸார் கைது செய்தனர். மனைவியை கொல்வதற்காக கணவன் எலி மருந்து வாங்கி வைத்திருந்த நிலையில், அந்த மருந்தைக் கொண்டே கணவரைக் கொலை செய்ய முயன்ற மனைவியின் செயல் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.