Published:Updated:

`அவள் சம்மதம் சொல்லிவிட்டாள்; வசதியாக வாழலாம்!'- ஆண் வாரிசுக்காக கணவனுக்கு 2வது திருமணம் செய்த மனைவி

சமீபத்தில் சிறுமியின் தந்தையிடம் `சிறுமியை கோயிலுக்கு அழைத்துச் செல்கிறோம்" எனக் கூறி சிறுமியை ஓகலூர் கிராமத்துக்கு தம்பதியர் கூட்டிச் சென்றுள்ளனர்.

அசோக்குமார் - செல்லக்கிளி
அசோக்குமார் - செல்லக்கிளி

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள வையங்குடி கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார் - செல்லக்கிளி தம்பதி. இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். பெண் குழந்தைகள் இருந்தாலும் ஆண் வாரிசு இல்லை என்று இருவரும் அடிக்கடி வருத்தப்பட்டு வந்துள்ளனர். இதனால் அசோக்குமார் இரண்டாவது திருமணம் செய்ய முடிவெடுத்து அதற்கு மனைவியின் சம்மதமும் வாங்கியுள்ளார். இதற்கிடையே, தாங்கள் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் 10-ம் வகுப்பு படித்துவிட்டு வறுமையின் காரணமாக அசோக் உடன் மில்லில் வேலை பார்த்துவந்துள்ளார்.

Arrest
Arrest

உடன் வேலைசெய்பவர்கள் என்பதால் சிறுமி அசோக் தம்பதியிடம் சகஜமாகப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தச் சிறுமியை தன் கணவனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க நினைத்துள்ளார் செல்லக்கிளி. அதேநேரத்தில் அசோக்கும் சிறுமியிடம் ``உன்னை 2-வது திருமணம் செய்துகொள்கிறேன். என் மனைவி சம்மதம் சொல்லிவிட்டாள். என்னைத் திருமணம் செய்துகொண்டால், வசதியாக வாழலாம்" என்று ஆசை வார்த்தை கூறி பேசியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, சமீபத்தில் சிறுமியின் தந்தையிடம் `சிறுமியை கோயிலுக்கு அழைத்துச் செல்கிறோம்" எனக் கூறி சிறுமியை ஓகலூர் கிராமத்துக்கு தம்பதியர் கூட்டிச் சென்றுள்ளனர்.

அங்குள்ள கோயில் ஒன்றில் சிறுமிக்கும், அசோக்கும் திருமணம் செய்துவைத்த செல்லக்கிளி அருகில் கிராமத்தில் ஒரு வீட்டில் அவர்கள் இருவரையும் தங்கவைத்துள்ளார். இரண்டு நாள் ஆகியும் மகள் வராமல் இருந்ததால் பதறிய தந்தை செல்லக்கிளிக்கு போன் செய்துள்ளார். ஆனால், அவர் மழுப்பலான பதிலை தெரிவித்ததை அடுத்து போலீஸில் புகார் கொடுத்துள்ளார் சிறுமியின் தந்தை.

Crime
Crime

போலீஸின் விசாரணையில் கோனூர் என்ற ஊரில் 3 பேரும் தங்கியிருப்பதை அறிந்து, அவர்களை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்துள்ளனர். பின்னர் தம்பதி இருவர் மீதும் கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வழக்கு பதிந்து போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.