Published:Updated:

சென்னை: மகள்களுக்கு பாலியல் தொல்லை! - காவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரும் மனைவி

 பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

சென்னையில் பணியாற்றும் காவலர் இளங்கோவன், தனது மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரின் மனைவி புகாரளித்திருக்கிறார்.

சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்துக்கு நேற்று காலை வந்த காவலர் இளங்கோவனின் மனைவி, பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது,`` நான் 2006-ம் ஆண்டு காவல்துறையில் பணியாற்றும் இளங்கோவன் என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு 13 வயது மற்றும் 11 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். எனது கணவர் இளங்கோவன், வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு இரண்டு மகள்களையும் பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார். அதை நானும் எனது மகள்களும் தட்டிக்கேட்டால் தகாத வார்த்தைகளால் திட்டுவதோடு அடித்து உதைப்பார்.

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மாதர் சங்கத்தினர்
காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மாதர் சங்கத்தினர்

அதனால் மனமுடைந்த நானும் என் மகள்களும் சில மாதங்களுக்கு முன் 4-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தோம். ஆனால் எங்களைக் காப்பாற்றி விட்டார்கள். அதன் பிறகும் என் கணவரால் மகள்களுக்கு பாலியல் தொல்லை தொடர்ந்தது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் மீண்டும் தற்கொலைக்கு முயன்றோம். அப்போது எங்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனவே எனது கணவர் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

காவலர் இளங்கோவனின் மனைவிக்கு ஆதரவாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும் காவல் நிலையத்துக்கு வந்திருந்தனர். காவல் நிலையம் முன் பதாகைகளை ஏந்தியப்படி காவலர் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். நீண்டநேரமாக நடந்த போராட்டம் நடந்ததால், துணை கமிஷனர் கார்த்திக்கேயன் தலைமையிலான போலீஸார் முற்றுகையிட்டவர்களை சமரசப்படுத்தினர். பிறகு காவலர் இளங்கோவனின் மனைவி, சங்க நிர்வாகிகள் சிலர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன் பேரில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கின்றனர்.

சென்னை: துப்பாக்கிமுனையில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை?! -  போலீஸ் எஸ்.ஐ சிக்கியது எப்படி?
மாதர் சங்கத்தினர்
மாதர் சங்கத்தினர்

இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மத்திய மாவட்டச் செயலாளர் தனலட்சுமி, மாநில சட்ட உதவி மன்றத்தில் மாநில செயலாளர் மனோன்மணி ஆகியோரிடம் பேசினோம்.

``பாதிக்கப்பட்ட காவலரின் மனைவி எங்களிடம் சட்ட உதவி கேட்டு வந்திருந்தார். அவரிடம் விசாரித்தபோது சொல்ல முடியாத அளவுக்கு கணவரால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. காவலரின் மனைவி கல்லூரி படிக்கும் போது காவலர் இளங்கோவனைக் காதலித்து திருமணம் செய்திருக்கிறார். இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்த சூழலில் காவலர் இளங்கோவனின் இன்னொரு முகம், அவரின் மனைவிக்கு தெரியவந்தது. குறிப்பாக போதை பொருள்களுக்கு காவலர் இளங்கோவன் அடிமையாகியிருந்திருக்கிறார். அதோடு பாலியல் ரீதியாக மனைவி, மகள்கள் ஆகியோருக்கு தொல்லைக் கொடுத்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மகள்களுக்கு கணவர் தொல்லை கொடுப்பது தெரிந்ததும் அந்தப் பெண் கண்டித்திருக்கிறார். இளங்கோவனின் மகள்களுக்கு இப்போது விபரம் தெரிந்தபிறகு அவர்களும் தன்னுடைய அப்பாவின் செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். அப்போது இளங்கோவன், ஆபாசமாகப் பேசியிருக்கிறார். அதனால்தான் மூன்று பேரும் மனவேதனையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருக்கின்றனர்.

சமரச பேச்சுவார்த்தை நடத்தும் துணை கமிஷனர் கார்த்திக்கேயன்
சமரச பேச்சுவார்த்தை நடத்தும் துணை கமிஷனர் கார்த்திக்கேயன்

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மூன்று பேரும் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் கீழ்ப்பாக்கம் போலீஸார், காவலர் இளங்கோவனுக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கின்றனர். இளங்கோவனின் மனைவியிடம் சமரசமாக செல்வதாக எழுதி வாங்கி வழக்கை முடித்து வைத்திருக்கின்றனர். தற்போது மகள்களுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தது தொடர்பாக புகாரளித்திருக்கிறோம். சம்பந்தப்பட்ட காவலர் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்திருக்கின்றனர்"என்றார்.

காவலர் இளங்கோவனிடம் விளக்கம் கேட்க அவரின் செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. அவரின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப்பிறகு வெளியிட தயாராக இருக்கிறோம்.

அடுத்த கட்டுரைக்கு