Published:Updated:

`சம்மதித்தால் உங்கள் இருவரோடும் வாழ்வேன்!' -சென்னைக் காவலர் பேச்சால் புகார் கொடுத்த முதல் மனைவி

சென்னைக் காவலர்
சென்னைக் காவலர்

`என் மகனுக்கும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துவிட்டது' என்றார். அதைக்கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.

சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்தவர் சத்தியவாணி (27). இவர் தமிழகக் காவல்துறை டிஜிபி அலுவலகம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய இடங்களில் தன்னுடைய கணவர் ராஜா மீது புகாருக்கு மேல் புகார் கொடுத்துவருகிறார்.

சத்தியவாணியிடம் பேசினோம்.

`` என்னுடைய சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம். நான் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன். வேலைக்கு பஸ்சில் சென்றபோது அதே பஸ்சில் சிவகங்கை மாவட்டம், மேலபூவந்தியைச் சேர்ந்த ராஜா (27) என்பவர் வந்தார். இருவரும் பழகினோம். பின்னர் காதலித்தோம்.

காவலர் ராஜா
காவலர் ராஜா

27.10.2017-ம் தேதி சென்னை வடபழனி கோயிலில் வைத்து திருமணம் நடந்தது. திருமணத்துக்குப்பிறகு திருமங்கலத்தில் குடியிருந்தோம். 11.6.2019-ல் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் எனக்குப் பெண் குழந்தை பிறந்தது. 17.6.2019-ல் திடீரென குழந்தை இறந்துவிட்டது. எங்கள் இருவருக்கும் நடந்த திருமணம், ராஜாவின் குடும்பத்தினருக்குத் தெரியாது. குழந்தை இறந்த பிறகு ராஜாவின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது.

இதையடுத்து ராஜாவின் அம்மாவிடம் போனில் பேசினேன். அப்போது எங்களுக்கு நடந்த திருமணத்தைப் பற்றி அவரிடம் கூறினேன். அதற்கு அவர், `என் மகனுக்கும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துவிட்டது' என்றார். அதைக்கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். உடனே ராஜாவிடம் 2-வது திருமணம் குறித்து கேட்டேன். அதனால் எங்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதன்பிறகு அவர் வீட்டுக்குச் சரியாக வருவதில்லை. என்னை ஏமாற்றி 2-வது திருமணம் செய்தது தொடர்பாக திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிந்தனர். ஆனால், ராஜா மீதும் அவரின் குடும்பத்தினர் மீதும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மெட்டி அணிவிக்கும் காவலர் ராஜா
மெட்டி அணிவிக்கும் காவலர் ராஜா

விசாரணையின்போது `நீ சம்மதித்தால் உங்கள் இருவரையும் வைத்து வாழ்வேன்' என்று என்னிடம் கூறுகிறார். மேலும் அவர், `நீ சம்மதிக்கவில்லை என்றால் 2-வது மனைவியுடன் வாழ்வேன். நான் போலீஸ், என்னை உன்னால் எதுவும் செய்ய முடியாது' என்று மிரட்டுகிறார். காவல் நிலையத்திலும் எனக்கு நீதி கிடைக்கவில்லை. அதனால்தான் டிஜிபி அலுவலகம், கமிஷனர் அலுவலகம் எனப் புகார்களைக் கொடுத்துவருகிறேன்" என்றார்.

இதுகுறித்து காவலர் ராஜாவிடம் கேட்டபோது ``சத்தியவாணி, பொய்யான தகவல்களைக் கூறுகிறார்" என்று மட்டும் கூறிவிட்டு போன் இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸாரிடம் கேட்டதற்கு ``சத்தியவாணி கொடுத்த புகாரின் பேரில் எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரித்துவருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு