Published:Updated:

``முடியலடா தம்பி, இந்தாள முடிச்சிவுட்டுடுனு சொன்னேன்”-என்.எல்.சி ஊழியரைக் கொன்ற மனைவி வாக்குமூலம்

பழனிவேலின் மனைவி மஞ்சுளா
பழனிவேலின் மனைவி மஞ்சுளா

வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த கணவனை மனைவியே கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், சின்ன சேலத்தையடுத்த செம்பாக்குறிச்சி மான்குட்டைப் பகுதியில் நேற்று மாலை ஒரு காரை சிலர் தீ வைத்து எரித்தனர். அதைக் கண்டு சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் உடனே காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனே அங்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைத்த காவல்துறையினர் காரை ஆய்வு செய்தனர். அப்போது பின்புற இருக்கையில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் தலையில் அடித்துக் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்தார்.

கொலை செய்யப்பட்ட பழனிவேல்
கொலை செய்யப்பட்ட பழனிவேல்

அவரின் சட்டைப் பாக்கெட்டிலிருந்து எடுக்கப்பட்ட அடையாள அட்டையின் மூலம் கொலை செய்யப்பட்டவர் நெய்வேலியைச் சேர்ந்த பழனிவேல் வயது 52 என்பதும், என்.எல்.சி 2-வது சுரங்க ஊழியர் என்பது தெரியவந்தது.

அதில் உள்ள முகவரியை வைத்து நெய்வேலியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற விழுப்புரம் காவல்துறையினர், அவரின் மனைவி மஞ்சுளாவிடம் (46) தகவல் தெரிவித்தனர். ஆனால், அவர் முகத்தில் எந்தவித பதற்றமும் இல்லாததுடன், ``அப்படி இருக்காதே… 4 மணிக்கு என்னிடம் சொல்லிவிட்டுத்தானே வெளியே போனார்” என்று சாதாரணமாகக் கூறியதால் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

சடலத்தை எடுத்துச் சென்ற வாகனம்
சடலத்தை எடுத்துச் சென்ற வாகனம்
தே.சிலம்பரசன்

தொடர்ந்து அந்த வீட்டுக்குள் காவல்துறையினர் சென்று சோதனை செய்தபோது அங்கு ரத்த வாடை அடித்ததுடன், வீடு முழுவதும் ரத்தம் சிதறிக் கிடந்ததையும், ரத்தக்கறை படிந்த மஞ்சுளாவின் புடவையையும் கண்டுபிடித்தனர். அதையடுத்து, அங்கிருந்த மஞ்சுளாவிடம் தங்கள் பாணியில் காவல்துறை கேள்விகளைக் கேட்கத் தொடங்கியதும் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், ``எங்களுக்கு 3 பிள்ளைகள். பெரிய பெண்ணுக்குத் திருமணம் செய்துவிட்டோம். இரண்டாவது மகள் இன்ஜினீயரிங் படித்து வருகிறாள். 3-வது மகன் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறான். என் கணவர் 2-வது சுரங்கத்தில் வேலை செய்துவருகிறார். அவருக்கு கை நிறைய சம்பளம். ஆனால், பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டிருந்த அவர் வீட்டுச் செலவுக்கு பணம் கொடுக்காததுடன், அவ்வப்போது என்னை அடித்துத் துன்புறுத்தி வந்தார். தினமும் இது தொடர்ந்து கொண்டிருந்ததால் அவரைக் கொலை செய்துவிட வேண்டும் என்று தோன்றியது.

சடலமாக பழனிவேல்
சடலமாக பழனிவேல்

அதனால் என் தம்பி ராமலிங்கத்தை அழைத்து, `முடியலடா தம்பி.. இந்தாள முடிச்சிவுட்டுடு'னு சொன்னேன். அவனும் 2 பேரை கூட்டிட்டு நேற்று மாலை 4 மணிக்கு என் வீட்டுக்கு வந்தான். அப்போதான் என் வீட்டுக்காரரு வேலையை முடித்துவிட்டு வந்தாரு. அவருகிட்ட பேசிக்கிட்டே என்னையும், என் சின்ன பையனையும் வீட்டை விட்டு வெளிய போகச் சொல்லிட்டான் என் தம்பி.

அதுக்கப்புறம் கதவை தாழ்ப்பாள் போட்டுட்டு, அங்கிருந்த இரும்பு ராடால் பலமுறை அவர் தலையில் அடிச்சி கொலை பண்ணாங்க. செத்துட்டாருனு தெரிஞ்சதுக்கப்புறம் சாக்குப் பையில் வச்சி கட்டிட்டு தம்பி எனக்குப் போன் பண்ணான். நான் வீட்டுக்குள்ள போனதும் அவர் சடலத்தை கார்ல வச்சி எடுத்துட்டுப் போயிட்டான். நான் அங்கிருந்த ரத்தக் கறையைத் தொடச்சி வீட்டைக் கழுவிவிட்டேன். ஆனாலும் போலீஸ் கண்டுபிடிச்சிட்டாங்க” என்றார்.

கொலை செய்யப்பட்ட பழனிவேல்
கொலை செய்யப்பட்ட பழனிவேல்

அதேசமயம் நம்மிடம் தனியாகப் பேசிய விசாரணை அதிகாரிகள், ``முழுமையான வாக்குமூலத்தை அவர் இன்னும் அளிக்கவில்லை. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறோம். கொலை செய்ததைத் தவிர இந்தப் பெண் கூறும் எந்தக் காரணமும் நம்பும்படியாக இல்லை. கொலை செய்யப்பட்ட ராமலிங்கத்துக்கு சோரியாசிஸ் வியாதி இருந்திருக்கிறது. அதனால் இந்தப் பெண்ணுக்கு வேறொருவருடன் தொடர்பு இருந்து, அதற்காகவும் கொலை நடந்திருக்கலாம். முழு விசாரணைக்குப் பிறகே உண்மையான காரணம் தெரியவரும்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு