Election bannerElection banner
Published:Updated:

ஈரோடு: ரூ.3 கோடி இன்ஷூரன்ஸ் பணம்; காரோடு எரிக்கப்பட்ட கணவர்! - மனைவி சிக்கியது எப்படி?

பற்றியெறியும் கார்
பற்றியெறியும் கார்

`ஓடும் காரிலிருந்து புகை வந்தது. இறங்கி என்னுடைய கணவரை மீட்பதற்குள் கார் முழுமையாகத் தீப்பிடித்து எரிந்ததில், அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்’ என மனைவி ஜோதிமணி போலீஸாரிடம் கூறியிருக்கிறார். உண்மையில் என்ன நடந்ததென்றால்...

ஈரோடு மாவட்டம், துடுப்பதியைச் சேர்ந்தவர் ரங்கராஜன் (62). விசைத்தறி தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வந்திருக்கிறார். கடந்த சில வருடங்களாக தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், ரங்கராஜன் சுமார் 1 கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவித்துவந்திருக்கிறார். இதற்கிடையே, ரியல் எஸ்டேட் பிசினஸ் சம்பந்தமாக கடந்த மாதம் 15-ம் தேதி ஈரோடு மாவட்டத்திலுள்ள கடம்பூர் மலைக்கு பைக்கில் சென்றவர், சாலை விபத்தில் சிக்கியிருக்கிறார். அதில் கால் எலும்பு முறிந்து படுகாயமடைந்தவர், கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்திருக்கிறார்.

உயிரிழந்த ரங்கராஜன்
உயிரிழந்த ரங்கராஜன்

ரங்கராஜனுக்கு காலில் அறுவை சிகிச்சை முடிந்து ஏப்ரல் 8-ம் தேதி இரவு, கோவை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி ஆம்னி காரில் ஈரோடு திரும்பியிருக்கிறார். ரங்கராஜனுடன் அவரின் மனைவி ஜோதிமணியும், ரங்கராஜனின் தங்கை மகன் ராஜாவும் உடன் வந்திருக்கின்றனர். கார் திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அருகே வந்தபோது தீப்பிடித்து பற்றியெறிந்திருக்கிறது. சாலையில் சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில், தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து காரில் ஏற்பட்ட தீயை அணைத்திருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தில் காரிலிருந்த ரங்கராஜன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.

`ஓடும் காரிலிருந்து புகை வந்தது. இறங்கி என்னுடைய கணவரை மீட்பதற்குள் கார் முழுமையாகத் தீப்பிடித்து எரிந்ததில், அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்’ என மனைவி ஜோதிமணி கண்ணீருடன் போலீஸாரிடம் புகார் கொடுத்திருக்கிறார். அதையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியிருக்கின்றனர். விசாரணையில் ஜோதிமணியும் ராஜாவும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறியிருக்கின்றனர்.

காரில் கருகிய நிலையில் ரங்கராஜன்
காரில் கருகிய நிலையில் ரங்கராஜன்

இதில் சந்தேகமடைந்த போலீஸார் மேலும் துருவியெடுக்க, `என் கணவர் ரங்கராஜனுக்கு ஒரு கோடி ரூபாய் அளவுக்குக் கடன் இருக்கிறது. கடன் கொடுத்தவர்கள் தினமும் வீட்டுக்கு வந்து தொந்தரவு செய்துவந்தனர். இதில் அவர் கடுமையான மன உளைச்சலில் இருந்துவந்தார். இதற்கிடையே அவர் பைக்கில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் கால் எலும்பு முறிந்து படுகாயமடைய, கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு சிகிச்சை கொடுத்தோம்.

`இனி என்னால் நடக்க முடியாது. நான் இறந்துவிட்டால் கடன்காரர்கள் பிரச்னையும் இருக்காது. நான் போட்டிருக்கும் 3 கோடி இன்ஷூரன்ஸ் தொகையை வைத்து நீங்களாவது நிம்மதியாக இருங்கள்’ என என் கணவர் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தார். அவருடைய விருப்பத்தின் பேரிலேயே அவரைக் கொல்ல முடிவு செய்தேன்.

கைதாகியுள்ள ஜோதிமணி - ராஜா
கைதாகியுள்ள ஜோதிமணி - ராஜா

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி காரில் கிளம்பினோம். கார் திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அருகே வந்தபோது சிறுநீர்க் கழிப்பதைப் போன்று கீழே இறங்கி நோட்டமிட்டோம். சாலையில் ஆள்நடமாட்டம் இல்லாத நேரம் பார்த்து, தயாராக பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை காரில் ஊற்றி பற்ற வைத்தோம். கார் பற்றியெரிந்ததும் அழுது கூச்சல் போட்டு கண்ணீர்விட்டோம். சாலையில் வந்தவர்கள் தகவல் கொடுக்க, தீயணைப்புத்துறையினர் வந்து காரை அணைத்தனர். எதிர்பாராதவிதமாக இந்தச் சம்பவம் நடந்ததைப்போல நாடகமாட நினைத்தோம். கடைசியில் சிக்கிக்கொண்டோம்’ என ஜோதிமணி போலீஸாரிடம் உண்மையைச் சொல்லியிருக்கிறார்.

அதையடுத்து ஜோதிமணியையும் உறவினர் ராஜாவையும் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு