Published:Updated:

செங்கல்பட்டு: `கழுத்தை அறுத்து, கார் ஏற்றிக் கொலை' - மனைவியைக் கொடூரமாகக் கொன்ற டாக்டர்

கொலை செய்யப்பட்ட கீர்த்தனாவுடன் கணவர் கோகுல்குமார்
கொலை செய்யப்பட்ட கீர்த்தனாவுடன் கணவர் கோகுல்குமார்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மனைவியின் கழுத்தை அறுத்த டாக்டர் கணவர், ஆத்திரம் தீராததால் காரை ஏற்றிக் கொடூரமாகக் கொலை செய்திருக்கிறார்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த ஆனந்தா நகரைச் சேர்ந்தவர் முரஹரி. இவரின் மகள் கீர்த்தனா (35). இவருக்கும் கோயம்புத்துரைச் சேர்ந்த டாக்டர் கோகுல்குமாருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. கீர்த்தனா, மேல்மருவத்தூரிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றிவந்தார். கோகுல்குமார், பொத்தேரியிலுள்ள தனியார் மருத்துவனையில் பணியாற்றினார்.

சடலமாக கீர்த்தனா
சடலமாக கீர்த்தனா
சென்னை: ரூ,20 லட்சத்துக்காகக் கொலை செய்யப்பட்ட ஐடி நிறுவன ஊழியர் - நாடகமாடியவர் சிக்கியது எப்படி?

இந்தத் தம்பதியருக்கு குழந்தை இல்லை. அதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கீர்த்தனா, தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அங்கு நேற்று மாலை சென்ற கோகுல்குமார், மனைவி கீர்த்தனாவிடம் பேசினார். அப்போது திடீரென கீர்த்தனாவின் கழுத்தைக் கத்தியால் அறுத்தார். வலியில் அவர் அலறித் துடித்தார். சத்தம் கேட்டு கீர்த்தனாவின் அப்பா முரஹரி, கீர்த்தனாவின் அம்மா குமாரி ஆகியோர் ஓடிவந்தனர். அவர்களையும் டாக்டர் கோகுல்குமார், கத்தியால் வெட்டினார். அதில் அவர்களும் காயமடைந்தனர்.

பின்னர், கீர்த்தனாவின் தலைமுடியைப் பிடித்து தெருவுக்கு இழுத்துவந்த டாக்டர் கோகுல்குமார், கீர்த்தனாவைக் காரை ஏற்றிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார். இது குறித்து தகவலறிந்ததும் மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், காயமடைந்த முரஹரி, குமாரி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் கீர்த்தனாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்

கோகுல்குமார், கீர்த்தனா
கோகுல்குமார், கீர்த்தனா

இந்தச் சூழலில் மனைவியைக் கொலை செய்துவிட்டு காரில் தப்பிய டாக்டர் கோகுல்குமார், அச்சரப்பாக்கம் சுங்கச்சாவடி அருகே செல்லும்போது தடுப்புச் சுவரில் மோதி விபத்தில் சிக்கினார். இது குறித்து தகவலறிந்த அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். காயமடைந்த கோகுல்குமாரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து தகவலறிந்த மதுராந்தகம் போலீஸார், டாக்டர் கோகுல்குமாரைக் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர். சிகிச்சை முடிந்த பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படவிருக்கிறார்.

இது குறித்து மதுராந்தகம் போலீஸார் கூறுகையில், ``டாக்டர் கோகுல்குமாருக்கும் அவரின் மனைவி கீர்த்தனாவுக்கும் இடையே குழந்தை இல்லாததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவந்திருக்கிறது. அதனால் கோகுல்குமாரிடமிருந்து விவாகரத்து பெற கீர்த்தனா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். மேலும், கீர்த்தனாவின் மீது டாக்டர் கோகுல்குமாருக்கு சந்தேகம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கோகுல்குமார், கீர்த்தனா
கோகுல்குமார், கீர்த்தனா

கீர்த்தனாவின் மீதான ஆத்திரத்தில் அவரைக் கத்தியால் குத்தியதோடு, காரை ஏற்றிக் கொலை செய்திருக்கிறார் கோகுல்குமார். தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.

மனைவியை காரை ஏற்றி டாக்டர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு