Published:Updated:

`மனைவிமீது சந்தேகம்; விடிய விடிய டார்ச்சர்' -குழந்தைகள் கண்முன்னால் தாய்க்கு நேர்ந்த கொடூரம்

அஞ்சம்மாள்
அஞ்சம்மாள்

அஞ்சம்மாளுக்கும் அவரின் உறவினருக்கும் பழக்கம் உள்ளதாக ராமுக்கு சந்தேகம் இருந்துவந்துள்ளது. அதன்காரணமாக, கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.

சென்னை செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சி, ஆட்டந்தாங்கல் பாலமுருகன் நகரைச் சேர்ந்த செல்வி (50), சோழவரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, `எனது மகள் அஞ்சம்மாள் (33). இவருக்கும் சிதம்பரம் சூர்யா நகரைச் சேர்ந்த ராமு என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள், ஒரு மகனும் உள்ளனர். என் மருமகன் குடும்பத்தோடு கடந்த 7 ஆண்டுகளாக பாலமுருகன் நகரில் குடியிருந்துவந்தார்.

முதலிரவில் கொல்லப்பட்ட மணமகள்! - திருவள்ளூர் மணமகனின் அதிர்ச்சிப் பின்னணி

என் மருமகன் ராமு, தினமும் குடித்துவிட்டு வந்து என் மகள் அஞ்சம்மாளை சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்வார். நான் செங்குன்றத்தில் உள்ள ஹோட்டலில் வேலைக்குச் சென்று இரவு அங்கேயே தங்கிவிடுவேன். 16.6.2020-ல் எனது மகளை மருமகன் அசிங்கமாகத் திட்டி, அவளை 16.6.2020-ல் அதிகாலை 4.30 மணிக்கு வீட்டிலிருந்த சுத்தியலால் அடித்து காயப்படுத்தியுள்ளார்.

அதைப்பார்த்த குழந்தைகள் அழுதுகொண்டு இருந்துள்ளனர். 16.6.2020-ல் எனது மகளின் குழந்தைகள் பக்கத்து வீட்டுக்குச் சென்று கதவை தட்டி எழுப்பி, அப்பா அம்மாவை அடித்துவிட்டு ஓடிவிட்டார் என்று கூறியுள்ளனர். உடனே அவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, அஞ்சம்மாள் ரத்த வெள்ளத்தில் காயங்களுடன் கிடந்துள்ளார். உடனே அவரை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஞ்சம்மாள் உயிரிழந்துவிட்டார்.

கொலை
கொலை
மாதிரிப் படம்

எனது மகளை சுத்தியலால் தலையில் அடித்துக் கொலை செய்த அவரின் கணவர் ராமு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகளின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு என்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில், சோழவரம் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் மேற்பார்வையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் கொலை (302) வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகிறார்.

இதுகுறித்து சோழவரம் போலீஸார் கூறுகையில், `` அஞ்சம்மாளை கொலை செய்த குற்றத்துக்காக ராமு என்கிற துளசிராமனைத் தேடிவருகிறோம். அஞ்சம்மாளுக்கும் அவரின் உறவினருக்கும் பழக்கம் உள்ளதாக ராமுக்கு சந்தேகம் இருந்துவந்துள்ளது. அதன்காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. சம்பவத்தன்று இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த ராமு, மனைவி அஞ்சம்மாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கணவனைக் கொன்ற மனைவி... மனைவியைக் கொன்ற கணவன்... போலீஸை தாக்கிய இளைஞர்!- `குடி'யால் திணறும் கோவை

இருவருக்கும் நடந்த தகராறில் தூங்கிக்கொண்டிருந்த மூன்று குழந்தைகளும் கண்விழித்துள்ளனர். அப்போது, அவர்களை சத்தம் போடாமல் இருக்கும்படி ராமு மிரட்டியுள்ளார். அதன்பிறகு, விடிய விடிய அஞ்சம்மாளை ராமு டார்ச்சர் செய்துள்ளார். ஆத்திரத்தில் சுத்தியலை எடுத்து அஞ்சம்மாளின் தலையில் ஓங்கி அடித்துவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

ரத்தவெள்ளத்தில் மயங்கிய அஞ்சம்மாளை குழந்தைகள் தட்டி எழுப்பியுள்ளனர். கண்விழிக்காததால், அதிகாலை 5 மணியளவில் பக்கத்து வீட்டின் கதவைத் தட்டி விவரத்தை குழந்தைகள் கூறியுள்ளனர். ராமு, லாரிகளில் லோடுமேனாக வேலைப்பார்த்துவருகிறார். அஞ்சம்மாளின் குழந்தைகளிடம் விசாரித்தபோது, அவர்கள் கூறிய தகவல்களை பதிவு செய்துள்ளோம். ராமு மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளோம்" என்றனர்.

குழந்தைகள் கண்முன் மனைவியை டார்ச்சர் செய்து கணவர் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு