Published:Updated:

சென்னை: மேஜையின் கீழ் மூட்டைகட்டி வைக்கப்பட்டிருந்த மனைவியின் சடலம்! - தலைமறைவான கணவன்

மனைவி கொலை
News
மனைவி கொலை

சென்னையில் மனைவியைக் கொலை செய்துவிட்டு, சடலத்தை மூட்டையில்கட்டி வீட்டுக்குள் மறைத்துவைத்திருந்த கணவனை போலீஸார் தேடிவருகின்றனர்.

சென்னை ஓட்டேரி, ஏகாங்கிபுரம் மெயின் தெருவைச் சேர்ந்தவர் சுலோச்சனா. இவர், ஓட்டேரி காவல் நிலையத்தில் 22.12.2021-ம் தேதி கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``என்னுடைய கணவர் வெங்கடேசன், 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எங்களுக்கு அமுதா, வாணி, பிரியா என மூன்று மகள்கள். அமுதாவுக்கும் வாணிக்கும் திருமணமாகிவிட்டது. பிரியா, மாற்றுத்திறனாளி என்பதால் அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. என்னுடைய மகள் வாணி, கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு பாடியிலுள்ள எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்த்தார். அப்போது மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

வாணி
வாணி

வாணி, 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார். என்னுடைய மருமகன் ரமேஷ் பூந்தமல்லியில் உள்ள எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்துவருகிறார். திருமணத்துக்குப் பிறகு வாணி, சௌகார்பேட்டையில் வீட்டு வேலை செய்துவந்தாள். வாணிக்கும் ரமேஷுக்கும் 15 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் பள்ளியில் படித்துவருகின்றனர். வாணிக்கும் மருமகன் ரமேஷுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். அப்போதெல்லாம் நான் சமாதானம் செய்துவைப்பேன். கடந்த 20.12.2021-ம் தேதி வாணிக்கும் ரமேஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்களை நான் சமாதானம் செய்துவிட்டு பேரப்பிள்ளைகளை என்னுடன் வீட்டுக்கு அழைத்து வந்தேன். 21.12.2021-ம் தேதி வழக்கம்போல பேரப்பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தனர். 22.12.2021-ம் தேதி காலை பேரப்பிள்ளையை அழைத்துக்கொண்டு வாணி வீட்டுக்குச் சென்றேன். அப்போது வீடு பூட்டியிருந்தது. அதனால் சாவி வைக்கும் இடத்திலிருந்து சாவியை எடுத்துத் திறந்தேன். உள்ளே சென்றபோது தூர்நாற்றம் வீசியது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அப்போது மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் வாணியின் சடலம் இருந்தது. வாணியைவிட ரமேஷ் நான்கு வயது இளையவர். வாணியைக் கையால் அல்லது ஆயுதத்தால் தாக்கி ரமேஷ் கொலை செய்திருக்கலாம். அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.

ரமேஷ்
ரமேஷ்

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``மனைவியைக் கொலை செய்துவிட்டு, சடலத்தைச் சாக்குமூட்டையில் கட்டி மேஜையின் கீழ் மறைத்துவைத்திருக்கிறார். அதன் பிறகு அவர் வீட்டைப் பூட்டிவிட்டு தலைமறைவாகியிருக்கிறார். வாணியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்திருக்கிறோம். ரமேஷ் சிக்கினால் மட்டுமே வாணி எப்படி, எதற்காகக் கொலை செய்யப்பட்டார் என்ற தகவல்கள் தெரியும்" என்றனர்.