Published:Updated:

கட்டையால் தாக்கிவிட்டு 108-க்கும் தகவல் சொன்னார்!- குமரியில் கணவன் கொலையில் சிக்கிய மனைவி

108 ஆம்புலன்ஸ் வேகமாக அங்கு சென்று பார்த்தபோது தலையில் ரத்தக்காயம் ஏற்பட்ட நிலையில் ஐயப்பன் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர்.

கொலை (Representational Image)
கொலை (Representational Image)

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கரியமாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (55). இவர் மரத் தச்சுவேலை செய்து வருகிறார். மரத் தச்சுவேலைக்கு சென்றுவிட்டு தினமும் மாலையில் அல்லது இரவு நேரத்தில் அவர் வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை ஐயப்பனின் மனைவி கிருஷ்ணவேணி 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து தன் கணவன், தவறி விழுந்ததில் தலையில் அடிபட்டுவிட்டது என தகவல் சொல்லியிருக்கிறார். 108 ஆம்புலன்ஸ் வேகமாக அங்கு சென்று பார்த்தபோது தலையில் ரத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர்.

கணவன்  ஐயப்பன்
கணவன் ஐயப்பன்

கோட்டாறு போலீஸார் அங்கு சென்று முதலில் ஐயப்பனின் மனைவி கிருஷ்ணவேணியிடம் விசாரணை நடத்தினர். அப்போது தன் கணவன் முந்தின நாள் இரவு வீட்டுக்கு வந்ததை நான் பார்க்கவில்லை எனவும், காலையில் பார்த்தபோது தலையில் அடிபட்ட நிலையில் கிடந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், கணவன் இறந்ததால் மிகவும் சோகத்தில் இருப்பதாகக் கூறி அழுது புரண்டிருக்கிறார்.

போலீஸார் துருவித் துருவி விசாரணை நடத்தியதில் கணவனை கட்டையால் அடித்துக் கொன்றதை கிருஷ்ண வேணி ஒப்புக்கொண்டார். அவர் போலீஸாரிடம் கூறுகையில், "எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்தமகள் காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டாள். இரண்டாவது மகள் கல்லூரியில் படித்துவருகிறாள். மூத்தமகள் ஓடிப்போனதிலிருந்து தினமும் குடித்துவிடு வந்து என்னிடம் தகராறு செய்வார். சம்பவத்தன்று இரவு குடித்துவிட்டு என்னைத் தாக்கினார். வலி பொறுக்க முடியாமல் அங்கு கிடந்த விறகுக் கட்டையால் தலையில் மூன்று முறை தாக்கினேன்.

மது பழக்கம்
மது பழக்கம்

அவர் குப்புற தரையில் விழுந்துவிட்டார். குடிபோதையில் கிடக்கிறார் என நான் கண்டுகொள்ளாமல் தூங்கிவிட்டேன். காலையில் அவர் எழுந்திருக்காமல் கிடந்ததால் 108-க்கு போன் செய்து அவர் விழுந்துவிட்டதாகத் தெரிவித்தேன். ஆனால், அவர்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்ததால் நான் மாட்டிக்கொண்டேன்" என்றார். இதையடுத்து கிருஷ்ணவேணியை போலீஸார் கைது செய்தனர்.