Published:Updated:

தோசை மாவில் தூக்க மாத்திரைகள்! - ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்த காதல் மனைவி

சென்னையில் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த கணவர் காலையில் இறந்துவிட்டார் என்று கதறி அழுது நாடகமாடிய காதல் மனைவி போலீஸிடம் சிக்கிக்கொண்டார்.

மனைவி அனுப்பிரியா
மனைவி அனுப்பிரியா

சென்னை புழல் புத்தகரம், திருமால்நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவர் புழல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், ``நான் புத்தகரம் ஐயன் திருவள்ளூவர் சாலையில் கறிக்கடை நடத்திவருகிறேன். என்னுடைய கடையில் கடந்த 2 ஆண்டுகளாக சுரேஷ் என்பவர் வேலைபார்த்துவந்தார். நான் அவருக்கு தினமும் கூலியாக 600 ரூபாய் கொடுத்துவந்தேன். கடந்த 14.10.2019 அன்று காலை 6.45 மணிக்கு சுரேஷுக்கு போன் செய்தேன். ஆனால், யாரும் போனை எடுக்கவில்லை. சுரேஷ் வேலைக்கு வராததால் மீண்டும் அவருக்கு போன் செய்தேன்.

அனுப்பிரியா
அனுப்பிரியா

அப்போது அவரின் போனில் பெண் ஒருவர் பேசினார். அந்தப் பெண், தன்னை ஹவுஸ் ஓனர் மகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு உடனடியாக சுரேஷ் வீட்டுக்கு வரும்படி பதற்றத்தோடு கூறினார். உடனே நான் சுரேஷ் குடியிருக்கும் வெங்கடசாய் நகருக்குச் சென்றேன். அங்கு வீட்டு வாசலில் சுரேஷின் மனைவி அனுப்பிரியாவும் ஹவுஸ் ஓனர் மகளும் நின்றுகொண்டிருந்தனர். அனுப்பிரியா, `குடித்துவிட்டு வந்த சுரேஷ் போதையில் என்னிடம் தகராறு செய்தார்.

பிறகு என்னை வீட்டை விட்டு வெளியில் தள்ளிவிட்டு படுக்கையறையில் படுத்துக்கொண்டார். காலை 6 மணி வரை சுரேஷ் வேலைக்குச் செல்லாமல் படுத்திருந்தார். அவரை நான் எழுப்பியபோது கண்விழிக்கவில்லை. மேலும், அவருக்கு மூச்சுப் பேச்சு இல்லை. இதனால் ஹவுஸ் ஓனருக்குத் தகவல் தெரிவித்தேன். அவரும் வந்து பார்த்தார். உடனே 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்தோம். அவர்கள் வந்து பார்த்தபோது சுரேஷ் இறந்துவிட்டதாகக் கூறினர். பிறகு காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு போன் செய்தேன்' என்று அவர் கூறினார். 13-ம் தேதி இரவு 8 மணிக்கு கடையில் நல்லபடியாக வேலை முடித்து வீட்டுக்குச் சென்ற சுரேஷ் திடீரென இறந்துள்ளார். எனவே, அவரின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் காளிமுத்து விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கொலை செய்யப்பட்ட சுரேஷ்
கொலை செய்யப்பட்ட சுரேஷ்

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``விழுப்புரத்தில் நடந்த உறவினர் திருமணத்துக்குச் சென்ற சுரேஷ், அங்கு அனுப்பிரியாவைச் சந்தித்துள்ளார். அதன்பிறகு இருவரும் காதலித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர். சென்னை புழல் புத்தகரம் பகுதியில் வாடகை வீட்டில் இருவரும் குடியிருந்தனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், சுரேஷ் இறந்துவிட்டதாக புழல் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் சுரேஷின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்.

பிரேதப் பரிசோதனையில் சுரேஷ் மூச்சுத் திணறி இறந்த தகவலையும் அவரின் கழுத்தில் காயங்கள் இருக்கும் தகவலையும் தெரிவித்தனர். இதனால் சுரேஷின் மரணம் குறித்து அவரின் மனைவி அனுப்பிரியாவிடம் விசாரித்தோம். இரவு குடித்துவிட்டு வந்த சுரேஷ் தன்னிடம் தகராறில் ஈடுபட்டதாக அனுப்பிரியா கூறினார். அப்போது சுரேஷின் கழுத்தில் எப்படி காயம் ஏற்பட்டது என்று அனுப்பிரியாவிடம் கேட்டதற்கு, அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார்.

தோசை மாவில் தூக்க மாத்திரைகள்! - ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்த காதல் மனைவி

போலீஸாரின் கிடுக்கிப்பிடி கேள்விகளால் அனுப்பிரியா சுரேஷை, தன்னுடைய ஆண் நண்பர் உதவியோடு கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அனுப்பிரியாவின் நடவடிக்கைகளில் சுரேஷுக்கு நீண்ட காலமாக சந்தேகம் இருந்துவந்துள்ளது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. விழுப்புரத்தைச் சேர்ந்த முரசொலிமாறன் என்பவருடன் அனுப்பிரியாவுக்கு பழக்கம் இருந்துவந்துள்ளது. சுரேஷைக் கொலை செய்வது தொடர்பாக முரசொலி மாறனிடம் அனுப்பிரியா ஆலோசித்துள்ளார்.

கடந்த 13-ம் தேதி இரவு வீட்டுக்கு வந்த சுரேஷுக்கும் அனுப்பிரியா ஆசையாக தோசை சுட்டுக் கொடுத்துள்ளார். அந்த தோசை மாவில் தூக்க மாத்திரைகளை அவர் கலந்து வைத்திருந்தார். ஏற்கெனவே குடிபோதையில் இருந்த சுரேஷ், தூக்க மாத்திரைகளைக் கலந்த தோசையை சாப்பிட்டதும் தூங்கி விட்டார். இதையடுத்து, முரசொலி மாறனுக்கு போனில் அனுப்பிரியா தகவல் தெரிவித்தார். அவரும் சுரேஷ் வீட்டுக்கு இரவில் வந்தார். இதையடுத்து, தூங்கிக்கொண்டிருந்த சுரேஷின் கால்கள், கைகளைப் பிடித்துக்கொண்டு அவரின் கழுத்தை கயிற்றால் இருவரும் இறுக்கியுள்ளனர். இதில் சுரேஷின் உயிர் தூக்கத்திலேயே பிரிந்துள்ளது.

`என் மனைவியைக் கொலை செய்துவிட்டேன்!'- ரத்தம் படிந்த கத்தியோடு காவல் நிலையத்துக்குச் சென்ற கணவன்

இதையடுத்து, முரசொலிமாறன் வெளியில் சென்றுவிட்டார். அதிகாலையில் சுரேஷ் கண்விழிக்கவில்லை என்று அனுப்பிரியா கதறி அழுது நாடகமாடியுள்ளார். பிரேதப் பரிசோதனை அறிக்கையால் அனுப்பிரியா எங்களிடம் சிக்கிக்கொண்டார். அவரிடமும் முரசொலிமாறனிடமும் விசாரணை நடத்திவருகிறோம். சுரேஷின் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி அனுப்பிரியா, முரசொலிமாறன் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளோம். அனுப்பிரியா, அந்தப்பகுதியில் உள்ள மெடிக்கல் ஸ்டோரில் வேலைபார்த்துவருகிறார். முரசொலி மாறன் விழுப்புரத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார்" என்றார்.

அனுப்பிரியாவிடம் போலீஸார் விசாரித்தபோது, `முரசொலிமாறன் என்னை அக்காள் என்று அழைப்பார். நானும் அவரிடம் தம்பி என்ற முறையில்தான் பழகினேன். ஆனால், எங்கள் நட்பை சுரேஷ் சந்தேகப்பட்டுப் பேசினார். அதனால்தான் சுரேஷைக் கொலை செய்ய முடிவு செய்தேன்' என்று கூறியுள்ளார்.