மும்பை அந்தேரி மேற்குப் பகுதியில் வசித்துவந்தவர் சந்தான கிருஷ்ணன் சாஸ்திரி (53). இவர் சிட்பி எனப்படும் இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியில் துணை மேலாளராகப் பணியாற்றிவந்தார். அவரின் மகன் அர்விந்த். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இன்ஜினீயரிங் படித்தார். அவர் கனடாவில் சென்று மேற்படிப்புப் படிக்க விரும்பினார். இதற்காகப் பணம் கொடுக்கும்படி அர்விந்த்தும், அவருடைய தாயார் ஜெய்ஷீலாவும் சாஸ்திரியிடம் கேட்டனர். ஆனால் சாஸ்திரி பணம் கொடுக்க முடியாது என்று தெரிவித்தார்.
இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. கோபத்தில் சாஸ்திரியைக் கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்துகொண்டதாக ஜோடிக்கத் திட்டமிட்டனர். இதையடுத்து இருவரும் சேர்ந்து சாஸ்திரியைக் கொலை செய்து 7-வது மாடியிலிருந்து கீழே தூக்கிப் போட்டனர். இது குறித்து, இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி அப்துல் ஷேக் கூறுகையில், ``அதிகாலை 4 மணிக்கு தாயும் மகனும் சேர்ந்து உறங்கிக்கொண்டிருந்த சாஸ்திரியைச் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

அதோடு அவரின் தலையை மரக்கட்டிலில் பல முறை ஓங்கி அடித்தனர். மேலும் கையில் இருந்த நரம்பை வெட்டினர். பின்னர் இதைத் தற்கொலையாக மாற்ற இருவரும் முடிவுசெய்தனர். ஆனால் அடித்ததில் சாஸ்திரி உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால், தங்களது முடிவை மாற்றிக்கொண்டு சாஸ்திரியைத் தாங்கள் வசித்த 7-வது மாடியிலிருந்து கீழே தூக்கிப்போட்டனர். வீட்டில் தரையில் சிந்திய ரத்தக்கரையைத் துடைத்து, துணியை வாஷிங் மெஷினில் போட்டனர். சாஸ்திரி கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்த கட்டட வாட்ச்மேன் உடனே போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.
நாங்கள் சென்றபோது தாயும் மகனும், தாங்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது வெளியில் குதித்துவிட்டார் என்று எங்களிடம் தெரிவித்தனர். கையில் வெட்டு இருப்பது குறித்துக் கேட்டதற்கு, முதலில் கையில் வெட்டிக்கொண்டு தற்கொலை செய்ய திட்டமிட்டு பின்னர் கீழே குதித்ததாகத் தெரிவித்தனர். வீட்டில் படுக்கை விரிப்புகள் அனைத்தும் அலங்கோலமாகக் கிடந்ததால் எங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து இருவரும் உண்மையை ஒப்புக்கொண்டனர்” என்றார்.
மற்றோர் அதிகாரி இது குறித்துக் கூறுகையில், ``ஜெய்ஷீலா தனது மகனின் படிப்புக்குப் பணம் கொடுக்கும்படி சாஸ்திரியிடம் பல முறை கேட்டிருக்கிறார். ஆனால் சாஸ்திரி பணம் கொடுக்கவில்லை. சென்னையிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் சாஸ்திரி மும்பைக்கு இடமாறுதல் மூலம் வந்திருக்கிறார்” என்று தெரிவித்தார். தாய் மகன் இரண்டு பேரும் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் மேற்கொண்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.