வேலூர் வேலப்பாடி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குமரவேல். 60 வயதாகும் இந்த நபர், லாரி ஷெட்டில் வேலை செய்துவந்தார். குமரவேலுவுக்கு கோமதி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் இருக்கிறார்கள். மூத்த மகள் திருமணமாகி, கணவர் பாலாஜியுடன் தாம்பரம் அருகேயுள்ள சிட்லபாக்கத்தில் வசித்துவருகிறார். இளைய மகள் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கிறார். இந்த நிலையில், குமரவேல் தினமும் மாலை நேரத்தில் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். அடிக்கடிக் கத்தியை எடுத்து, மனைவியைக் கொல்லவும் முயன்றிருக்கிறார்.

ஆறு மாதங்களுக்கு முன்பே குமரவேலுவின் குடும்பப் பஞ்சாயத்து, காவல் நிலையம் வரை சென்றது. அவரின் மனைவி கொடுத்த புகாரின்பேரில், போலீஸார் குமரவேலுவை அழைத்து எச்சரித்து அனுப்பியிருக்கிறார்கள். ஆனாலும், அவர் திருந்தாமல் தொடர்ந்து அட்டகாசம் செய்துவந்திருக்கிறார். நேற்று காலையிலிருந்தே மது போதையிலிருந்த குமரவேல் மனைவியிடம் வழக்கம்போல் தகராறு செய்து, ‘ஒண்ணு, நீ உயிரோடு இருக்கணும்... இல்லைன்னா நான் இருக்கணும்’ என்று கூறி கத்தியால் தாக்க முற்பட்டதாகக் கூறப்படுகிறது. குமரவேலுவின் தம்பி, வீட்டுக்கு வந்து அவரைக் கண்டித்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இரவு 10 மணிக்குமேல் ஆனபோதும், ஆத்திரத்திலிருந்த குமரவேல் மனைவியைக் கத்தியால் வெட்டியிருக்கிறார். அப்போது, தடுக்க வந்த இளைய மகளின் இரண்டு கைகளிலும் வெட்டு விழுந்தது. லேசான காயத்துடன் அவர் உயிர் தப்பினார். அதேபோல, கோமதியின் தலையிலும் கத்தி வெட்டு விழுந்தது. மகளையும் தன்னையும் காப்பாற்றிக்கொள்வதற்காக வேறு வழி தெரியாமல், கணவனிடமிருந்த கத்தியைப் பிடுங்கி திருப்பித் தாக்கியிருக்கிறார் கோமதி. இதில், அவரின் கழுத்தில் பலமான வெட்டு விழுந்தது.

ரத்தம் பீறிட்டு சுருண்டு விழுந்த குமரவேல் சிறிது நேரத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து, தகவலறிந்த வேலூர் தெற்கு காவல் நிலைய போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், காயமடைந்த கோமதியும், அவரின் மகளும் சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள். இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.