Published:Updated:

`விவசாய நிலத்தில் புதைக்கப்பட்ட காட்டு யானை!' -வனத்துறைக்கு அதிர்ச்சி கொடுத்த குடியாத்தம் விவசாயி

யானை புதைக்கப்பட்ட இடம்
யானை புதைக்கப்பட்ட இடம்

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த காட்டு யானையை யாருக்குமே தெரியாமல் பள்ளம் தோண்டி புதைத்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்துள்ள ஆந்திர எல்லை வனப்பகுதியில், `கௌண்டன்ய யானைகள் சரணாலயம்’ அமைந்திருக்கிறது. இங்குள்ள யானைகள் உணவு மற்றும் குடிநீர் தேடி அடிக்கடி தமிழக எல்லையோரம் உள்ள மோர்தானா அணை, சைனகுண்டா, தனகொண்டபல்லி, கொட்டமிட்டா உள்ளிட்ட வனப்பகுதிகளிலும் விளைநிலங்களிலும் புகுந்து பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கின்றன.

கடந்த மாதம் உயிரிழந்த காட்டு யானை
கடந்த மாதம் உயிரிழந்த காட்டு யானை

யானைகளின் நடமாட்டத்தைத் தடுக்க இரண்டு மாநிலங்களின் எல்லையோரங்களில் வசிப்பவர்கள், சட்டவிரோதமாக மின்வேலியை அமைத்துள்ளனர். அதைக் கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இருப்பினும், கடந்தாண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி, குடியாத்தம் பரதராமியை அடுத்த டி.பி.பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காவலேரி குட்டை வனப்பகுதியில், மின்வேலியில் சிக்கி பெரிய காட்டு யானை உயிரிழந்து கிடந்தது.

அதைத்தொடர்ந்து, மேலும் ஒரு பெரிய யானை கடந்த ஜனவரி மாதம் 21-ம் தேதி, சித்தூர் மாவட்டம், பங்காருபாளையம் மேற்கு வனச்சரகத்துக்குட்பட்ட தேக்குமந்தை-மொகிலி கோயில் வனப்பகுதியில் மின்சாரம் தாக்கிய நிலையில் இறந்துகிடந்தது. இதுதொடர்பான விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், மின்வேலியில் சிக்கி உயிரிழந்த மேலும் ஒரு யானையை யாருக்குமே தெரியாமல் பள்ளம் தோண்டி புதைத்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யானை புதைக்கப்பட்ட இடம்
யானை புதைக்கப்பட்ட இடம்

குடியாத்தத்தை அடுத்த மோடிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட மத்தேட்டிப்பல்லி குடிமிப் பட்டியில் பிச்சாண்டி என்பவர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து நெல் விவசாயம் செய்துவருகிறார். அவர், தன் நிலத்தைச் சுற்றி சட்டவிரோதமாக மின்வேலி அமைத்துள்ளார். இரண்டு நாள்களுக்கு முன் வனப்பகுதியையொட்டி சுற்றித்திரிந்த பெரிய காட்டு யானை, பிச்சாண்டி அமைந்திருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளது.

Vikatan

யாருக்கும் தெரியாமல், யானையின் உடலைத் தென்னை ஓலைகளைக் கொண்டு மூடி மறைத்த அவர், நேற்று மாலை ஜே.சி.பி பொக்லைன் எந்திரம் மூலம் பெரிய பள்ளம் தோண்டி புதைத்துள்ளார். இந்தத் தகவல் கலெக்டர் சண்முக சுந்தரம், மாவட்ட வன அலுவலர் பார்கவ்தேஜா ஆகியோருக்குத் தெரியவந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

யானை புதைக்கப்பட்ட இடம்
யானை புதைக்கப்பட்ட இடம்

சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினரும் வருவாய்த் துறையினரும் யானை புதைக்கப்பட்டுள்ள இடத்தைக் கண்டுபிடித்தனர். அதைத்தொடர்ந்து, யானையின் உடல் இன்று காலை தோண்டி எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக, சிலரைப் பிடித்து வனத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்திவருகிறார்கள். யானையின் உடலைப் புதைக்க உதவிய பொக்லைன் எந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.

அடுத்த கட்டுரைக்கு