Published:Updated:

எங்கே இருக்கிறார் எட்வின் ஜெயக்குமார்? - வங்கி கேஷியரை நெருங்கும் போலீஸ்! #TamilnaduCrimeDiary

 எட்வின் ஜெயக்குமார் #TamilnaduCrimeDiary
எட்வின் ஜெயக்குமார் #TamilnaduCrimeDiary

வங்கி அதிகாரி எட்வின் ஜெயக்குமார் விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகிவருகிறது. #TamilnaduCrimeDiary

திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவைச் சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் காசாளராகப் பணிபுரிகிறார். இவருக்கும், தஞ்சாவூர் மாவட்டம் ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த தாட்சர் என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

`மாணவிகளிடம் அத்துமீறும் கோவை ஆசிரியர்... நடவடிக்கை எடுக்கப்படுமா?' #TamilnaduCrimeDiary

திருமணமான நாளிலிருந்தே எட்வின் ஜெயக்குமார், தன் மனைவியுடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்துவந்தாராம். தொடர்ந்து அவர், செல்போனிலேயே மணிக்கணக்காக மூழ்கிக் கிடந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், எட்வின் ஜெயக்குமாரின் மனைவி தாட்சர் குடும்பத்தாரிடம் 50 பவுன் தங்க நகை கேட்டு துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், கணவரின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த தாட்சர், கணவரின் பீரோவை சோதனை நடத்தியதில், 10-க்கும் மேற்பட்ட செல்போன்கள் சிக்கியுள்ளன. அந்த செல்போன்களில், பல்வேறு பெண்களுடன் எட்வின் ஜெயக்குமார் இருப்பது போன்ற 100-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருக்கவே, அதிர்ந்துபோன தாட்சர், டிஐஜி லோகநாதனிடம் புகார் கொடுத்தார். தொடர்ந்து போலீஸாரின் விசாரணையில்... எட்வின் ஜெயக்குமார், வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களைத் தன் வலையில் வீழ்த்தி, அவர்களுடன் தவறாக நடந்து கொண்டதும் அதை வீடியோவாக எடுத்துவைத்து ரசித்ததும் தெரியவந்தது.

எட்வின் ஜெயக்குமார்
எட்வின் ஜெயக்குமார்

அதையடுத்து, எட்வின் ஜெயக்குமார் மற்றும் அவரது குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது அவர்கள் அனைவரும் தலைமறைவாகிவிட்டனர். ஜெயக்குமார், அவரின் குடும்பத்தாருடன் திருச்சி, ஸ்ரீரங்கம் உட்பட பல்வேறு பகுதிகளில் மாறி மாறி பதுங்கி இருப்பதாகத் தகவல் தெரியவே, அதுகுறித்த தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகிறார்கள். தலைமறைவாக உள்ள எட்வின் ஜெயக்குமாரை நெருங்குகிறது போலீஸ். அவர் சிக்கினால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்கிறார்கள் காவல் அதிகாரிகள். இந்த விவகாரத்தில் பல பெண்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டிருப்பதால், போலீஸ் மிக கவனத்துடன் வழக்கைக் கையாள்கிறது.

அடுத்த கட்டுரைக்கு