Published:Updated:

காத்திருக்கும் வெடிகுண்டு... அலர்ட் காஞ்சிபுரம்! #TamilnaduCrimeDiary

க்ரைம் ஸ்டோரி
க்ரைம் ஸ்டோரி

எந்தநேரம் எங்கு குண்டு வெடிக்குமோ, பட்டாக் கத்திகள் வீசப்படுமோ என காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

காஞ்சிபுரத்தில் கோலோச்சி வந்த ரவுடி ஸ்ரீதர், 2017-ல் கம்போடியாவில் தற்கொலை செய்துகொண்டார். ஸ்ரீதர் மறைவுக்குப் பிறகு அவரின் ஆதரவாளர்களுக்கிடையே ஸ்ரீதரின் இடத்தைப் பிடிப்பதற்காகக் கடுமையான போட்டி நடைபெற்று வருகிறது. ஶ்ரீதரின் கார் ஓட்டுநர் தினேஷ் மற்றும் ஸ்ரீதரின் மைத்துனர் தணிகாவுக்கு இடையே ஏற்பட்ட பகை பல கொலைகளுக்குக் காரணமாய் அமைந்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இருதரப்பிலும் நடைபெற்ற கொலைகள் காஞ்சிபுரத்தைப் பதற்றத்தில் உறையவைத்தன.

தினேஷ், தியாகு
தினேஷ், தியாகு

இந்தநிலையில் கடந்த மாதம் தினேஷ் மற்றும் `பொய்யாகுளம்’ தியாகு என இருவரையும் ஒரே இடத்தில் வைத்து காஞ்சிபுரம் காவல்துறையினர் கைது செய்தனர். இருவரையும் வெளியே வரமுடியாத அளவிற்கு குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்தார்கள். சிறையிலிருந்தே ஸ்கெட்ச் போட்டு கொலை செய்வதில் தினேஷ் கைதேர்ந்தவர் என்பதால் காஞ்சிபுரத்தில் பதற்றம் தணிந்தபாடில்லை.

சிறையில் இருக்கும் தினேஷை அவரின் ஆதரவாளர்கள் அவ்வப்போது சிறையில் சந்தித்து வருகிறார்கள். தன்னைச் சந்திக்க வரும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அசைன்மென்ட் கொடுக்கிறார் தினேஷ். அவரின் சமூகத்தைச் சேர்ந்த காஞ்சிபுரம் பகுதி கிராமத்து இளைஞர்களை மூளைச் சலவை செய்து கூலிப்படையாக மாற்றும் பணியை தினேஷின் ஆதரவாளர்கள் தொடங்கியிருக்கிறார்கள். 15 வயதிலிருந்து 25 வயதுடைய பள்ளி கல்லூரி மாணவர்களும் இப்பட்டியலில் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தணிகா
தணிகா

‘தினேஷ் பெயரைச் சொன்னாலே உங்களுக்கு நல்ல மரியாதை கிடைக்கும். அண்ணனுக்கு ஆதரவா இருந்தால் கெத்தாக வாழலாம்’ என இளைஞர்கள் தூண்டப்படுகிறார்கள். மேலும், அவர்களுக்கு மது, சிகரெட், கஞ்சா எனச் செலவு செய்யப்படுகிறது. ஒரு பெரிய படையையே ஜெயிலிலிருந்து தினேஷ் உருவாக்கிக்கொண்டிருப்பதாக உளவுத்துறை நோட் போட்டிருப்பதால், காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை ஹை அலர்ட்டில் வைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட எல்லையில் சமீபத்தில் இரட்டைக் கொலை நடந்தேறியது. கொலை நடப்பதற்கு இரண்டுநாள் முன்பு தணிகா கேங்கில் இருக்கும் இரண்டு பேரை தினேஷ் தரப்பினர் கடத்திச் சென்று தாமல் ஏரிக்கரையில் பதுக்கி வைத்து அடித்து துவைத்துள்ளார்கள். அங்கிருந்தே போன் மூலம் தணிகாவின் ஆதரவாளர் ஜீவாவையும் அவரின் நண்பரையும் பேசி வரவழைக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால் ஜீவா ‘வேலையாக இருக்கிறேன். என்னால் வரமுடியாது’ எனச் சொல்லியிருக்கிறார். அந்த இரண்டு பேரும் கடுமையாகத் தாக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் மூலம் திட்டம் தீட்டி மறுநாள் ஜீவாவை வரவழைத்திருக்கிறார்கள்.

கோபி, ஜீவா
கோபி, ஜீவா

கடந்த டிச.21-ம் தேதி உணவு டோர் டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் தன் நண்பன் கோபியை டூ வீலரில் உடன் அழைத்துக்கொண்டு திருவள்ளூர் மாவட்ட எல்லைக்கு ஜீவா சென்றிருக்கிறார். காஞ்சிபுரம் எல்லையை ஜீவா தாண்டியவுடன் கொலை செய்ய வேண்டும் என்பது தினேஷ் ஆதரவாளர்களின் திட்டம். இதனால் காஞ்சிபுரம் எல்லையைத் தாண்டி திருவள்ளூர் மாவட்டத்தில் 100 மீட்டர் தொலைவிற்குச் சென்றதும் குண்டு வீசி, கத்தியால் வெட்டிக் கொலை செய்திருக்கிறார்கள். சினிமா பாணியில் கொடூரமாக நடைபெற்ற இந்தக் கொலை பொதுமக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இந்தக் கொலையில் ஜமால் என்பவருக்கு முக்கியப் பங்கு உண்டு. தேவ் என்கிற ரவுடியின் கூட்டாளியான ஜமால், ஒருகாலத்தில் ஸ்ரீதரையே கொல்ல முயன்றவர். அதுபோல் தினேஷையும் கொல்ல முயன்றிருக்கிறார். ஆனால், எதிரிக்கு எதிரி நண்பன் கதையாக தற்போது தினேஷும் இவரும் நட்பாகி தணிகாவை எதிர்க்கிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தின் நம்பர் ஒன் தாதாவான வைரவன் என்பவனிடமிருந்து ஜமால் வெடிகுண்டுகளை வாங்கியிருப்பதாகக் கிடைத்திருக்கும் உளவுத் தகவல்தான் போலீஸை பீதியடையச் செய்துள்ளது.

தற்கொலை செய்த ரவுடி ஶ்ரீதர்
தற்கொலை செய்த ரவுடி ஶ்ரீதர்

எந்தநேரம் எங்கு குண்டு வெடிக்குமோ, பட்டாக் கத்திகள் வீசப்படுமோ என்கிற அச்சத்தில் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். ரவுடிகளை வேட்டையாடி வரும் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. சாமுண்டீஸ்வரி, “நான் இருக்கும் வரை முன்விரோதக் கொலைகள், ரவுடிகளின் மிரட்டல் எதுவும் இந்தப் பகுதியில் நடக்கக் கூடாது. அசம்பாவிதம் ஏதாவது நடந்தால் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் எந்தப் பதவியில் இருந்தாலும் பார்க்க மாட்டேன். அவர்களின் மீது நடவடிக்கை பாயும்” என்று கடுமையாக எச்சரித்திருக்கிறார்.

மேலும், குற்றவாளிகளுடன் தொடர்பில் இருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களை எஸ்.பி. எச்சரித்து அறிவுரை கூறியிருக்கிறார்.

ஜீவா, கோபியின் கொலை தொடர்பாக இதுவரை 49 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர். பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்னர் ரவுடிகளின் கொட்டத்தைக் காவல்துறை அடக்கி, ஆன்மிக நகரத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு