Published:Updated:

`தோஷம் இருக்கு!' - ஏமாற்றிய குடுகுடுப்பைக்காரன் வேடத்தில் வந்த நபர்... நகையை இழந்த பெண் தற்கொலை

``உங்களுக்குப் பிடிச்ச தோஷம் போக்க, முச்சந்தியில கழிப்பு கழிக்கணும். நான் கழிச்சிட்டு வரும் வரையில் வீட்டு வாசல் கதவை திறக்கக் கூடாது.’’

``உங்க வீட்டில் ஒரு உயிர் போகப்போகுது. அதுக்குக் காரணம் உங்க மகன்தான்" என்று குறி சொல்வதுபோல் நடித்து, இரண்டு பவுன் நகையைக் களவாடிச் சென்றிருக்கிறார் போலி குடுகுடுப்பைக்காரர் ஒருவர். இந்த விவகாரத்தில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அந்தப் பெண்ணை ஏளனமாகப் பேச, அவமானம் தாங்க முடியாமல் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மலைக்கோட்டை
திருச்சி மலைக்கோட்டை

ஸ்ரீரங்கம் பாரதி தெருவைச் சேர்ந்தவர் ஜெகன். இவரின் மனைவி சுகந்தி. இவர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு எட்டு மாதத்தில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. கணவருக்குச் சரிவர வேலை இல்லாமல் இருந்துவந்ததால் குடும்பம் நடத்தவே மிகுந்த சிரமப்பட்டிருக்கிறார்கள். கடந்த மாதம் 14-ம் தேதி அன்று அவர்கள் வீட்டு வாசலுக்கு வந்த குடுகுடுப்பைக்காரர் ஒருவர்,``உங்கு வீட்டில் ஒரு உயிர் போகப்போகுது. அதுக்குக் காரணம் உங்க மகன்தான்" என்று குடுகுடுப்பையை அடித்துக்கொண்டு குறி சொன்னதாகக் கூறப்படுகிறது.

இதைக் கேட்டு அதிர்ந்த சுகந்தி, குடுகுடுப்பைக்காரரை அழைத்து `எங்களுக்கு எப்போது நல்ல காலம் பிறக்கும்?’ என அவரிடம் குறி கேட்டிருக்கிறார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட குடுகுடுப்பைக்காரர், சோழி உருட்டி குறி பார்த்திருக்கிறார். அப்போது சுகந்திக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாகவும், உங்களுக்கு மகன் பிறந்திருக்கிறானா என்று கேட்டபோது, `ஆமாங்க பிறந்து எட்டு மாசம்தான் ஆகுது’ என்று சொல்லியிருக்கிறார்.

திருச்சி போலீஸார்
திருச்சி போலீஸார்

`உங்க குடும்பமும் ரொம்ப சிரமத்துல இருக்கா?’ என்று குடுகுடுப்பைக்காரர் கேட்டிருக்கிறார். `ஆமாங்க’ என்று பதில் சொல்ல, `அந்தக் குழந்தை பிறந்ததால அப்பாவுக்கு ஆகவில்லை. இப்படியே போனா உங்க கணவரோட உயிருக்கும் ஆபத்தா போய் முடியும்’ என்று சொல்ல, பதறியவர், `இதற்கு எதுவும் பரிகாரம் உண்டா?’ என்று கேட்டிருக்கிறார். `பரிகாரம் செய்துகொண்டால் மட்டுமே தோஷம் நிவர்த்தியாகி, வாழ்வில் வளம் சேரும்’ எனச் சொல்லியிருக்கிறார். இதை நம்பி பரிகார பூஜைக்கு ஒப்புக்கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பூஜைக்கு வைக்க வேண்டிய பால் நிரம்பிய செம்பில் சுகந்தி அணிந்திருந்த தாலி செயினை கழற்றிப் போடும்படி குடுகுடுப்பைக்காரர் சொல்லியிருக்கிறார். இதை நம்பி சுகந்தியும் இரண்டு பவுன் நகை கழற்றிப் போட்டிருக்கிறார்.

ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம்

சிறிது நேரம் மந்திரங்கள் சொல்வதுபோல் சொல்லிவிட்டு, "உங்களுக்குச் பிடிச்ச தோஷத்தைப் போக்க முச்சந்தியில கழுப்பு கழிக்கணும். நான் கழிச்சிட்டு வரும் வரைக்கும் வீட்டு வாசல் கதவைத் திறக்கக் கூடாது" என்று சொல்லிவிட்டுச் சென்ற குடுகுடுப்பைக்காரர் திரும்ப வீட்டுக்கு வரவில்லை. அதன் பிறகுதான் சுகந்திக்குத் தெரிந்திருக்கிறது, தாலியைக் கழற்றிக் கொடுத்து ஏமாந்துவிட்டோம் என்று. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விஷயம் தெரிந்ததும் `தாலி விஷயத்துல இப்படி ஏமாறலாமா?’ என்று ஏளனமாகப் பேச, இதனால் மன வேதனையில் இருந்துவந்த சுகந்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

உயிரிழந்த பெண்
உயிரிழந்த பெண்

இது குறித்து தந்தை லட்சுமணன் ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தியிடம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். குடுகுடுப்பைக்காரரின் உருவம் அந்தப் பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருப்பதால் அதன் அடிப்படையில் போலீஸார் அவரை வலைவீசி தேடிவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு