Published:Updated:

`10 ஆண்டுகளாகத் துன்புறுத்தல்!’ - பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் மீது பாலியல் குற்றச்சாட்டு

பாபர் அசாம்
பாபர் அசாம்

`பாபர் அசாம் எனது பள்ளித்தோழன். நானும், பாபர் அசாமும் ஒரே குடியிருப்பில்தான் குடியிருந்தோம். 2010-ம் ஆண்டில் அவர் என்னை காதலிப்பதாகத் தெரிவித்தார். நானும் அவரது விருப்பத்தை ஏற்றுக்கொண்டேன்.’

தன்னை 10 ஆண்டுகளாகத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவந்ததாகவும், பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் மீது பெண் ஒருவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

டிசம்பர் மாதம், 18-ம் தேதி நியூசிலாந்தில் நடக்கவிருக்கும் டி20 போட்டிகளுக்காக பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த வீரர்களும், நிர்வாகிகளும் நியூசிலாந்து சென்றிருக்கிறார்கள். அங்கு 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பாகிஸ்தான் வீரர்களில், ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் அவர்கள், சிகிச்சை மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், பாகிஸ்தானில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பெண் ஒருவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் கிரிக்கெட் வீரரும், அணியின் கேப்டனுமான பாபர் அசாம் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பான வீடியோ ஒன்றை அந்நாட்டு ஊடகவியலாளரான சாஜ் சாதிக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில் தன் பெயரைக் குறிப்பிட விரும்பாத அந்தப் பெண் பேசும்போது, ``பாபர் அசாம், எனது பள்ளித்தோழன். நானும், பாபர் அசாமும் ஒரே குடியிருப்பில்தான் குடியிருந்தோம். 2010-ம் ஆண்டில் அவர் என்னைக் காதலிப்பதாகத் தெரிவித்தார். நானும் அவரது விருப்பத்தை ஏற்றுக்கொண்டேன். அதன் பின்னர், நாங்கள் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து குடும்பத்தினரிடம் எங்கள் விருப்பத்தைக் கூறினோம். ஆனால், அவர்கள் எங்கள் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் இருவீட்டாருக்கும் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்துகொள்ளலாம் என்று பாபர் என்னிடம் வாக்குறுதியளித்தார். அவர் மேல் வைத்திருந்த நம்பிக்கையால், அவரது வார்த்தைகளை நம்பினேன்.

2011-ம் ஆண்டு வீட்டைவிட்டு வெளியேறி என்னை வெளியில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து, அதில் தங்கவைத்தார். `எப்போது திருமணம் செய்துகொள்ளப்போகிறோம்?’ என்று அவரிடம் கேட்கும்போதெல்லாம், `தற்போது சூழ்நிலை சரியில்லை. நேரம் வரட்டும்’ என்று காலம் தாழ்த்திவந்தார்.

பாபர் அசாமின் ஆரம்பகட்டத்தில் அவர் கிரிக்கெட் விளையாட பொருளாரதாரரீதியாகப் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தார். அப்போது நான் அவருக்குப் பண உதவிகளைச் செய்துவந்தேன். அதுமட்டுமன்றி, பாபர் பலமுறை எனக்குப் பாலியல் துன்புறுத்தல் செய்துவந்தார். இது குறித்து, நான் போலீஸாரிடம் புகாரளிக்க முற்பட்டபோது, என்னை மிகவும் மோசமான முறையில் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.

Babar Azam: அது `Fab Four’ அல்ல... `Fab Five’ - இங்கிலாந்திலும் மிரட்டும் பாபர் ஆசம்!

2016-ல் நான் கருவுற்றேன். அவர் தேசிய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்ததும், என்னைத் திருமணம் செய்துகொள்ளும் முடிவிலிருந்து முழுவதுமாகப் பின்வாங்கிவிட்டார். என்னைப்போல் வேறு எந்தப் பெண்ணுக்கும் இது போன்ற சம்பவங்கள் நிகழாமலிருக்க, என் சகோதர, சகோதரிகள் எனக்கு உதவ வேண்டும்” என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணியின் திறமைமிக்க பேட்ஸ்மேன்களில் பாபர் அசாமும் ஒருவர். அவர் மீது இது போன்ற குற்றச்சாட்டு எழுந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு