Published:Updated:

குடிபோதையில் தினமும் சித்ரவதை: சகோதரனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்த மனைவி கைது!

தினமும் குடிபோதையில் அடித்துத் துன்புறுத்திய கணவனை தன் சகோதரனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மும்பை அருகிலுள்ள பிவாண்டி என்ற இடத்தில் வசிப்பவர் சவிதா (35). சவிதாவின் கணவர் சஞ்சய் மதுவுக்கு அடிமையானவர் என்று சொல்லப்படுகிறது. தினமும் குடித்துவிட்டு வந்து தன் மனைவியை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார். சவிதாவின் வீட்டுக்குச் சற்றுத் தள்ளி அவரின் சகோதரர் அக்‌ஷய் வசித்துவந்தார். சம்பவத்தன்றும் வழக்கம்போல் சஞ்சய் மது அருந்திவிட்டு வந்து, மனைவியைப் போட்டு அடித்துக்கொண்டிருந்தார். அந்நேரம் சவிதாவின் சகோதரர் அக்‌ஷய் அங்கு வந்தார்.

தன் சகோதரியை மைத்துனர் அடித்து உதைப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அதைத் தடுக்க முயன்றார். அதோடு சஞ்சயை அடிக்க ஆரம்பித்தார். இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய் தன் மைத்துனரை அடித்து உதைக்க ஆரம்பித்தார். இதை அவரின் மனைவி தடுக்க முயன்றார். ஆனால் தன் சகோதரன் அடிபடுவதை சவிதாவால் தடுக்க முடியவில்லை. இதனால் கணவரின் கழுத்தைப் பிடித்து நெரிக்க ஆரம்பித்தார்.

சித்திரிப்புப் படம்
சித்திரிப்புப் படம்

அக்‌ஷயும் சுதாரித்துக்கொண்டு சஞ்சய் கழுத்தை நெரித்ததாகச் சொல்லப்படுகிறது. இதில் சஞ்சய் உயிரிழந்தார். இதை நேரில் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து சவிதா, அக்‌ஷய் இருவரையும் கைதுசெய்தனர். இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

துப்பாக்கி
துப்பாக்கி

இதற்கிடையே, மற்றோர் இடத்தில் விவாகரத்துக்கு மறுத்த மனைவியைக் கொலை செய்ய துப்பாக்கி வாங்கிய கணவன் கைதுசெய்யப்பட்டார். பிவாண்டி பகுதியில் வசிக்கும் கமல் ஷெகல் என்பவர், தனக்கு திருமணாகிவிட்ட நிலையில் வேறு ஒரு பெண்ணைக் காதலித்துவந்தார். அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய முடிவு செய்தவர், இதற்காகத் தன் மனைவியிடம் விவாகரத்து கேட்டார். ஆனால் அவர் மனைவி விவாகரத்து கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கமல், மனைவியைக் கொலை செய்ய முடிவு செய்து அதற்காக உத்தரப்பிரதேசத்திலிருந்து இரண்டு துப்பாக்கிகளை ரூ.50 ஆயிரத்துக்கு வாங்கினார். அவரது திட்டம் குறித்து போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீஸார் அதிரடி சோதனை நடத்தி, கமலைக் கைதுசெய்து அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறிமுதல் செய்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு