Published:Updated:

கேரளா: `இளைஞர் முகத்தில் ஆசிட் வீசிய 37 வயது பெண்... விபரீதத்தில் முடிந்த முகநூல் காதல்!'

27 வயது இளைஞர் மீது ஆசைப்பட்டு 37 வயது பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அருண் என்ற 27 வயது இளைஞருக்கும், இடுக்கி அடிமாலிப்பகுதியைச் சேர்ந்த ஷீபா என்ற பெண்ணுக்கும் முகநூல் வழியாக பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. தனக்கு திருமணம் ஆகவில்லை என அந்த பெண் கூறி அருணுடன் நட்பாக பழகியிருக்கிறார். பேஸ்புக்கில் சாட் செய்ததால் இவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஷீபா, இளைஞர் அருணை நேரில் சந்திக்க வேண்டும் என்ற தன் ஆசையைத் தெரிவித்திருக்கிறார். ஆனால், அந்த பெண்ணை நேரில் சந்தித்தபோதுதான் அவருக்கு 37 வயது ஆகிறது என்றும், ஏற்கெனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பதும் அருணுக்கு தெரியவந்தது. இது தெரிந்ததால் அந்த இளைஞர் பின்வாங்கத் தொடங்கினார்.

ஆனாலும், தன்னை திருமணம் செய்யும்படி ஷீபா அந்த இளைஞரை தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில், இளைஞர் திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என உறுதியாக மறுக்கவே, அவரிடம் ஷீபா இரண்டு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியிருக்கிறார். வேறு வழி தெரியாத இலைகண்ர் அருணும், பணம் கொடுப்பதற்கு இளைஞர் சம்மதித்திருக்கிறார். அதன்படி, அடிமாலி பகுதிக்கு வரும்படி இளைஞரை அழைத்திருக்கிறார் ஷீபா.

இளைஞர் மீது ஆசிட் வீச்சு
இளைஞர் மீது ஆசிட் வீச்சு

கடந்த 16-ம் தேதி இளைஞர் அருண் தன் நண்பர் ஒருவருடன் 14,000 ரூபாய் மட்டும் எடுத்துக் கொண்டு, அடிமாலிக்குச் சென்றிருக்கிறார். அப்போது, `உங்களுடன் நட்பை தொடர வேண்டும்!' என அருணிடம் கூறிய ஷீபா சற்றுத்தள்ளிச் சென்று நின்றிருக்கிறார். அருண் திரும்பி நின்ற சமயத்தில் தன் கைப்பையில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து வேகமாகச் சென்று, அருணின் முகத்தில் ஷீபா வீசியிருக்கிறார். அதில் அருண்அலறித் துடித்திருக்கிறார். அருணின் முகத்தில் பட்டு தெறித்த அசிட் ஷீபாவின் உடலிலும் பட்டிருக்கிறது.

பின்னர் கையால் ஆசிட்டை துடைத்த ஷீபா, உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அருணை அவருடன் சென்ற நண்பர் மீட்டு அடிமாலியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் அங்கிருந்து திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். விஷயம் வெளியே தெரிந்தால் மானம் போய்விடும் என பயந்து இதுபற்றி வெளியே சொல்லாமல் இருந்திருக்கிறார் அருண். இந்த நிலையில் ஆசிட் வீச்சால் அருணின் ஒரு கண் பார்வை பறிபோனதாக கூறப்படுகிறது. இதுகுறித்த சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 ஆசிட்
ஆசிட்

இதுகுறித்த தகவல் வெளியே கசிந்ததை அடுத்து போலீஸ் விசாரணை தொடங்கியது. அருணிடம் போலீஸார் புகார் வாங்கினர். கணவர் வீட்டிலிருந்த ஷீபாவை போலீஸார் கைது செய்தனர். அப்போது ஷீபவின் முகம் மற்றும் உடலில் ஆசிட் பட்ட காயங்கள் இருந்தன. ஷீபாவின் ஆசிட் வீச்சு சம்பவம் போலீஸார் சொல்லித்தான் அவர் கணவருக்கே தெரியவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஷீபா திருவனந்தபுரத்தில் ஹோம் நர்சாக பணிபுரிந்து வந்தார். அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்பது அருணுக்கு தெரிந்ததால் அவர் விலக ஆரம்பித்தார். திருமனத்துக்கு வேறு பெண்ணையும் பார்த்திருக்கிறார் அருண். இது ஷீபாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதால் ஆசிட் வீசவேண்டும் என்ற முடிவோடு வந்திருக்கிறார். ரப்பர் ஷீட் உறைய வைக்கும் ஆசிட்டை எடுத்துவந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

ஆசிட் வீசிய ஷீபா
ஆசிட் வீசிய ஷீபா

ஷீபா மீது ஆசிட் பட்ட காயங்களைக் கண்ட கணவர் அதுபற்றி கேட்டிருக்கிறார். சாதம் வடிக்கும்போது வென்னீர் பட்டதாக சொல்லியிருக்கிறார். அந்த காயத்துக்காக ஷீபா மருந்து வாங்க மருத்துவமனைக்கும் செல்லவில்லை. ஷீபா பணம் கேட்டு மிரட்டினாரா என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

27 வயது இளைஞர் மீது ஆசைப்பட்டு 37 வயது பெண் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு