Published:Updated:

`வேலையைப் பறிச்சிட்டாங்க; பாலியல் தொந்தரவு செய்றாங்க!' - கலெக்டர் ஆபீஸில் தீக்குளிக்க முயன்ற பெண்

மனநிலை சரியில்லை என்று வேலையைப் பறித்துவிட்டார்கள். இப்போது வேறு வேலை செய்யலாம் என ஒதுங்கி இருந்தாலும் என்னைப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்கிறார்கள்.

தற்கொலைக்கு முயன்ற சீதா
தற்கொலைக்கு முயன்ற சீதா

பேச்சிப்பாறை அருகே உள்ள ஆலம்பாறை மலையில் வசித்துவருபவர் சீதா. இவர் இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். பின்னர், திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயைத் தனது உடலில் ஊற்றி தற்கொலை செய்துகொள்ள முயன்றார். உடனே அங்கிருந்த காவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி 108 ஆம்புலன்ஸில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சீதாவிடம் போலீஸ் விசாரணை
சீதாவிடம் போலீஸ் விசாரணை

இதுகுறித்து சீதா கூறுகையில், "பேச்சிப்பாறை பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ராஜன் மற்றும் பாலன் ஆகியோர் என்னை கொலை செய்ய முயல்கிறார்கள். நான் முதலில் அங்கன்வாடியில் உதவியாளராகப் பணி புரிந்தேன். எனக்கு மனநிலை சரியில்லை என்று வேலையைப் பறித்துவிட்டார்கள். இப்போது வேறு வேலை செய்யலாம் என ஒதுங்கி இருந்தாலும் என்னைப் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்கிறார்கள்.

தற்கொலை எண்ணத்துல இருக்கிறவங்களுக்கு அட்வைஸ் வேண்டாம், ஆனால்..! #WorldMentalHealthDay

ஆலம்பாறை மலையில் வசிக்கும் காணி பழங்குடி பெண்ணான என்னை வாழவிடாமல் தொந்தரவு செய்வது குறித்து அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவேதான், கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டு தற்கொலை செய்ய முயன்றேன்" என்று கண்ணீருடன் கூறினார்.

சீதா
சீதா

இதுகுறித்து பேச்சிப்பாறை பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ராஜனிடம் கேட்டதற்கு, "இவர் அங்கன்வாடியில் பணி செய்தபோது ஆசிரியர்கள் மீது புகார் செய்து வந்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்துதான் சீதாவை மனநல சிகிச்சைக்காக அனுப்பினர். பாலன் என்பது அவரின் கணவர். இப்போது கணவரையும் பிரிந்துதான் வாழ்கிறார்.

அவர் அங்கன்வாடியில் வேலைபார்த்த சமயத்திலும், அவர்மீது விசாரணை நடந்த சமயத்திலும் நான் பஞ்சாயத்துத் தலைவராக இருந்தேன். எனவே, நான்தான் அவர் மீது புகார் அளித்ததாகத் தவறாக எண்ணி இப்படிச் செயல்படுகிறார் என நினைக்கிறேன். மற்றபடி அவருக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை" என்றார்.