Published:Updated:

`திருட்டு நகைகள் எங்கே?' -பெண்ணின் உயிரைப் பறித்த போலீஸ் டார்ச்சர்?

தற்கொலை
தற்கொலை

திருட்டு நகைகள் தன்னிடம் இல்லை என்று கூறியும் செல்வியை போலீஸார் தொடர்ந்து டார்ச்சர் செய்ததால், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்கின்றனர் அப்பெண்ணின் உறவினர்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காந்தி நகரைச் சேர்ந்தவர் பாண்டி (எ) ராஜேந்திரன்(40). இவரின் மனைவி செல்வி (38). திருட்டு வழக்கு சம்பந்தமாக பாண்டி கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். செல்வி திருட்டு நகைகளை வாங்கி விற்கும் பணியைச் செய்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், திருட்டு வழக்கு ஒன்றில் திருட்டில் ஈடுபட்ட நபரைப் பிடித்து அறந்தாங்கி போலீஸார் விசாரணை நடத்திய போது, `செல்வியிடம்தான் திருடப்பட்ட அனைத்து நகைகளும் இருக்கிறது' என்று கூற செல்வியைப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். போலீஸாருக்குப் பயந்து அவர் தன்னிடம் இருந்த நகைகள் அனைத்தையும் கொடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனாலும், ``உன்னிடம் திருட்டு நகைகள் இருக்கிறது, அதைக் கொடுத்துவிடு" என்று போலீஸார் மிரட்டியுள்ளனர். மேலும், விசாரணைக்கு அழைத்துச் சென்று நகையைக் கேட்டு டார்ச்சர் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த செல்வி, கடந்த ஜூன் 7-ம் தேதி மண்ணெண்ணெய் கேனுடன் அறந்தாங்கி காவல் நிலையத்துக்கு வந்துள்ளார்.

தீக்குளித்த செல்வி
தீக்குளித்த செல்வி

பின்னர், போலீஸாரின் செயலைக் கண்டித்து தன் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி திடீரென தீ வைத்துக்கொண்டார். அங்கிருந்த காவலர்கள் தீயை அணைத்து அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 50 சதவிகிதம் வரையிலும் அவருக்குத் தீக்காயம் ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். `திருட்டு நகைகள் எல்லாம் கொடுத்துவிட்டேன். மேலும் தன்னிடம் நகைகள் இல்லை' என்று கூறியும் செல்வியை போலீஸார் தொடர்ந்து டார்ச்சர் செய்ததால்தான் செல்வி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்கின்றனர் உறவினர்கள்.

இறந்த செல்விக்கு 2 மகள்கள், 1 மகன் என 3 குழந்தைகள் உள்ளனர். ஏற்கெனவே, பாண்டி சிறையில் இருக்கும் நிலையில் செல்வி இறந்துவிட்டதால், குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு