Published:Updated:

`குடிப்பழக்கத்தை நிறுத்திவிடு; இல்லையென்றால்...!' - கணவனால் மனைவி எடுத்த விபரீத முடிவு

``நீ குடிப் பழக்கத்தை விடவில்லையென்றால் குழந்தைகளையும் கொன்று நானும் செத்துவிடுவேன்" என மினி கூறியுள்ளார்.

கணவன் குடிப் பழக்கத்தால் தற்கொலை செய்துகொண்ட மினி
கணவன் குடிப் பழக்கத்தால் தற்கொலை செய்துகொண்ட மினி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அறுகுவிளைப் பகுதியைச் சேர்ந்தவர் பிரவின் ராஜு. நாகர்கோவிலில் வாடகை வேன் ஓட்டுநராக வேலை செய்துவருகிறார். இவருக்கு மினி (27) என்ற மனைவியும், ரபிஷா மோள், ரிச்சர்ட் மோனு என்ற இரண்டு குழந்தைகளும் இருந்தனர். கடந்த 19-ம் தேதி இரவு பிரவின்ராஜுக்கும் அவரின் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த மினி தனது இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்ததுடன், தானும் விஷம் குடித்திருக்கிறார்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

இதனால் பதறிய பிரவின் ராஜ் மனைவி மற்றும் குழந்தைகளை அருகிலுள்ள தனியார் மருத்துவமனை கொண்டுசென்றுள்ளார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சையில் இருந்த மினி சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார்.

விஷம் கொடுக்கப்பட்ட இரண்டு குழந்தைகளுக்கும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வடசேரி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையின் முதற்கட்ட தகவல் குறித்து போலீஸார் கூறுகையில், ``பிரவின் ராஜ் மது குடிக்கும் பழக்கம் உடையவர். மது குடிக்கக் கூடாது என்று பிரவின் ராஜிவிடம் அவரின் மனைவி மினி கூறிவந்துள்ளார். ஆனால், பிரவின் ராஜ் மதுக்குடிக்கும் பழக்கத்தை கைவிடவில்லை. இதனால் கணவன் மனைவி இடையே தினமும் தகராறு இருந்துவந்துள்ளது.

தற்கொலை எண்ணத்துல இருக்கிறவங்களுக்கு அட்வைஸ் வேண்டாம், ஆனால்..! #WorldMentalHealthDay

ஒரு கட்டத்தில், `நீ குடிப் பழக்கத்தை விடவில்லையென்றால் குழந்தைகளையும் கொன்று நானும் செத்துவிடுவேன்' என மினி கூறியுள்ளார். இந்த நிலையில்தான் கடந்த 19-ம் தேதி பிரவின் ராஜ் மது குடித்து வந்ததால் ஆத்திரம் அடைந்த மினி ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த விஷத்தை குடித்ததுடன், குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார். இதனால் பதறிய பிரவின் ராஜ், அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றார். ஆனால், அவரின் மனைவி இறந்துவிட்டார். குழந்தைகள் ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்" என்றனர். கணவனின் குடிப்பழக்கத்தால் மனைவி விஷம் குடித்து இறந்ததுடன், குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்த சம்பவம் நாகர்கோவிலில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.