Published:Updated:

`வீட்டுக்கு வருகிறேன், அழாமல் இரு!' - கணவன் ஆறுதல்; அவமானத்தால் உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண்

வீட்டுவாசலில் நின்று தலை சீவிக்கொண்டிருந்த கிருஷ்ணவேணி கடுமையாகத் தாக்கப்பட்டார். இதில் மன வேதனை அடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கிருஷ்ணவேணி
கிருஷ்ணவேணி

வீட்டு வாசலில் தலை சீவிக்கொண்டிருந்த பெண்ணை, பக்கத்து வீட்டுக்காரர் தாக்கியதால், மனமுடைந்த அப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தேனியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணவேணி & சதீஷ்
கிருஷ்ணவேணி & சதீஷ்

தேனி மாவட்டம், லட்சுமிபுரம் அருகே உள்ள சருத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரின் உறவுக்காரப் பெண் கிருஷ்ணவேணி. இருவரும் காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டார் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் 2 வயதில் சுபாஷ் என்கிற மகன் உள்ளார். கார் ஓட்டுநரான சதீஷ், தன் மனைவி கிருஷ்ணவேணி மற்றும் சுபாஷ் ஆகியோருடன் தேனி ஓடைத்தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், பக்கத்து வீட்டுக்காரரான சந்திரன், ஏதாவது காரணம் கூறி, அவ்வப்போது சதீஷ் மற்றும் கிருஷ்ணவேணியிடம் தகராறில் ஈடுபடுவார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 29-ம் தேதி மாலை தனது வீட்டு வாசலில் நின்று கிருஷ்ணவேணி தலை சீவியிருக்கிறார். அப்போது தெருவில் சென்றுகொண்டிருந்த சந்திரன், "நான் வீட்டில் இருந்து செல்லும்போதுதான் நீ தலையை விரித்து சீவிக்கொண்டு இருக்க வேண்டுமா. நான் போகிற காரியம் விளங்குமா?" எனக் கூறி கிருஷ்ணவேணியை ஆபாசமாகப் பேசியுள்ளார். எதிர்த்து கேள்வி கேட்டுள்ளார் கிருஷ்ணவேணி. இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருகட்டத்தில் கிருஷ்ணவேணி கையைப் பிடித்து இழுத்து தெருவில் தள்ளியுள்ளார் சந்திரன். மேலும், அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

சந்திரன்
சந்திரன்

இதில் கிருஷ்ணவேணி கையில் அணிந்திருந்த வளையல் கிழித்து கையில் ரத்தம் கொட்டியது. கிருஷ்ணவேணியின் அலறல் சத்தம் கேட்டதும், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து சந்திரனை தடுத்து நிறுத்தி எச்சரித்துள்ளனர். அதன் பின்னர் சந்திரன் அங்கிருந்து சென்று விட்டார். சந்திரன் தன்னைத் தாக்கியது குறித்து, கணவர் சதீஷுக்கு தொலைபேசியில் கண்ணீர் மல்க தகவல் தெரிவித்திருக்கிறார் கிருஷ்ணவேணி. "நான் வீட்டுக்குதான் வந்துகொண்டிருக்கிறேன். அழாமல் இரு..." என மறுமுனையில் ஆறுதல் கூறியுள்ளார் சதீஷ்.

``வருமானம் இல்லை!’’ - மணல் தட்டுப்பாட்டால் தற்கொலை செய்துகொள்ளும் ஆந்திரக் கட்டுமானத் தொழிலாளிகள்

ஆனால், சதீஷ் வீட்டுக்கு வரும் முன்னரே, அவமானம் தாங்கமுடியாமல், வீட்டின் கதவை உள்பக்கமாகத் தாழிட்டு, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார் கிருஷ்ணவேணி.

சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர், கிருஷ்ணவேணியின் உடலைக் கைப்பற்றி கானாவிலக்கு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர். தற்கொலைக்குக் காரணமான சந்திரன் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணவேணி
கிருஷ்ணவேணி

பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி, காதலித்து திருமணம் செய்துகொண்டு, சுயமாகச் சம்பாதித்து வாழ்ந்துவந்த தம்பதியின் வாழ்க்கை, மூடநம்பிக்கையில் மூழ்கிய ஒருவரின் செயலால் சிதைக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த வருத்தத்தையும் ஆறாத வடுவையும் ஏற்படுத்தியுள்ளது.