சென்னை மணலி பகுதியைச் சேர்ந்தவர் சரிதா. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்திருக்கிறார். அதில், ``நான் மேற்கண்ட முகவரியில் (மணலி) குடியிருந்து வருகிறேன். சென்னையில் காவலராகப் பணிபுரியும் செல்லத்துரை என்பவர் எனக்கு அறிமுகமானார். நாங்கள் இருவரும் விவாகரத்து பெற்றவர்கள் என்பதால் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்திருந்தோம். இந்தச் சூழலில் என்னிடம் ஆசை வார்த்தைகளை கூறி நகை, பணம், ஆகியவற்றை செல்லத்துரை வாங்கினார். அவருக்காக புது பைக் ஒன்றையும் நான் வாங்கிக் கொடுத்தேன். இதையடுத்து திருமணத்தைப் பதிவு செய்துகொள்ளலாம் என நான் சொல்கிறபோது ஏதாவது காரணங்களை சொல்லி செல்லத்துரை தட்டிக்கழித்து வந்தார். மேலும் அவரின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்ததால் செல்லத்துரை பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன்.

அப்போது அவரைப் பற்றி உண்மைகள் எனக்கு தெரியவந்தன. அது என்னவென்றால் அவரின் முதல் மனைவிக்கும் அவருக்கும் விவாகரத்து ஆகவில்லை என்று தெரிந்தது. மேலும் அவருக்கும் கல்லூரிப் பேராசிரியை ஒருவருக்கும் நட்பு இருப்பதும் தெரிந்தது. அவரின் செல்போனில் சில பெண்களின் போட்டோக்கள் இருந்தன. அது தொடர்பாக செல்லத்துரையிடம் கேட்டபோது என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். அதனால் நான் மிகவும் மனஉளைச்சலாகி செல்லத்துரையிடம், `உன் மேல் காவல்துறையிலிருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரியிடம் புகார் தெரிவிக்க போகிறேன்!' என்று கூறினேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதற்கு செல்லத்துரை என்னிடம் சம்பந்தப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரியும், அவருடைய மனைவியும தி.நகரில் உள்ள பிரபலமான ஜூவல்லரியில் சட்டத்துக்குப் புறம்பாக நகைகளை வாங்கியிருக்கிறார்கள். அதற்கு நான்தான் பினாமி. வருடந்தோறும் அவருக்காக நான் கையெழுத்திட்டு வருகிறேன். அவரால் என்னை எதுவும் செய்ய முடியாது.

அதையும் மீறி அந்த ஐ.பி.எஸ் அதிகாரி என்மீது நடவடிக்கை எடுத்தால், சட்டத்துக்குப் புறம்பாக ஐ.பி.எஸ் அதிகாரியும், அவரின் மனைவியும் வாங்கிய அசையும்... அசையாத சொத்துகள் குறித்து அம்பலப்படுத்துவேன் என்று என்னை மிரட்டினார். எனவே, என்னை ஏமாற்றிய செல்லத்துரைமீதும் அவரின் மனைவிமீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
போலீஸார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சரிதா புகார் தொடர்பாக காவலர் செல்லத்துரையிடம் விளக்கம் கேட்க அவரைத் தொடர்புகொண்டோம். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. அவர் விளக்கமளிக்கும் பட்சத்தில் அதை உரியப் பரிசீலனைக்குப் பின்னர் பதிவிடத் தயாராக இருக்கிறோம்.