Published:Updated:

`அவரால் தொல்லைகளை அனுபவித்தேன்!' -கோடம்பாக்கம் ஸ்ரீ மீது புகார் கொடுத்த பெண் யார்?

புகார் கொடுத்த பெண்
புகார் கொடுத்த பெண்

கோடம்பாக்கம் ஸ்ரீ மீது பெண் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் கீழ்ப்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அந்தப் புகார் மனு, கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தப் புகாரின்பேரில், கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது...

`அனைத்திந்திய இந்து மகா சபாவின் தலைவராக ஸ்ரீகந்தன் என்பவர் உள்ளார். இவர், எனக்கு மனரீதியாகவும் பாலியல்ரீதியாகவும் தொல்லைகொடுத்தார். அதோடு, கொலை மிரட்டல் விடுத்தார். நான், இந்து மகா சபாவில் கடந்த 2016-ல் சேர்ந்தேன். சமூக சேவையிலும் ஈடுபட்டுவந்தேன். பின்னர், மகளிர் அணியில் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டேன்.

புகார் கொடுத்த பெண்
புகார் கொடுத்த பெண்

டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். ஸ்ரீகந்தன் கூறியதன் பேரில், கமிஷன் அடிப்படையில் அவரிடம் வேலைபார்த்தேன். ஸ்ரீகந்தனுக்கு இந்தி தெரியாது. அதனால் என்னை அவருடன் டெல்லிக்கு அழைத்துச் செல்வார். டெல்லிக்குச் செல்லும் செலவை அவரே ஏற்றுக் கொள்வார். 2019-ல் எனக்கு ஒரு முக்கியப் பதவியைக் கொடுத்தார். அதன்பிறகு ஸ்ரீகந்தன், என்னைப் பிடித்திருப்பதாகக் கூறினார். அதை முதலில் நான் ஜோக்காக எடுத்துக்கொண்டேன். பின்னர், என்னைத் திருமணம் செய்துகொள்வதாக் கூறினார். அதற்கு நான், `இப்படி என்னிடம் பேசாதீர்கள்' என அவரைக் கண்டித்தேன். என்னைத் திருமணம் செய்துகொள்ளும் தகவலை உறவினர்களிடமும் கூறினார். இது எனக்கு மனவேதனையை அளித்தது.

இதையடுத்து, 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-வது வாரத்தில் எனக்கு பாலியல்ரீதியான தொல்லையைக் கொடுத்தார். செப்டம்பர் 15-ம் தேதி, என்னுடைய ராஜினாமா கடிதத்தை வாட்ஸ்-அப்பில் அனுப்பினேன். ஆனால் அவர், தன்னை மன்னித்துக்கொள்ளும்படி கூறினார். அதோடு, மீண்டும் இந்து மகா சபாவில் சேரும்படி கூறினார். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. நவம்பரில் என் சகோதார் திருமணம் என்பதால் எனக்குத் தரவேண்டிய பணத்தை ஸ்ரீகந்தனிடம் கேட்டேன். டெல்லியில் நிலுவையில் உள்ள வேலைகளை முடித்தால் பணத்தைத் தருவதாகக் கூறினார்.

எனக்கும் என் குடும்பத்துக்கும் ஸ்ரீகந்தனால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, எனக்கு நீதி கிடைக்க வேண்டும்.
புகார் கொடுத்த பெண்

பின்னர், நான் சென்னை வந்து என் சகோதரர் திருமண வேலையில் பிஸியாகிவிட்டேன். என் சகோதரர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஸ்ரீகந்தன் வந்தார். அங்கு வந்தவர்களிடம், என்னைப் பற்றி அவதூறான தகவல்களைக் கூறினார். மேலும், என்னுடைய சகோதரருக்கு செப்டம்பர் 12-ம் தேதி போன் செய்து மிரட்டினார். எனக்கும் என் குடும்பத்துக்கும் ஸ்ரீகந்தனால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, எனக்கு நீதி கிடைக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

புகாரின் பேரில், ஸ்ரீகந்தன் மீது 294 பி, 354 ஏ, 506 (1), 509 ஆகிய ஐபிசி சட்டப் பிரிவுகளின் கீழும், பெண்கள் வன்கொடுமைச் சட்டம் 4 ஆகிய பிரிவுகளின் கீழும் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து, புகார் கொடுத்த பெண்ணிடம் பேசினோம். ''மீட்டிங்கில் இருக்கிறேன். நடந்த விவரங்களைப் புகாராகக் கொடுத்துள்ளேன்" என்று மட்டும் கூறினார்.

இதையடுத்து, ஸ்ரீகந்தன் என்கிற கோடம்பாக்கம் ஸ்ரீ-யிடம் பேச முயற்சி செய்தோம். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை.

`அவரால் தொல்லைகளை அனுபவித்தேன்!' -கோடம்பாக்கம் ஸ்ரீ மீது புகார் கொடுத்த பெண் யார்?

அவரின் வழக்கறிஞர் சார்லஸிடம் பேசினோம். ``ஆங்கிலோ இந்தியனான அந்தப் பெண்மணி, தற்போது திருவள்ளூரில் குடியிருந்துவருகிறார். அவர், கோடம்பாக்கம் ஸ்ரீ என்கிற ஸ்ரீகந்தன் மீது கொடுத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். அதற்கான ஆதாரங்கள் இருந்தால் அவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கட்டும். இந்த வழக்கை சட்டப்படி நாங்கள் எதிர்கொள்வோம்.

கோடம்பாக்கம் ஸ்ரீ-யிடம், தன்னுடைய சகோதரர் திருமணத்துக்காக 20 லட்சம் ரூபாயைக் கடனாகக் கேட்டார். அந்தத் திருமணத்துக்கான செலவை கோடம்பாக்கம் ஸ்ரீ செய்தார். அதற்கான ஆதாரங்கள் எல்லாம் எங்களிடம் உள்ளன. அந்தப் பணத்தை திரும்பக் கேட்டதற்கு, டெல்லியில் உள்ள பா.ஜ.க செல்வாக்கைப் பயன்படுத்தி, கோடம்பாக்கம் ஸ்ரீ மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

அந்தப் பெண் கொடுத்த புகாரில், கோடம்பாக்கம் ஸ்ரீ, செப்டம்பர் மாதத்தில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் எனக் குறிப்பிட்டுள்ளார். அதன்பிறகு ஏன் தன்னுடைய சகோதரர் திருமணத்துக்கு வருமாறு கோடம்பாக்கம் ஸ்ரீக்கு அவர் அழைப்பு விடுத்தார்? அந்தப் பெண்மணி யார் என்பதை ஆதாரங்களுடன் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகாராகக் கொடுக்க உள்ளோம். பெங்களூருவில் நடந்த தொழிலதிபர் கொலை வழக்கிலும் அந்தப் பெண்மணிக்குத் தொடர்புள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு