Published:Updated:

`தாலி கட்டிட்டு சேர்ந்து வாழ மறுக்கிறார்!’ - ராணிப்பேட்டை நகராட்சி கமிஷனர் மீது புகாரளித்த இளம்பெண்

நகராட்சி கமிஷனர் செல்வ பாலாஜி
நகராட்சி கமிஷனர் செல்வ பாலாஜி

தாலி கட்டிய கையுடன் என்னை விட்டுச்சென்ற நகராட்சி கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வேலூர் எஸ்.பி அலுவலகத்தில், இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நேருஜி நகரைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகள் ரோஜா (23), குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் தற்காலிகப் பணியாளராகக் கடந்த ஆண்டு வேலை செய்தார். அப்போது, நகராட்சி கமிஷனராக இருந்த செல்வ பாலாஜி என்பவருடன் ரோஜாவுக்குக் காதல் மலர்ந்தது. மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த காதலிக்காக, செல்வ பாலாஜி 10 லட்சம் ரூபாய் வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டிக் கொடுத்து கடனையும் அடைத்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் காதல் விவகாரம் கமிஷனரின் தாய்க்குத் தெரியவந்தது.

காதலி ரோஜாவுடன் செல்வ பாலாஜி
காதலி ரோஜாவுடன் செல்வ பாலாஜி

தன் மகனை ஏமாற்றிப் பணம் பறிப்பதாக நினைத்து, காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். `தாயின் விருப்பமில்லாமல் திருமணம் செய்துகொள்ள வேண்டாம்’ என்று கமிஷனரும் முடிவாகச் சொல்லிவிட்டார். ஆத்திரமடைந்த காதலி ரோஜா, கடந்த ஆண்டு மே மாதம் 3-ம் தேதி, பிளேடால் தன் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணுக்கு வேண்டப்பட்ட சிலர், கமிஷனரை மிரட்டி பள்ளிகொண்டா ரங்கநாதர் கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

கையில் கட்டுடன் மணக் கோலத்தில் காத்திருந்த ரோஜாவைப் பார்த்து கமிஷனர் திகைத்துப் போனார். அவரை அழைத்துச் சென்ற நபர்கள், தாலியைக் கொடுத்து ரோஜாவின் கழுத்தில் கட்டுமாறு கமிஷனரைக் கட்டாயப்படுத்தியுள்ளனர். அவரும் தாலி கட்டினார். இதையறிந்து, அங்கு வந்த கமிஷனரின் தாய், `இந்த ரகசிய திருமணத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன்’ என்று கூறி மகனை மட்டும் கையுடன் அழைத்துச் சென்றுவிட்டார். மணக் கோலத்தில் தவித்த ரோஜா, குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தார்.

காதலி ரோஜாவுடன் செல்வ பாலாஜி
காதலி ரோஜாவுடன் செல்வ பாலாஜி

போலீஸார், இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அங்கு வந்த கமிஷனர் செல்வ பாலாஜி, `ரோஜாவுக்குத் தாலி கட்டியது உண்மைதான். தாயைச் சமாதானப்படுத்திய பிறகு ஓரிரு நாளில் வந்து மனைவியைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறேன்' என்று கைப்பட எழுதிக் கொடுத்துவிட்டு காரில் புறப்பட்டுச் சென்றார். அதையடுத்து, பணி மாறுதலாகி ராணிப்பேட்டை நகராட்சிக்கு வந்துவிட்ட செல்வ பாலாஜி, இதுநாள் வரை ரோஜாவைச் சந்திக்கச் செல்லவில்லை. போனில் தொடர்பு கொண்டு தன்னை அழைத்துச் சென்று குடும்பம் நடத்துமாறு ரோஜா கூறியிருக்கிறார்.

அதற்கு, ``என்னைத் தொந்தரவு செய்யாதே... இல்லையெனில், நீ என்னுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களை சமூக வலை தளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவேன்’’ என்று கமிஷனர் செல்வ பாலாஜி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் ரோஜா தற்போது புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், ``நகராட்சியில் நான் பணிபுரிந்தபோது, கமிஷனர் செல்வ பாலாஜி அவரின் பங்களாவுக்கு என்னைப் பலமுறை அழைத்துச் சென்று பாலியல் உறவு வைத்துக்கொண்டார்.

நகராட்சி கமிஷனர் செல்வ பாலாஜி
நகராட்சி கமிஷனர் செல்வ பாலாஜி

பின்னர், நான் வற்புறுத்தியதன் பேரில், கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார். பணி மாறுதலாகிச் சென்ற அவர் என்னைக் கைவிட்டு விட்டார். கடந்த 16-ம் தேதி, அவரை ராணிப்பேட்டையில் சந்தித்தேன். அப்போது, அவர் எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று மனுவில் கூறியுள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

இதுதொடர்பாக விளக்கம் கேட்க ராணிப்பேட்டை கமிஷனர் செல்வ பாலாஜியைப் பலமுறை தொடர்பு கொண்டோம். அவர் போனை எடுக்கவில்லை.

அடுத்த கட்டுரைக்கு