Published:Updated:

`சரிப்பட்டு வரமாட்டேன்; உனக்கு நல்ல பையன் கிடைப்பான்!'- பட்டதாரி பெண்ணை ஏமாற்றினாரா இன்ஜினீயர்?

எஸ்.மகேஷ்

ஃபேஸ்புக் மூலம் முதலில் பழகினேம், பிறகு அவர் எனக்கு தாலி கட்டினார். என்னை ஏமாற்றிவிட்டு 2-வது திருமணம் செய்ய சொந்த ஊருக்குச் சென்றுள்ளார் என்று சென்னை இன்ஜினீயர் மீது பட்டதாரி பெண் புகார் கொடுத்துள்ளார்.

usha
usha

சென்னையில் உள்ள மகளிர் தங்கும் விடுதியில் தங்கியிருப்பவர் உஷா (பெயர் மாற்றம்). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``நான் கணக்காளராகப் பணியாற்றினேன். வளசரவாக்கத்தில் தங்கியிருப்பதற்கு முன் வேளச்சேரியில் தங்கியிருந்தேன். அப்போது, தரமணியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக வேலை பார்த்த ரமேஷ் என்பவரை ஓராண்டாகக் காதலித்தேன். அவரும் என்னைக் காதலித்தார். என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றினார்.

complaint copy
complaint copy

கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையிலிருந்து ரமேஷ், தன்னுடைய சொந்த ஊரான நாமக்கல் மாவட்டத்துக்குச் சென்றுவிட்டார். அங்கு அவர் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

உஷாவிடம் பேசினோம். ``என்னுடைய சொந்த ஊர் கேரளா, நான் பி.பி.ஏ படித்துள்ளேன். சென்னையில் மகளிர் விடுதியில் தங்கியிருந்த சமயத்தில் ஃபேஸ்புக் மூலம் எனக்கு ரமேஷ் நண்பரானார். அதன்பிறகு இருவரும் நட்பாகப் பழகினார். பிறகு, இருவரும் காதலித்தோம். அப்போது அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறினார். நானும் அவரும் கணவன் மனைவி போல வாழ்ந்தோம். வேளச்சேரியில் ரமேஷ் தங்கியிருந்தபோது அவரின் வீட்டுக்கு நான் சென்றேன். அப்போது அவர் எனக்கு தாலி கட்டினார். சமீபகாலமாக ரமேஷின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது.

love
love

திடீரென ஒருநாள் என்னை வீட்டுக்கு வரும்படி கூறினார். அவரை நம்பி நான் சென்றபோது தாலியைக் கழற்றும்படி மிரட்டினார். நான் மறுத்ததால் என்னை சரமாரியாகத் தாக்கினார். பிறகு தாலியைக் கழற்றிவிட்டு நானும் அவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் எங்கள் காதலுக்கான அனைத்து ஆதாரங்களையும் அவர் அழித்துவிட்டார். அதன்பிறகுதான் வரும் புதன்கிழமை அவருக்கு திருமணம் என்ற தகவல் எனக்கு தெரியவந்தது. உடனே அவரிடமும் ரமேஷின் அப்பாவிடமும் போனில் பேசினேன். என்னிடம் உனக்கு நல்ல பையன் கிடைப்பான். நான் உனக்கு சரியாக இருக்க மாட்டேன் என்று ரமேஷ் கூறினார். மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால்தான் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன்" என்றார்.

ரமேஷிடம் போனில் பேசினோம். (அவரிடம் உஷா புகார் கொடுத்த தகவலைத் தெரிவித்ததும் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்) ``உஷாவும் நானும் பிரச்னையைப் பேசி முடித்துக் கொள்கிறோம் என்றவர், உஷா கூறுவதில் உண்மையில்லை. என்னுடைய திருமணத்தை உஷா தடுத்து நிறுத்திவிட்டார். இதனால் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க உள்ளேன். மேலும் என் தரப்பு உண்மைகளை நேரில் சந்தித்துக் கொடுக்கிறேன்" என்றார்.

usha
usha

இதுகுறித்து மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் விசாரித்தபோது ``கடந்த வாரம் உஷா கொடுத்த புகாரின்பேரில் ரமேஷிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் இருவரும் எழுதிக் கொடுத்துவிட்டு சென்றனர். பிறகு ஏன் கமிஷனர் அலுவலகத்தில் உஷா புகார் கொடுத்தார்" என்றனர்.

இதுகுறித்து உஷாவிடம் மீண்டும் பேசினோம். ``என்னை ரமேஷ் குடும்பத்தினர் ஏமாற்றிவிட்டனர். திருச்செங்கோடு காவல் நிலையத்திலும் போனில் பேசினேன். அவர்களும் நடந்த சம்பவம் சென்னை என்பதால் சென்னை காவல் நிலையங்களில் புகார் கொடுக்கக் கூறினார்கள். ஆதாரங்களை அழித்துவிடாமல் இருக்க அனைத்து ஆதாரங்களையும் சிடியாக வைத்துள்ளேன்" என்றார்.