Published:Updated:

’லாக்டெளனில் வழிதவறிய பெண்; பள்ளிக்கூடத்தில் தங்கவைத்த போலீஸ்’ - இளைஞர்களால் நேர்ந்த சோகம்

மாதிரி புகைப்படம்
மாதிரி புகைப்படம்

ராஜஸ்தானில் தனிமைப்படுத்தப்பட்ட கூலித்தொழிலாளியை இளைஞர்கள் சிலர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

ஊரடங்கு காலத்தில் சொந்த கிராமத்துக்கான பயணத்தின்போது வழிதவறிய 40 வயதுமதிக்கத்தக்க பெண்ணை மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உணவு, இருப்பிடம் போன்ற பிரச்னை காரணமாக தங்களது சொந்த ஊர்களுக்கு பயணமாகின்றனர். போக்குவரத்து வசதியில்லாததால் கால்நடையாகவே நடந்து செல்கின்றனர்.

ஊரடங்கு
ஊரடங்கு

ராஜஸ்தானில் 40 வயதுமதிக்கத்தக்க பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்றுள்ளார். பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அந்தப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தான் ஒரு கூலித்தொழிலாளி என்றும் ஊரடங்கு காரணமாக என்னுடைய சொந்த ஊருக்கு நடந்து செல்கிறேன் எனக் கூறியுள்ளார்.

ஊரடங்கு நேரம் என்பதால் அந்தப்பெண்ணை மேற்கொண்டு தனியாக செல்ல அனுமதிக்காத காவல்துறையினர் அருகில் இருந்த சவாய் மாதோபூர் கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் தங்கவைத்துள்ளனர்.

அந்தப்பகுதியில் அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட மையங்கள் இல்லை என்பதால் பள்ளிக்கூடத்தில் தங்கவைத்துள்ளனர். சவாய் மாதோபூர் கிராம மக்களிடம் போலீஸார் உதவி கேட்டுள்ளனர். கிராமத்தில் வேறு எங்கும் காலியான இடம் இல்லாததால் பள்ளியில் தங்கவைக்குமாறு கோரியுள்ளனர். இந்நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் அந்தப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்தப்பெண் அளித்த புகாரின் பேரில் மூவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாதிரி புகைப்படம்
மாதிரி புகைப்படம்

இதுகுறித்து பேசிய காவல்துறையினர், ‘அந்தப்பெண் 6 நாள்களுக்கு மேலாக நடந்து வந்துள்ளார். சவாய் மாதோபூர் கிராமத்தில் மக்கள் பள்ளியில் தங்கவைக்க அனுமதித்தனர். கடந்த சில நாள்களாக அவர் அங்குதான் தங்கியுள்ளார். இந்நிலையில் இளைஞர்கள் சிலர் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்தப்பெண் அளித்த புகாரின் பேரில் மூன்று இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். அவர்கள் மூவரும் 20 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது. அந்தப்பெண்ணின் மாதிரிகள் சோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என தெரியவில்லை. அவர் யாருடன் தொடர்பில் இருந்தார் என்ற விவரங்களையும் சேகரித்து வருகிறோம்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு