Published:Updated:

'தலைக்கேறிய போதை; குளித்துக்கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம்!' - இளைஞர்களால் பதறிய குளித்தலை

டாஸ்மாக் கடை முன்பு அந்தப் பெண்
டாஸ்மாக் கடை முன்பு அந்தப் பெண்

ஆற்றில் குழந்தைகளுடன் குளித்துக்கொண்டிருந்த பெண்ணிடம் மதுபோதையில் சில்மிஷத்தில் ஈடுபட்டு, குழந்தைகளையும் சேர்த்து தாக்கிய, ஆற்றில் தள்ளிவிட்ட இளைஞர்களால், அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள் குளித்தலைப் பகுதி மக்கள்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, தொடர் ஊரடங்கு விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், 43 நாள்களாக டாஸ்மாக்குகளும் தமிழகம் முழுக்க மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில், நேற்றுமுன்தினம் டாஸ்மாக்குகள் திறக்கப்பட்டன. டாஸ்மாக் திறப்புக்குப் பிறகு சில கொலைகளும், சமூக விரோதச் செயல்களும் அதிகரித்தன. அந்த வகையில், குளித்தலையில் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த பெண்ணிடம், மதுப்போதையில் இருந்த இரண்டு இளைஞர்கள் சில்மிஷத்தில் ஈடுப்பட்டச் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குளித்தலை பெரிய பாலம் அருகே உள்ள மலையப்ப நகரைச் சேர்ந்தவர் சுதா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). சுதாவிற்கு மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை என நான்கு குழந்தைகள் உள்ளனர். சுதாவின் கணவர் விவசாயக் கூலி வேலை பார்த்து வருகிறார்.

அந்த டாஸ்மாக்
அந்த டாஸ்மாக்

அவர் வேலைக்குச் சென்ற நிலையில், சுதா குழந்தைகளுடன் ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்கள் பெரிய பாலம் அருகே உள்ள மதுக்கடையில் மதுவை வாங்கி அதிகமாகக் குடித்துவிட்டு, அதீத போதையுடன் ஆற்றிற்கு வந்துள்ளனர். அவர்களில் மூன்று இளைஞர்கள் வீட்டுக்குச் சென்றுள்ளனர். மீதம் இருந்த இரண்டு இளைஞர்கள் மட்டும் ஆற்றுக்குள் குளிப்பது போல் சென்று, சுதாவிடம் தகாத முறையில் ஈடுபட முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், 'ஏன் இப்படி பண்றீங்க?' என்று கேட்டபோது, அந்த இரண்டு இளைஞர்களும், சுதா மற்றும் குழந்தைகளை காலால் உதைத்தும், அடித்தும் தாக்கியதோடு, அவர்களைத் தண்ணீரில் தள்ளிவிட்டுச் சென்றுள்ளனர்.

`காசு இல்லன்னா வெளியே போ!' -கரூரில் வீட்டு உரிமையாளரால் கட்டடத் தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்

இதனால், அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டில் விட்டுவிட்டு, நேராக மதுபானக் கடைக்குச் சென்றுள்ளார். 'நீங்கள் மது விற்பதால்தான் நிம்மதியாகக் குழந்தைகளுடன் நாங்கள் குளிக்கக் கூட முடியலை. அதனால், மதுவை விற்காதீங்க. உடனடியாக கடைய மூடுங்க' என்று கடையின் முன்பு நின்று சத்தம் போட்டுள்ளார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், அந்தப் பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தி `நீ காவல் நிலையத்தில் புகார் கொடு' என அனுப்பி வைத்தனர். இந்நிலையில், அந்தப் பெண், குளித்தலை காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்திருக்கிறார். ஆனால், அங்கிருந்த ஒரு காவலர், 'காவலர்கள் அனைவரும் மதுபானக் கடைகளுக்குப் பாதுகாப்பு பணிகளுக்குச் சென்றுள்ளதால், `மாலை நேரத்தில் வா. அப்போது விசாரித்துக் கொள்ளலாம்' என்று புகார் மனுவை வாங்கி விட்டு, அந்தப் பெண்ணை அனுப்பிவைத்துள்ளனர்.

டாஸ்மாக் கடை முன்பு அந்தப் பெண்
டாஸ்மாக் கடை முன்பு அந்தப் பெண்

இதற்கிடையில், அந்தப் பெண்ணை டாஸ்மாக் கடை அருகில் இரண்டு பேர் போதையில் தாக்கியதாகத் தெரிகிறது. இதனால், அந்தப் பெண்ணிற்கு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் அந்தப் பெண்ணை ஆட்டோவில் ஏற்றி, குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அந்தப் பெண் சிகிச்சை பெற்று வருகிறார். சுதாவிடம் மதுபோதையில் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்ற இளைஞர்கள் இருவரும் கல்லூரியில் படித்து வருகிறார்கள். ஆனால், இதுவரை அந்த இளைஞர்கள் மீது குளித்தலை காவல் நிலையத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் சொல்கிறார்கள்.

இது குறித்து, குளித்தலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாரதியிடம் பேசினோம். "நிறைய புகார்கள் வந்துள்ளன. இதில் நீங்கள் சொல்லும் புகார் எது என்று தெரியவில்லை. எனக்கு வந்திருக்கும் புகார்களைப் பார்த்துட்டு, பிறகு உங்களிடம் பேசுகிறேன்" என்று பேசினார்.

அந்த டாஸ்மாக்
அந்த டாஸ்மாக்

இளைஞர்கள் அதிக மதுவை வாங்கி அருந்திவிட்டு குளித்துக்கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் குளித்தலைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு