மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகில் சிக்ராபூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா (25). இவருக்கு 3, 5 வயதில் மகனும், மகளும் இருந்தனர். பிரியங்கா தன் ஆண் நண்பர் குணால் கெய்க்வாட் (29) என்பவருடன் தன்னுடைய குழந்தைகளை அழைத்துக்கொண்டு மும்பை அருகிலுள்ள அலிபாக்குக்கு வந்தார். அவர்கள் அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்துத் தங்கினர்.
இந்நிலையில் பிரியங்காவின் கணவர் சந்தீப், தன் மனைவி, குழந்தைகளைக் காணவில்லை என்று கூறி போலீஸில் புகார் செய்திருந்தார். இதே போன்று குணால் மனைவியும், தன் கணவரைக் காணவில்லை என்று புகார் செய்திருந்தார்.

இந்த நிலையில் காலை 11 மணி வரை பிரியங்காவும், குணாலும், குழந்தைகளும் லாட்ஜ் அறையைவிட்டு வெளியில் வரவில்லை. லாட்ஜ் ஊழியர்கள் கதவைத் தட்டியபோதும் திறக்கப்படவில்லை. இதனால் அறை ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது, இரண்டு பேர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தனர். உடனே இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து கதவை திறந்தபோது பிரியங்காவும் குணாலும் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருந்தனர்.
குழந்தைகள் கட்டிலில் இறந்துகிடந்தனர். அவர்கள் இரண்டு பேருக்கும் விஷம் கொடுத்து கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். போலீஸாரின் விசாரணையில், பிரியங்கா வீட்டுப் பணிகளை கவனித்து வந்ததும், குணால் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்வதும் தெரியவந்தது. குணாலுக்கு ஒரு மகள் இருக்கிறார். இருவருக்குமிடையே திருமணம் தாண்டிய உறவு இருந்திருக்கலாம் என்றும், குடும்பத்துக்கு பயந்து இருவரும் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்றும் போலீஸார் தெரிவித்தனர்
