காரைக்காலில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்த அடுத்த சில நாள்களிலேயே, கொரோனா சிகிச்சையிலிருந்து மீண்ட அவரின் மனைவியும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

காரைக்கால் மாவட்டம், பிள்ளைத்தோட்டம் வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் ரஜினிபாபு (வயது 55). இவர் ஆரம்பத்திலிருந்தே ரஜினி ரசிகராக இருந்துவந்தார். ரஜினி ரசிகர் மன்றத் தலைமையுடன் நெருக்கமாக இருந்துவந்த இவர், காரைக்கால் மாவட்டத்தில் ரஜினி நற்பணி மன்றத்தின் மூலம் பல்வேறு நற்பணிகளையும் செய்துவந்தார். அண்மையில் கொரோனா தொற்றால் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த ரஜினிபாபு, சிகிச்சை பலனின்றி கடந்த ஜனவரி 17-ம் தேதி உயிரிழந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரஜினிபாபுவின் மனைவி சுசி (46) நோய்த்தொற்றில் படுக்கையிலிருந்தவரை உடனிருந்து பார்த்துக்கொண்டதன் காரணமாக, அவருக்கும் கொரோனா பாதிப்பு தொற்றியது. அவரும் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சுசி சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் வீடு திரும்பினார். சுசியை அவர் மகள் கவனித்துவந்திருக்கிறார்.
கணவர் ரஜினிபாபுவின் மரணம் குறித்து சுசி உறவினர்கள், அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் தனது வேதனையைப் பகிர்ந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சுசி சாப்பிட்டுவிட்டு தூங்கச் செல்வதாக தன் மகளிடம் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார். பின்னர் நேற்று அதிகாலை வீட்டிலிருக்கும் மின்விசிறியில் சுசி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். கணவன் ரஜினிபாபு இறந்த மனவேதனையில் சுசி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து நகர காவல் நிலையத்தில் சுசியின் மகள் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீஸார் சுசியின் உடலைக் கைப்பற்றி வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். காரைக்காலில் மூத்த ரஜினி ரசிகர் கொரோனாவால் மறைந்த சில நாள்களில், அவர் மனைவியும் இறந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.