உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவிலுள்ள ஹரி பர்வத் பகுதி காவல்நிலையத்தில் கடந்த ஜூன் 24-ம் தேதி 28 வயதான பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில், ``20 வயதான ராகுல் சிகர்வார் என்பவர் என்னுடையப் பிறந்த நாளை கொண்டாட ஒரு ஹோட்டலுக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கு குளிர்பானத்தில் போதை மருந்து கலந்துகொடுத்து நான் மயக்க நிலையில் இருக்கும்போது என்னைப் பாலியல் வன்கொடுமைசெய்து அதை வீடியோவாகப் பதிவு செய்துகொண்டார். இந்தச் சம்பவத்தை யாரிடமாவது கூறினால் அதை பகிரங்கப்படுத்துவேன் என்றும் மிரட்டினார். எனவே, அவர்மீது வழக்கு பதிவுசெய்து கைதுசெய்யவேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட ராகுல் சிகர்வார்மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை விசாரித்தபோது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.
இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் ஊடகவியலாளர்களிடம், ``ராகுல் சிகர்வார்மீது பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், புகாரளித்த அந்த பெண்ணும் அவரின் மூன்று வழக்கறிஞர்களான ஜிதேந்திர ராஜ்புத், நிஷாந்த் குமார், சேகர் பிரதாப் சிங் ஆகியோர் ராகுலிடமிருந்து ரூ.5 லட்சம் பணம் பறிக்க சதி செய்தது தெரியவந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்தப் பெண்ணுடன், அவருக்கு உதவிய இரண்டு வழக்கறிஞர்களைக் கைதுசெய்திருக்கிறோம். பெண்ணின் வழக்கறிஞருக்கு உதவிய ராகுலின் வழக்கறிஞர் அவினாஷ் வைஷ்யா உட்பட மேலும் இரண்டு வழக்கறிஞர்கள் இன்னும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தீவிரமாக தேடி வருகிறோம்" எனத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.