Published:Updated:

`கார்டு மேலே இருக்கும் 4 நம்பர் சொல்லுங்க' - ஆன்லைனில் உடை வாங்கிய பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி!

ஆன்லைன் மோசடி
ஆன்லைன் மோசடி ( Representational Image )

மும்பையில் இளம்பெண் ஒருவர் ஆன்லைனில் வாங்கிய உடை ஒன்றை திருப்பிக் கொடுக்க நினைத்து ரூ.2 லட்சத்தை இழந்துள்ளார். ஆனால் அந்தப் பணத்தை போலீஸார் 36 மணி நேரத்தில் மீட்டுக்கொடுத்தனர். அது எப்படி நடந்தது?

நாட்டில் சமீபகாலமாக ஆன்லைன் மோசடிகள் அதிக அளவில் நடந்துவருகின்றன. மோசடிப் பேர்வழிகள் அமேஸான் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு போன் செய்பவர்களையும் விட்டுவைப்பதில்லை. ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை எண்ணை ஒத்த, எண்களை மோசடிக்காரர்கள் இணையத்தில் பதிவிடுகின்றனர். இதைப் பொதுமக்கள் கவனிக்காமல் அந்த நம்பருக்கு போன் செய்து மோசடி வலையில் சிக்கிக்கொள்கின்றனர். அது போன்ற ஒரு சம்பவம்தான் மும்பையின் வடக்குப் பகுதியில் காந்திவலியில் நடந்துள்ளது.

ஸ்வேதா-மீனா
ஸ்வேதா-மீனா

ஸ்வேதா தலால் என்ற பெண் ஆன்லைனில் ஆர்டர் செய்து சில உடைகளை வாங்கினார். அதில் ஓர் உடையை மட்டும் திருப்பிக் கொடுக்கத் திட்டமிட்டார். இதையடுத்து ஆன்லைனில் அந்த இணையதளத்தின் வாடிக்கையாளர் எண் இருக்கிறதா என்று ஸ்வேதா தேடிப்பார்த்தார். அதில் ஒரு நம்பர் இருந்திருக்கிறது. அந்த நம்பரை ஸ்வேதா தொடர்புகொண்டபோது ராகுல் என்பவர் பேசினார். ராகுல் அந்தப் பெண்ணிடம் நீங்கள் கூகுள் பே அல்லது ஃபோன் பே பயன்படுத்துகிறீர்களா என்று கேட்டிருக்கிறார். ஸ்வேதா சுதாரித்துக்கொண்டு இல்லை என்று தெரிவித்துவிட்டார்.

உடனே ராகுல் `நான் உங்களிடம் ஒன் டைம் பாஸ்வேர்டு எதுவும் கேட்க மாட்டேன். ஆனால் உங்களது வங்கிக் கணக்கிலுள்ள கடைசி நான்கு எண்களை மட்டும் கூறுங்கள்' என்று தெரிவித்திருக்கிறார். இதில் எதுவும் ஆகிவிடப்போவதில்லை என்று நினைத்து தனது வங்கிக் கணக்கின் கடைசி நான்கு எண்களை மட்டும் தெரிவித்தார். அவர் சொன்ன அடுத்த சில நிமிடங்களில் ஸ்வேதாவின் வங்கிக் கணக்கிலிருந்து 24,999 ரூபாய் எடுக்கப்பட்டிருப்பதாக செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சியான ஸ்வேதா அந்த போன் நம்பருக்கு மீண்டும் தொடர்புகொள்ள முயன்றார். ஆனால் முடியவில்லை.

ஷீர்டி சாய்பாபா கோயில் பெயரில் ஆன்லைன் பண மோசடி-பக்தர்கள் உஷாராக இருக்க கோயில் நிர்வாகம் எச்சரிக்கை!

ஸ்வேதா ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் உண்மையான இணையதள வாடிக்கையாளர் எண்ணைத் தேடிக்கொண்டிருந்தார். ஆனால் அதற்குள் மர்ம ஆசாமி 1.99 லட்சத்தை ஸ்வேதாவின் வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துவிட்டான். இந்தச் சம்பவம் முதல் நாள் மாலையில் தொடங்கியது. மறு நாள் காலையில் ஸ்வேதா தனது வங்கிக்குச் சென்று புகார் செய்தார். ஆனால் அவர்கள் புகாரை ஏற்க மறுத்து போலீஸில் புகார் செய்யும்படி கேட்டுக்கொண்டனர். உடனே காந்திவலி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் சைபர் பிரிவில் புகார் செய்யும்படி கேட்டுக்கொண்டனர். அவரும் அதே போன்று புகார் செய்தார். உடனே விரைவாக விசாரணையைத் தொடங்கிய உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா பகல் தலைமையிலான குழுவினர், ஸ்வேதாவின் வங்கிக் கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட பணம் இதுவரை சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படாமல் இருந்ததைக் கண்டறிந்தனர். உடனே அந்த பரிவர்த்தனையை முழுமை பெறாமல் முடக்கினர். சம்பவம் நடந்த 36 மணி நேரத்துக்குள் ஸ்வேதாவிடமிருந்து சென்ற பணம் மீண்டும் அவரது வங்கிக் கணக்குக்கே வந்துவிட்டது. இதனால் ஸ்வேதா போலீஸ் அதிகாரிகளை வெகுவாகப் பாராட்டினார். மோசடிக் கும்பலை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு