Published:Updated:

`கடைக்குப் போவதாகக் கூறிவிட்டுச் சென்றார்!’- மேற்கு வங்கத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

Representation image
Representation image

``இந்தப் பகுதியில் போலீஸார் ரோந்து வருவதில்லை சமூகவிரோதிகளின் நடமாட்டம் இந்தப் பகுதியில் அதிகம் காணப்படுகிறது" என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேற்கு வங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள பாலத்தின் கீழே இளம்பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் நேற்று கண்டெடுக்கப்பட்டது. இந்த மரணம் தெலங்கானா திஷா சம்பவத்தை நினைவுப்படுத்துவதாகக் கொதிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

சஃபாநகர் பகுதியைச் சேர்ந்த மக்கள்தான் சடலத்தை முதலில் பார்த்துள்ளனர். அப்பகுதியில் உள்ள நாய்கள் ஏதோ ஒரு பொருளுக்குச் சண்டை போட்டுக்கொண்டிருந்ததைக் கண்ட பொதுமக்களில் சிலர், அருகில் சென்று பார்த்துள்ளனர். அங்கு இளம்பெண்ணின் சடலம் பாதி எரிந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை
கொலை
மாதிரி படம்

இதுகுறித்துப் பேசியுள்ள காவல்துறை அதிகாரிகள், ``பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்தோம். பாதி எரிந்த நிலையில் இளம்பெண் ஒருவர் சடலமாக இருந்தார். சடலமாக மீட்கப்பட்ட பெண் 20 வயதுக்குட்பட்டவராக இருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம்.

ரத்த அடையாளங்கள் மற்றும் சில பொருள்களை அந்தப்பகுதியிலிருந்து கைப்பற்றியுள்ளோம். சடலம் பாதி எரிந்த நிலையில் இருந்தது. உடலில் ஆழமான காயங்களைக் காணமுடிந்தது. இரவே இந்தப் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம். இந்தப் பகுதியில் இருந்த விலங்குகளாலும் அந்தப்பெண்ணின் உடல் சேதமடைந்து இருந்தது. பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாரா என உறுதியாகத் தெரியவில்லை. பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே மற்ற விஷயங்கள் தெரியவரும்’’ என்றார்.

`கொலை.. தற்கொலை; கழுத்து  அறுபட்ட நிலையில் அறையில் கிடந்த இருவர்!’- கேரளாவில் நடந்த துயரச் சம்பவம்

சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி எனத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிறுமியின் சகோதரர் பேசுகையில், ``ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டுக்கு அருகே உள்ள கடைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. நாங்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம்’’ என்றார் கலங்கிய கண்களுடன்.

``இந்தப் பகுதியில் போலீஸார் ரோந்து வருவதில்லை சமூகவிரோதிகளின் நடமாட்டம் இந்தப் பகுதியில் அதிகம் காணப்படுகிறது" என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தெலங்கானா திஷா கொலை நடந்த இடம்
தெலங்கானா திஷா கொலை நடந்த இடம்

தெலங்கானாவில் திஷா என்ற மருத்துவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்துக் கொல்லப்பட்டார். இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் டிசம்பர் மாதத் தொடக்கத்தில் உன்னாவில் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்துக்குச் சென்ற இளம்பெண் 5 பேர் கொண்ட கும்பலால் தீ வைத்து எரிக்கப்பட்டார். தீக்காயங்களுடன் மீட்கப்பட்டவர் 90 சதவிகிதக் காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் நடந்த சில நாள்களில் மேற்கு வங்கம் மால்டா பகுதியில் மாந்தோப்பில் இளம்பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தச் சம்பவங்களைக் குறிப்பிட்டு தேர்தல் பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரேப் இன் இந்தியா எனக் குறிப்பிட்டுப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. `ராகுல் தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்' என பா.ஜ.க பெண் எம்.பி-க்கள் கொந்தளித்தனர்.

தொடர்ச்சியாக இளம்பெண்கள் கொல்லப்படுவது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு