Published:Updated:

சென்னை: மின்சார ரயிலில் மயக்கம்; பாலியல் வன்கொடுமை! - பெண்ணுக்கு ரயில்வே ஊழியர்களால் நேர்ந்த கொடூரம்

இளம்பெண் பாலியல் வன்கொடுமை
இளம்பெண் பாலியல் வன்கொடுமை ( representational image )

சென்னை, தாம்பரம் ரயில்வே மின்சார பணிமனைக்குச் சென்ற ரயிலில் மயங்கிக்கிடந்த இளம்பெண்ணை, இரண்டு ரயில்வே ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

சென்னை, தாம்பரத்தை அடுத்த பல்லாவரத்தைச் சேர்ந்தவர் ரம்யா (40) (பெயர் மாற்றம்). இவருக்குத் திருமணமாகி, ஒரு மகனும் இருக்கிறார். ரம்யா, சித்தாள் வேலையும், ரயிலில் பொருள்களை விற்கும் வேலையும் செய்துவந்தார். பல்லாவரத்தில் குடும்பத்தினரோடு குடியிருந்த ரம்யா, சில காரணங்களுக்காக செங்கல்பட்டை அடுத்த பரனூருக்குக் குடியிருப்பை மாற்றினார். தினமும் பரனூரிலிருந்து பல்லாவரத்துக்கு வேலைக்கு மின்சார ரயிலில் ரம்யா வந்து செல்வது வழக்கம். இந்தச் சூழலில் கடந்த 8-ம் தேதி வேலை முடிந்து ரம்யா, பரனூருக்குச் செல்ல பல்லாவரம் ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயிலில் ஏறியிருக்கிறார்.

சுரேஷ்
சுரேஷ்

ரயிலில் கூட்டம் இல்லாததால், இருக்கையில் படுத்துறங்கினார் ரம்யா. அவர் சென்ற ரயில் செங்கல்பட்டு வரை சென்றுவிட்டு மீண்டும் சென்னை கடற்கரைக்குத் திரும்பியது. தூக்கத்திலிருந்ததால் ரம்யா, பரனூரில் இறங்கவில்லை. சென்னை கடற்கரைக்கு வந்த மின்சார ரயில் மீண்டும் தாம்பரம் வரை வந்திருக்கிறது. பின்னர் அந்த ரயில் பராமரிப்பு பணிக்காக தாம்பரம் ரயில்வே பணிமனைக்குச் சென்றிருக்கிறது. அப்போதும் ரம்யா கண்விழிக்கவில்லை. அவரை, பணியிலிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரும், ரயில்வே ஊழியர்களும் கவனிக்கவில்லை.

பணிமனைக்குச் சென்ற மின்சார ரயிலை சுத்தம் செய்ய இரண்டு ரயில்வே ஊழியர்கள் வந்திருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொரு ரயில் பெட்டியாகச் சுத்தம் செய்து வந்தபோது ஒரு பெட்டிக்குள் ரம்யா படுத்து தூங்கிக்கொண்டிருந்திருக்கிறார். அவரைப் பார்த்ததும், ரயில்வே ஊழியர்களுக்கு சபல புத்தி ஏற்பட்டிருக்கிறது. தூங்கிக்கொண்டிருந்த ரம்யாவை வலுகட்டாயமாக இருவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். அவர்களிடம் ரம்யா போராடித் தோற்றுபோயிருக்கிறார். பின்னர் தனக்கு நடந்த கொடுமை குறித்து 9-ம் தேதி காலையில் தாம்பரம் ரயில்வே போலீஸாரிடம் கூறியிருக்கிறார். ரம்யா கொடுத்த தகவலின்படி இரவு நேரத்தில் ரயில் பராமரிப்புப் பணியிலிருந்த ஊழியர்களிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது தன்னிடம் தவறாக நடந்தவர்களை ரம்யா அடையாளம் காட்டியிருக்கிறார்.

சென்னை: 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - ஆண் நண்பருடன் சிக்கிய பெண்!
அப்துல் அஜிஸ்
அப்துல் அஜிஸ்

இதையடுத்து அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்களின் பெயர் சுரேஷ் (30), அப்துல் அஜிஸ் (30) எனத் தெரியவந்தது. இவர்கள் இருவரும் தற்காலிக ஊழியர்களாகப் பணியாற்றிவருகின்றனர். அவர்களும் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், இருவர் மீதும் வழக்கு பதிந்த போலீஸார் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது குறித்து தாம்பரம் ரயில்வே போலீஸார் கூறுகையில், ``புகார் கொடுத்த இளம்பெண் ரம்யாவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்திருக்கிறது. சம்பவத்தன்று ரயிலில் ஏறும்போதே ரம்யா மது அருந்தியிருக்கிறார். அதனால் போதையில் அவர் ரயிலிலேயே மயங்கிவிட்டார். அதனால் பரனூரில் அவர் இறங்காமல் ரயிலிலேயே பயணித்திருக்கிறார். வழக்கமாக பராமரிப்புப் பணிக்காக ரயில் பணிமனைக்குச் செல்வதற்கு முன் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார், ரயில்வே ஊழியர்கள் ஆய்வு செய்வார்கள். ஆனால், அவர்களும் ரம்யா ரயிலுக்குள் இருந்ததை கவனிக்கவில்லை. அதனால்தான் இரவுப் பணிக்கு வந்த சுரேஷும் அப்துல் அஜிஸிம் சேர்ந்து ரம்யாவைப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, இந்தச் சம்பவத்தை வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டி அனுப்பியிருக்கின்றனர். ரம்யா அளித்த புகாரின்பேரில் இருவரையும் கைதுசெய்திருக்கிறோம்" என்றனர்.

மின்சார ரயிலுக்குள் நடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு