பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில், மருத்துவர் போல வேடமணிந்த பெண் ஒருவர், நோயாளிகளை பரிசோதிப்பது போல அவர்களின் நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு, அசோக்நகரில் உள்ள செயின்ட் பிலோமினா மருத்துவமனையில் நோயாளிகளிடமிருந்து மதிப்புமிக்க பொருட்களை, மருத்துவர் வேடமிட்ட பெண் ஒருவர் திருடிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
35 வயதான பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 72 வயதான ஜிசரசாவின் அறைக்குள் நுழைந்து, அவரை பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறி, அவரின் மகனை அறையை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். அதனை நம்பிய அவரின் மகன், அறையை விட்டு வெளியேறியுள்ளார். மகன் வெளியே இருந்த நிலையில், 46 கிராம் எடையுள்ள சரசாவின் தங்க மோதிரம் மற்றும் சங்கிலியை கழற்றி எடுத்து கொண்டதுடன் அறையை விட்டு வெளியேறிய அப்பெண், நோயாளியை 45 நிமிடங்களுக்கு தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இதனை நம்பிய அவரின் மகனும் தன் அம்மாவை தொந்தரவு செய்யாமல் இருந்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து பரிசோதனை செய்ய மருத்துவமனையின் செவிலியர் அறையின் உள்ளே சென்றபோது தான், நடந்த இந்த சம்பவம் தெரிய வந்துள்ளது. செவிலியர் கூறிய பின்பே அந்தப் பெண், மருத்துவர் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, மகன் தன் தாயைப் பார்த்தபோது அவரது தங்க மோதிரம் காணாமல் போனதையும், தங்க செயின் எடுக்கப்பட்டு கவரிங் நகை மாற்றப்பட்டதையும் கண்டுபிடித்தார். மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக பாதிக்கப்பட்டவரின் மகன் ரமேஷ்குமார், அசோக்நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரை அடுத்து அதே நாளில் இதேபோன்று மற்றொரு நோயாளியான கோமல் (58) என்பவரின் நகையும் திருடி போயுள்ளது. சரசாவின் நகையைத் திருடும்போது பயன்படுத்திய முறையைப் பயன்படுத்தி கோமலிடமிருந்தும் விலைமதிப்பற்ற பொருட்களை திருடியுள்ளார் அந்தப் பெண்.
காவல்துறையில் இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து சந்தேகப்படும் நபரை அடையாளம் காணவும், அவரைக் கண்டுபிடிக்கவும் காவல்துறையினர் தற்போது சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.