திருத்தணி: அமாவாசை பூஜை; புதையலுக்காகக் குழந்தைகளை நரபலி கொடுக்க முயன்ற பெண் மந்திரவாதி

திருத்தணியில் புதையலுக்காகக் குழந்தைகளைப் பெண் மந்திரவாதி ஒருவர் நரபலி கொடுக்கப்போவதாக வந்த தகவலின் அடிப்படையில் அரசு அதிகாரிகள் குழந்தைகளை மீட்டு விசாரித்துவருகின்றனர்.
திருத்தணி அருகே புச்சிரொட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயந்தி (34). இவர், திருத்தணி பொதட்டூர்பேட்டையில் குடியிருந்துவருகிறார். ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் புச்சிரொட்டிப்பள்ளி கிராமத்திலிருக்கும் வீட்டுக்கு வந்து நள்ளிரவில் ஜெயந்தி பரிகார பூஜைகளைச் செய்வதை வழக்கமா வைத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. மந்திரவாதியான ஜெயந்தியிடம் குறி கேட்க, அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்வதுண்டு. இந்தநிலையில், ஜெயந்தி தன்னுடைய மூன்று குழந்தைகளை அமாவாசை அன்று நரபலி கொடுக்கப்போவதாகத் தகவல் பரவியது.

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், ரகசியமாக திருத்தணி வருவாய்த்துறை அதிகாரி மற்றும் திருத்தணி காவல்துறை, மாவட்ட சமூகநல அதிகாரி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். அதனால் அதிகாரிகள், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். வீட்டிலிருந்த ஜெயந்தி மற்றும் அவரின் மூன்று குழந்தைகளிடமும் அதிகாரிகள், போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து ஆக்ஷனில் களமிறங்கிய அதிகாரிகள், போலீஸார் கூறுகையில், ``புதையலுக்காக அமாவாசை தினத்தன்று தன்னுடைய மூன்று குழந்தைகளையும் ஜெயந்தி நரபலி கொடுக்கப்போவதாக எங்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உடனடியாக மாவட்ட சமூகநல அலுவலர் பிரிவில் பணியாற்றும் மைய நிர்வாகி ஞானச்செல்வி, ஊழியர்கள் சரண்யா, தாசில்தார் ஜெயராணி மற்றும் போலீஸாருடன் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தோம். அப்போது ஜெயந்தி தொடர்பான தகவல்கள் எங்களுக்குக் கிடைத்தன.

ஜெயந்திக்கு ப்ளஸ் டூ படிக்கும் மகள், ப்ளஸ் ஒன் படிக்கும் மகள், 10-ம் வகுப்பு படிக்கும் மகன் என மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். பெண் மந்திரவாதியான ஜெயந்தியின் வீட்டில் புதையல் இருப்பதாகவும், அதை எடுக்கக் குழந்தைகளை ஜெயந்தி நரபலி கொடுக்கப்போவதாகவும் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதனால் மூன்று குழந்தைகளை மீட்டு திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்திருக்கிறோம். ஜெயந்திக்கு கவுன்சலிங் அளிக்கப்பட்டுவருகிறது" என்றனர்.
புதையலுக்காகக் குழந்தைகளை பெற்ற தாயே நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் திருத்தணி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.