Published:Updated:

திருமணம் மீறிய உறவு; கணவரின் அக்காவை விருந்துக்கு அழைத்து கொள்ளை! 7 மாதங்களுக்குப் பிறகு பெண் கைது

கொள்ளையடித்த நகையின் ஒரு பகுதியை விற்று, பபினைப் புதிதாக வீடு கட்டும்படி கூறியிருக்கிறார் ஷர்மிளி மோள். பின்னர் அவர் வீட்டுக்கு அடிக்கடி சென்று அவருடன் தனிமையில் இருந்திருக்கிறார் ஷர்மிளி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கன்னியாகுமரி மாவட்டம், சேரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பேபி சுதா (44). இவர் நாகர்கோவிலிலுள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்த்துவருகிறார். இவரின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவருகிறார். பேபிசுதா தன்னுடைய இரண்டு மகள்களுடன் சேரமங்கலத்திலுள்ள தனது வீட்டில் வசித்துவருகிறார். கடந்த ஜனவரி மாதம் 26-ம் தேதி பெத்தேல்புரம் பகுதியில் வசிக்கும் தன்னுடைய தம்பி சுதர் என்பவரின் மனைவி ஷர்மிளி மோள், பேபிசுதாவை தங்கள் ஊரில் சர்ச் திருவிழா நடப்பதாகவும், வீட்டுக்கு விருந்துக்கு வரும்படியும் அழைத்திருக்கிறார்.

தம்பி மனைவியின் அழைப்பின் பேரில் பேபிசுதா தனது வீட்டைப் பூட்டிவிட்டு இரண்டு மகள்களுடன் ஷர்மிளிமோள் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்குள்ள தேவாலயத் திருவிழாவில் கலந்துகொண்டு விருந்து முடித்து ஜனவரி 28-ம் தேதி சேரமங்கலத்திலுள்ள தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார் பேபிசுதா. அப்போது அவரின் வீட்டின் பின்பக்கக் கதவுகள், அறைக் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அறையிலிருந்த பீரோவைத் திறந்து பார்த்தபோது அதிலிருந்த 50 சவரன் தங்க நகைகள் கொள்ளைபோனது தெரியவந்தது. இது குறித்து அவர் மண்டைக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

பபின்
பபின்

கொள்ளையர்களைப் பிடிக்க சப் இன்ஸ்பெக்டர் ஜாண் போஸ்கோ தலைமையில் தனிப்படை போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர். கடந்த ஏழு மாதங்களாகத் தனிப்படை போலீஸாருக்கு கொள்ளையடித்தவர்கள் பற்றிய எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. இதையடுத்து கொள்ளை நடந்த அன்று அந்தப் பகுதியில் ஆக்டிவாக இருந்த செல்போன் எண்களை ஆய்வு செய்தனர். அப்போது, பெத்தேல்புரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரின் செல்போன் சந்தேகத்துக்கு இடமான வகையில் நள்ளிரவில் அந்தப் பகுதியில் உபயோகத்தில் இருந்தது கண்டறியப்பட்டது.

அந்த வாலிபர் செல்போனிலிருந்து பெத்தேல்புரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரிடம் அடிக்கடி பேசிக்கொண்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் அந்த வாலிபரையும், அவருடன் இருந்த இளம்பெண்ணையும் மண்டைக்காடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடந்த விசாரணையில் அந்த வாலிபர் பெத்தேல்புரம் பகுதியைச் சேர்ந்த பபின் (27) என்பது தெரியவந்தது. ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரான பபின் ஆஸ்திரேலியாவில் வேலை செய்துவந்தார். கொரோனா நோய்த் தொற்றால் வேலை இழந்து ஒன்றரை வருடத்துக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்.

நகை கொள்ளை!
நகை கொள்ளை!
Representational image

ஊரில் வேலை இல்லாமல் சுற்றிய பபினுக்கு, பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுதர் என்பவரின் மனைவி ஷர்மிளி மோள் (24) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. கம்ப்யூட்டர் பட்டதாரியான ஷர்மிளி மோளின் கணவர் கட்டடப் பணி செய்துவருகிறார். அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை இருக்கிறது. பபினும், ஷர்மிளிமோளும் தனியாகப் பல இடங்களில் சுற்றிவந்தனர். இதனால் செலவுக்குப் பணம் இல்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஷர்மிளிமோள் தனது கணவரின் சகோதரி வீட்டிலேயே கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டி, பபின் மூலம் அதை செய்திருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "ஷர்மிளிமோள் தனது ஆண் நண்பர் பபினுடன் சேர்ந்து சேரமங்கலத்தில் வசிக்கும் தனது கணவரின் சகோதரி பேபிசுதா வீட்டில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டார். பேபி சுதா தங்க நகைகளுடன் நல்ல வசதியாக இருப்பதாகவும், வீட்டில் நகைகள் எங்கெங்கு இருக்கின்றன என்று தனக்குத் தெரியும் என்றும் சர்மிளிமோள் கூறியிருக்கிறார். ஷர்மிளி மோளின் திட்டத்துக்கு உடன்பட்டிருக்கிறார் பபின். அந்தத் திட்டத்தின்படி தன்னுடைய கணவரின் சகோதரி பேபி சுதாவை கடந்த ஜனவரி 26-ம் தேதி வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருக்கிறார் ஷர்மிளிமோள்.

ஷர்மிளி மோள்
ஷர்மிளி மோள்

கொள்ளையடித்த நகைகளை விற்று, அந்தப் பணத்தில் ஊட்டியில் சொகுசு வீட்டை வாடகைக்கு எடுத்து சில நாள்கள் தனிமையில் சந்தோஷமாக இருந்துவிட்டு ஊருக்குத் திரும்பியுள்ளனர். இது போன்று அடிக்கடி நேர்முகத்தேர்வு என ஷர்மிளிமோள் சென்றிருக்கிறார். ஒருகட்டத்தில் வெளியூர் செல்வதில் சிரமம் ஏற்பட்டதால், திட்டத்தை மாற்றியிருக்கிறார்கள். கொள்ளையடித்த நகையின் ஒரு பகுதியை விற்று, பபினைப் புதிதாக வீடு கட்டும்படி கூறியிருக்கிறார் ஷர்மிளி மோள். ஷர்மிளி மோளின் வீட்டுக்கு நான்கு வீடு தள்ளி, பபின் புதிய வீடு கட்டியிருக்கிறார். பபினின் வீட்டில் வயதான பாட்டியைத் தவிர வேறு யாரும் இல்லை. இதனால் ஷர்மிளி மோள், பபினின் வீட்டுக்கு அடிக்கடி சென்று இருவரும் சந்தித்துவந்துள்ளனர். இப்போது விசாரணையில் வசமாகச் சிக்கிக்கொண்டனர்" என்றனர். இப்போது இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு