Published:Updated:

திருவாரூர்: பக்கத்துவீட்டுப் பெண்ணின் சதித்திட்டம்!-தனியே வசித்துவந்த மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்

மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாரியம்மாளை, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார், நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலச்சந்திரன் உள்ளிட்டவர்கள் சந்தித்து, இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்களை கேட்டறிந்தனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் வீட்டில் தனியாக இருந்த வயதான பெண்மணியை அரிவாளால் கொடூரமாகத் தாக்கிவிட்டு, அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம், அந்தப் பகுதி மக்களைப் பெரும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.

கைதுசெய்யப்பட்ட இருவர்
கைதுசெய்யப்பட்ட இருவர்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி மேல முதல் தெருவில் வசித்துவருபவர் மாரியம்மாள் (60). இவரின் கணவர் சர்வானந்தம், 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இவருடைய மகள், திருமணமாகி கணவர் வீட்டில் வசிப்பதால், மாரியம்மாள் மட்டும் இங்கு தனியாக வசித்துவருகிறார். இந்த நிலையில், இரவு 8 மணி அளவில், தெருவில் அதிகமாக ஆள் நடமாட்டம் இல்லாத தருணத்தில் மாரியம்மாளின் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், அரிவாளால் மாரியம்மாளைக் கொடூரமாகத் தாக்கிவிட்டு அவரின் கழுத்தில் அணிந்திருந்த நான்கு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் எங்கோ தப்பி ஓடி மாயமாகியிருக்கிறார்.

அரிவாளால் வெட்டப்பட்டதால், உடலில் பயங்கரக் காயங்கள் ஏற்பட்டு, வலியால் மாரியம்மாள் அலறியிருக்கிறார். இவரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் ஓடிவந்து பார்த்தபோது, மாரியம்மாள் ரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கிறார். மர்ம நபர் அரிவாளால் கொடூரமாகத் தாக்கியதில், மாரியம்மாளின் தலை, காது, மூக்கு உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர வெட்டுக் காயங்கள் இருந்திருக்கின்றன. உயிருக்கு ஆபத்தான நிலையில் வெட்டுக் காயங்களுடன் கிடந்த மாரியம்மாளை மீட்டு, மன்னார்குடியிலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அங்கு மாரியம்மாளுக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. நான்கு பவுன் தங்கச் சங்கிலிக்காக, வயதான பெண்மணியை, கொஞ்சமும் இரக்கம் இல்லாமல், மர்ம நபர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அந்தப் பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.

திருவாரூர்
திருவாரூர்

மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாரியம்மாளை, திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார், மன்னார்குடி நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலச்சந்திரன் உள்ளிட்டவர்கள் சந்தித்து, இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்களைக் கேட்டறிந்தனர். இந்தக் கொடூரத் தாக்குதல், சங்கிலிப் பறிப்பு சம்பவம் தொடர்பாக மன்னார்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆய்வாளர் விஸ்வநாதன் தலைமையிலான டீம், இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்ட அந்த மர்ம நபரைத் தேடியது.

திருவாரூரில் தொடரும் கொள்ளை சம்பவங்கள்: தந்தையின் துக்கத்திற்கு சென்ற ஆசிரியை வீட்டில் துணிகரம்!

இந்த நிலையில்தான் மன்னார்குடி மீனாட்சி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த, 26 வயது இளைஞரான கார்த்திக், அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம்சாட்டப்படும் 37 வயதான ராணி இருவரையும் காவல்துறையினர் கைதுசெய்தனர். இது குறித்துப் பேசும் காவல்துறையினர், ``மாரியம்மாளின் பக்கத்து வீட்டில் வசித்துவருபவர்தான் ராணி. இவர் அங்கன்வாடி பணியாளராகப் பணியாற்றிவருகிறார். மாரியம்மாள் தனியாக வசித்துவருவதையும், தங்கச் சங்கிலி அணிந்திருப்பதையும் ஏற்கனவே தெரிந்துவைத்திருந்த ராணி, தனது ஆண் நண்பரான கார்த்திக்குடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டி, மாரியம்மாளைக் கொடூரமாகத் தாக்கிவிட்டு, தங்கசங்கிலியைப் பறித்துச் சென்றார்கள்” எனத் தெரிவித்தனர். நகையைப் பறித்து சென்ற கார்த்தி, தனது நண்பரான விக்னேஷிடம் மது போதையில் இது குறித்து உளறியிருக்கிறார். இதன் மூலமாகவே தகவல் வெளியில் கசிந்து, காவல்துறையினரிடம் கார்த்திக்கும் ராணியும் சிக்கியதாகச் சொல்லப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே, இது போன்ற பயங்கரக் கொள்ளைச் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்துவருகின்றன. இதற்கு காவல்துறையினர் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு