Election bannerElection banner
Published:Updated:

குழந்தைகளுடன் ஓடும் ரயிலில் இருந்து குதித்த தாய் - கணவர் இறந்த சோகத்தில் விபரீதம்

தற்கொலை
தற்கொலை ( Representational Image )

திருவள்ளூர் அருகே கணவர் இறந்த சோகத்தில் பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு வறுமையுடன் போராட முடியாமல் பரிதவித்து வந்த இளம்பெண் ஒருவர்  2 குழந்தைகளுடன் ஓடும் ரயிலிலிருந்து குதித்து  தற்கொலைக்கு  முயன்றுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமை அடுத்த சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் முனி லட்சுமி. இவர் கணவர் பெயர் கதிரேசன். முனி லட்சுமி - கதிரேசன் தம்பதிக்கு ஹர்ஷினி, வர்ஷினி என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில வருடங்களாக நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டு வந்த கதிரேசன் சில மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார்.

கணவரின் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் முனி லட்சுமி விரக்தியிலிருந்து வந்துள்ளார். வருமானம் ஈட்டி தரும் கணவர் இறந்து விட்ட நிலையில், இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு ஆதரவளிக்க யாருமின்றி முனி லட்சுமி மன விரக்தியிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தினர் யாரிடமும் சரியாகப் பேசாமல் லட்சுமி வீட்டிலேயே நாள் கணக்கில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், முனி லட்சுமி நேற்று காலை தனது இரு மகள்களையும் அழைத்துக்கொண்டு அக்கம்பக்கத்தினரிடம் புட்லூர் அங்காளம்மன் கோயிலுக்குச் சென்று விட்டு வருவதாகக் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்.

சென்னை: பெட்ரோல் பங்க்கில் மாற்ற முயன்ற 500 ரூபாய் கள்ள நோட்டு - தம்பியால் சிக்கிய அண்ணன்!

பட்டாபிராம் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் ரயில் நிலையத்திற்குப் பயணச்சீட்டு எடுத்துவிட்டு குழந்தைகள் இருவருடன் ரயிலில் ஏறிய முனி லட்சுமி கூட்டம் மிகுதியாக இருந்ததால் கிடைத்த இடத்தில் அமர்ந்து பயணித்து வந்துள்ளார். மின்சார ரயில் செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்தைக் கடந்து புட்லூர் ரயில் நிலையத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

அப்போது, இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்த முனி லட்சுமி தனது இரு மகள்களையும் அழைத்துக்கொண்டு ரயிலின் வாயிலுக்கு வேகமாக விரைந்துள்ளார். ஓடும் ரயிலில் குழந்தைகளுடன் இளம்பெண் ஒருவர் நுழைவு பாதைக்கு வருவதைக் கண்டு பயணிகள் அவரை தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளனர். ஆனால், பயணிகளின் கைகளைத் தட்டி விட்டு முனி லட்சுமி தனது மகள்களுடன் ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்துள்ளார்.

அதனையடுத்து பயணிகள் கூச்சலிட்டு சங்கிலியை இழுத்து வண்டியை நிறுத்தினர். உடனடியாக சம்பவம் தொடர்பாகத் திருவள்ளூர் இருப்புப்பாதை காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், தலையில் பலமாக அடிபட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 3 பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் காயங்களின் தீவிரம் மிகவும் அதிகமாக இருந்ததால், உயர் சிகிச்சைக்காகச் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். தற்போது அரசு பொது மருத்துவமனையில் முனி லட்சுமி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளும் மிகவும் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை: சித்த வைத்தியரின் மனைவி கொலை - சீடனாக அறிமுகமானவரால் நேர்ந்த விபரீதம்!

சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள திருவள்ளூர் காவல்துறையினர், பெண் தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளம்பெண் ஓடும் ரயிலில் இருந்து குழந்தைகளுடன் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு