Published:Updated:

திருச்சி: `நிரந்தர வேலைனு பணத்தை வாங்கினாங்க..!’ - முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோர்மீது பெண் புகார்

அதிமுக முன்னாள்அமைச்சர் விஜயபாஸ்கர்மீது புகார்
News
அதிமுக முன்னாள்அமைச்சர் விஜயபாஸ்கர்மீது புகார்

``பணம் வாங்கியிருப்பதெல்லாம் உண்மைதான். அமைச்சர் போனில் பேசினார் என்று அந்தப் பெண் சொல்கிறார். அது உண்மையா, இல்லையா என்று விசாரித்துவருகிறோம்” - திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.

நர்ஸ் வேலை வாங்கித் தருவதாகக் கூறி திருச்சி பெண்ணிடம் 4 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அ.தி.மு.க முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர்மீது திருச்சி ஐ.ஜி அலுவலகத்தில் குழந்தையைல் கையில் வைத்துக்கொண்டு பெண் ஒருவர் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புகார் அளித்த பெண் மார்கிரேட் ஜெனிஃபர்
புகார் அளித்த பெண் மார்கிரேட் ஜெனிஃபர்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அருண்பிரசாத். அவரின் மனைவி மார்கிரேட் ஜெனிஃபர். இவர் திருச்சி ஐ.ஜி அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்துவிட்டு, பின்பு பத்திரிகையாளர்களிடம் பேசினார். ``நான் நர்ஸிங் படித்திருக்கிறேன். வேலை தேடிக்கொண்டிருந்த நேரத்தில் எனக்கு ஏற்கெனவே அறிமுகமான லாசர், வீரமலை, சுப்பிரமணி ஆகியோர், `சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எங்களுக்கு நன்கு பழக்கமானவர். நாங்கள் எது கேட்டாலும் தட்டாமல் செய்யக்கூடியவர். அவரிடம் கேட்டால் வேலை கண்டிப்பாக வாங்கிக் கொடுப்பார்’ என்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

திருச்சி அரசு மருத்துவமனையில் நிரந்தர நர்ஸிங் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி என்னிடம் ரூ.4 லட்ச ரூபாய் கேட்டனர். அதி நம்பி நானும் வீட்டுப் பத்திரத்தை அடகுவைத்து பணத்தைக் கொடுத்தேன். அப்போது அவர்கள் எனக்கு வேலை கிடைத்துவிட்டது என ஒரு ஆஃபர் லெட்டரைக் காட்டினார்கள். வெளியில் விசாரித்ததில் அது தற்காலிக போஸ்டிங் என்பது தெரியவந்தது.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருடன் லாசர்
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருடன் லாசர்

`என்னங்க நிரந்தர போஸ்ட்டிங் வாங்கி கொடுப்பீங்கன்னு சொன்னீங்க... இப்ப தற்காலிக போஸ்ட்டிங்னு சொல்றாங்களே’ என்று கேட்டதற்கு, அவர்கள் உடனே `அமைச்சரிடம் போன்ல பேசு...’ என்று போனை போட்டுக்கொடுத்தனர். என்னிடம் அமைச்சர் என போனில் பேசியவர், `இன்னும் ஆறு மாதங்களில் வேலை உறுதியாகிவிடும். கவலைப்படாதீர்கள்’ என்றார். நானும் நம்பியிருந்தேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான் தொடர்ந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது அரசு மருத்துவமனை ஒப்பந்ததாரர் என்னிடம் வந்து `உங்களுக்குத் தற்காலிக பணிதான் அளிக்கப்பட்டுள்ளது. இனி வேலைக்கு வர வேண்டாம்’ என்றார். இது குறித்து லாசரிடம் கேட்டபோது, மீண்டும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றுவது தெரியவந்தது. பணத்தைத் திருப்பிக் கேட்டேன். ஆனால் அவர்கள் ஒன்பது மாதங்கள் ஆகியும் வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை.

திருச்சி போலீஸார்
திருச்சி போலீஸார்

இது குறித்து துவாக்குடி காவல் நிலையத்தில் மூன்று பேரின் மீது புகார் கொடுத்தேன். நடவடிக்கை இல்லை. எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தபோது பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு நானும் எனது கணவரும் சென்றபோது லாசர் புகாரை வாபஸ் வாங்கும்படி மிரட்டினர். `நீ எதுக்கு அமைச்சர் பேரைச் சொல்லிக் கொடுத்த... புகாரை வாபஸ் வாங்கு’ என்றும், இல்லையென்றால் குடும்பத்தோடு கொன்றுவிடுவதாகவும் மிரட்டினார்கள். உடனே திருவெறும்பூர் டி.எஸ்.பி-யிடம் புகார் அளித்தேன்.

அங்குள்ள போலீஸார் `அமைச்சர் பெயரை எழுதி கொடுக்காதீர்கள். மற்ற மூன்று பேர் பெயரையும் எழுதிக்கொடுங்கள்’ என்றனர். நானும் பணம் கிடைத்தால் போதும் என்று அமைச்சரின் பெயரைச் சேர்க்காமல் புகார் எழுதிக் கொடுத்தேன். ஆனால் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்தான் இன்று ஐ.ஜி-யிடம் பணத்தை மீட்டுத்தரவேண்டி புகார் அளித்துள்ளேன்" என்றார்.

திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன்
திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன்

இது குறித்து திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணிடம் பேசினோம். ``பணம் வாங்கியிருப்பதெல்லாம் உண்மைதான். அமைச்சர் போனில் பேசினார் என்று அந்தப் பெண் சொல்கிறார். அது உண்மையா, இல்லையா... இவர்கள் யாரைவது செட் பண்ணிவிட்டு `அமைச்சர் பேசுறார்’ என்று சொன்னார்களா என்பது குறித்து விசாரித்துக்கொண்டிருக்கிறோம். ஒருவரைக் கைதுசெய்திருக்கிறோம். இருவரைத் தேடிக்கொண்டிருக்கிறோம். கண்டிப்பாக அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்கும். அடுத்தவர்களை ஏமாற்றிப் பிழைக்க நினைப்பவர்களை ஒருபோதும் விட மாட்டேன்" என்றார் காட்டமாக.